மெளனம் பூரணத்தைக் கொடுக்கும்…

  தனலக்ஷ்மி   | Last Modified : 28 May, 2019 09:02 pm
silence-will-give-full

அமைதி எப்போதுமே பேரானந்தத்தைக் கொடுக்கும் என்பார்கள். ஞானிகளும், ரிஷிகளும், யோகிகளும், மகான்களும் மெளனத்தால் சொல்ல வேண்டியதை உணர்த்தி விடுவார்கள். மெளனம் சம்மதத்துக்கு அறிகுறி என்று சொல்வோமல்லவா. பேசாமல் அமைதி காக்கும் அத்தகைய மெளனம் முழுமையானது. பரிபூரணம் வாய்ந்தது.

பரம்பொருளை கண்டவர்களுக்கு பேசுவதற்கு வார்த்தைகள் வராது. மெளனம் தான் மிஞ்சி நிற்கும். கோவில்களில் இறைவனைத் தரிசிக்கும் போது கூட  உண்மையான அன்பினால் எதையும் கேட்க தோன்றாது அமைதியாக பார்த்து தரிசித்து திரும்பி இருப்போம். ஆனால் மனம் முழுக்க துன்பத்துடன் சென்றாலும் திரும்பி வரும் போது மன நிம்மதியுடன் செல்வோம். 

மெளனத்தின் மகிமையை சீதாதேவி உணர்த்திய சம்பவம் இராமயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராமரும், சீதையும், இலட்சுமணரும் தாண்டகாரண்யத்தில் தங்கியிருந்தார்கள். அப்போது ஒரு ஆசிரமத்திலிருந்து வேறொரு ஆசிரமத்துக்கு சென்றார்கள். அப்படி கிளம்பும்போது இராமருடன் அவர் வயதை ஒத்த இளைஞர்களும் அவர்களுடன் சென்றார்கள். இராமபிரானின் மீது கொண்டிருந்த பக்தியால் அவர்கள் செல்லும் இடங்களில் வாழ்ந்த ரிஷி குமாரர்கள் மரவுரிதரித்து பார்ப்பதற்கு இராமபிரானைப் போன்றும், இலட்சுமணரைப் போன்றும் தோற்றம் கொண்டவர்களாக விளங்கினார்கள்.

ஒருமுறை தங்கியிருந்த ஆசிரமத்தில் இருந்த வேறொரு ஆசிரமத்துக்கு சென்றார்கள். அவர்கள் காட்டுவழியை அடைந்து அந்த ஆசிரமத்தைக் கடக்க வேண்டியதிருந்தது. அப்போது அந்த காட்டில் வசித்து வந்த பெண்களுக்கு அவ்வழியாக இராம, இலட்சுமணன் சீதாதேவியுடன் வருவது தெரிந்தது. 

அந்தக்காட்டில் இருந்த பெண்கள் அனைவரும் அவர்களது வருகையை ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். இராமனையும், இலட்சுமணனையும், சீதையையும் கண்டு மகிழ விரும்பினார்கள். அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தருணம் வந்தது. ஆனால் சீதையை மட்டுமே அவர்களால் அடையாளம் காண முடிந்தது. எஞ்சிய அனைவருமே பார்ப்பதற்கு இராமனைப் போல தோற்றத்தைக் கொண்டிருந்தார்கள். அதனால் அனைவரும் சீதையை சூழ்ந்துக் கொண் டார்கள்.

ஒரு இளைஞரைத் தனியாக நிற்க வைத்து ”இவர் தான் உங்களுடைய இராமரா?” என்று கேட்டார்கள். ”இல்லை” என்றாள் சீதை. இப்படியே ஒவ்வொரு இளைஞரையும் காண்பித்து இவரா? இவரா?  என்று கேட்டுக் கொண்டே வந்தார்கள். அடுத்தது இலட்சுமணரைக் காட்டி இவர்தான் இராமரா என்றார்கள். சீதை  ”இல்லை” என்று கூறினாள். 

இறுதியாக இராமபிரானை அவள்முன் நிறுத்தி இவர் தான் இராமரா என்று கேட்டார்கள். அதுவரை இல்லை இல்லை என்று பதில் சொல்லி வந்த சீதை எதையும் சொல்லாமல் மெளனம் காத்தாள். மெளனம் சம்மதத்துக்கு அறிகுறி ஆயிற்றே. அங்கிருந்த பெண்கள் மகிழ்ந்து இராமபிரானிடம் ஆசி பெற்றார்கள்.

சீதையைப் போன்றுதான் பக்தர்களும்  இறைவனிடம் என்னென்னெ வேண்டுமோ அவ்வளையும் தயக்கமின்றி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால் அவரை தரிசிக்கும் பேறு பெற்றுவிட்டால் எதுவும் பேசாமல் மெளனத்தையே மகிழ்ச்சியாக கடைப்பிடிப்பார்கள். ஏனெனில் மெளனம் பூரண ஞானத்தைக் கொடுக்கும். வாழ்வை முழுமையாக்கும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close