ஆலயத்தில் தலவிருட்சம் எதற்காக தெரியுமா?

  தனலக்ஷ்மி   | Last Modified : 28 May, 2019 09:05 pm
do-you-know-the-talavirutcam-in-the-temple

இயற்கையை கடவுளாக வணங்கியவர்கள் இந்துக்கள் என்பதை அனைவரும் அறிவோம். ஆதிகாலத்திலேயே அறிவியலை ஆன்மிகமாக்கி பலன் அடைய செய்ததிலும் அதைக் கடைப்பிடிக்க வைத்த பெருமையும் நமது முன்னோர்களுக்கு முன்னோர்களையே சேரும். அவர்கள் கற்று தந்த ஆன்மிக பாதைகள் எல்லாம் விஞ்ஞானத்தோடு தொடர்பு கொண்டவையே என்று  இன்று ஆராய்ச்சியாளர்கள் வியந்துபோகிறார்கள்.

ஆலயங்களைக் கூட மனித உடலை மையமாக கொண்டு அமைத்தார்கள். நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க வைக்கும் வகையில் கருவறையை அமைத்தார்கள். ஆலய தரிசனம் மன அமைதியைத் தருகிறது என்பதோடு ஆலயங்கள் அனைத்தும் நான்கு வகையான சிறப்புகளைக் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் மற்றும் தலவிருட்சம் ஆகும். ஒவ்வொரு ஆலயங்களிலும் ஒவ்வொரு தலவிருட்சம் தனித்துவமாக இருக்கிறது. ஞானிகளும், முனிவர்களும், ரிஷிகளும் தலத்தின் முக்கியத்துவம் தலவிருட்சம் என்று கூறியிருக்கிறார்கள்.

இந்து மதத்தினர் மட்டுமே மரங்களை தெய்வமாக போற்றி பூஜிக்கிறார்கள். ஆலயம் தோறும் ஏதேனும் ஒரு தல விருட்சத்தை வைத்து அதை வழிபாடு செய்து வந்தார்கள். அதிலும் மாரியம்மனை வேப்பிலைக்காரி என்று அழைப்பதோடு வேம்பு இருக்கும் இடங்களெல்லாம் தெய்வம் இருக்கும் இடங்களாகவே பூஜிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். அரசமரம், ருத்திராட்சம் போன்றவையும் இதற்கு விதிவிலக்கல்ல. கோவில் தல வரலாறுகளில் காடு, மலை போன்ற இடங்களில் எழுந்தருளிய மூலவரைப் பற்றி குறிப்பிட்டிருக்கும். அதேப்போன்று அந்த இடங்களில் முக்கியத்துவம் பெற்ற மரமே தலவிருட்சமாக  வைக்கப்பட்டிருக்கும்.

சிவ சொரூபத்தைக் குறிக்கும் அரசமரமும், சக்தி சொரூபத்தைக் குறிக்கும் வேம்பு மரமும் இணைந்து இருக்கும் இடங்கள் சிவசக்தி உறையும் இடங்களாக வழிபடுகிறார்கள். அரசமரம் எல்லா தெய்வாம்சங்களையும் உள்ளடக்கி இருக்கிறது. சிவாகம விதிப்படி அரசமரத்தடியில் விநாயகர், நாகர், இஷ்ட தெய்வங்களை சிலைகளாக வடித்து வணங்கி வந்தார்கள். பெரும்பாலான அரசமரங்கள் விநாயகரோடு பக்தர்களின் கோரிக்கைகளைத் தீர்க்கும் இடமாக அமைந்திருக்கிறது.

கொன்றை, வில்வம், வன்னி, மகிழ், ஆல் போன்றவை சிவனுக்குரிய தல விருட்சமாகவும், சந்தன மரம், அத்திமரம் விஷ்ணுபகவானின் ஆலயங்களில் தல விருட்சமாகவும் விளங்குகிறது. இவை தவிர கடம்ப மரம், நெல்லி மரம், பலா மரம், மாமரம், பனை மரம், இலந்தை மரம், வேப்ப மரம் முதலியவையும் தலவிருட்சமாக விளங்குகின்றன. விருட்சம் என்பது மரத்தைக் குறிக்கும். மரங்கள் அடர்ந்து இருக்கும் பகுதியில் மரங்களில் கடவுள் தன்மை உண்டு என்று சொல்வார்கள்.

இயற்கையை வணங்கியவர்கள் இந்துக்கள். இயற்கையாக மரங்கள் தரும் மருத்துவக் குணங்களைப் பெறவும் பசுமையான மரங்கள் வருண பகவானுக்காக என்றும் போற்றி பாதுகாத்தார்கள். அத்தகைய சிறப்பு மிக்க  மரங்கள் தான் ஆலயங்களில் தலவிருட்சமாக மாறிற்று. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close