வர்தா புயலின் வீரியத்தால், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல ஆண்டு காலமாக நிழல் தந்து கொண்டிருந்த மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டன. நகர்ப்புறங்களில் ஏற்பட்ட இந்த பாதிப்பால், வரப்போகும் கோடை வெயிலின் தாக்கத்தை எண்ணி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதற்கு நிவாரணம் தேடும் வகையில் இயற்கை விவசாயி திரு. நாகராஜன், 90 நாட்களில் நிழல் தரக்கூடிய வகையில் மரங்களை வளர்ப்பதற்கான வழிமுறைகளை கூறியுள்ளார்.
பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்டி , அதை ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும். கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரம் மற்றும் குறைந்தளவு நீர் போதுமானது. நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாட்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாட்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும். வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.
விதை போட்டு 3 ஆண்டுகளில் வளரக்கூடிய மரங்கள், வெறும் 90 நாட்களில் வளரும் இம்முறையை வீட்டு மொட்டை மாடிகளில் எளிதாக பயன்படுத்த முடியும்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.