சிரிச்சது குத்தமா? கூண்டிலிருந்து தப்பி பெண்ணைக் கடித்த கொரில்லா

  arun   | Last Modified : 04 Jan, 2017 02:31 am

'கிங் காங்' என்ற ஹாலிவுட் படத்தில், ஒரு ராட்சத ஆண் கொரில்லா ஒரு மனித இனப் பெண்ணின் பார்வையால் காதல் வயப்பட்டு, அப்பெண்ணுக்காகப் பல துன்பங்களை அனுபவிக்கும். ஆனால், நிஜவுலகில் அதுபோன்ற ஒரு சம்பவம், வேறு மாதிரி முடிந்துள்ளது. 2007-ல் நெதர்லாந்தில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில், Bokito என்ற ஒரு கொரில்லா குரங்கு தனது கூண்டில் இருந்து தப்பி, ஒரு பெண் பார்வையாளரைப் பிடித்துத் தாக்கி, அவரை நூறுக்கும் மேற்பட்ட முறை கடித்துப் பின்னர் அங்கிருந்து சில அடி தூரத்தில் உள்ள உணவுவிடுதிக்குத் தூக்கிச்சென்று, பலரையும் பயமுறுத்தியது. தகவல் அறிந்து அங்கு வந்த பாதுகாவலர்கள், மயக்கமருந்து நிரம்பிய ஊசியைத் துப்பாக்கி மூலம் கொரில்லாவுக்குச் செலுத்தி அப்பெண்ணைப் பத்திரமாக மீட்டனர். பின்னர் நடத்திய விசாரணையில், அப்பெண் வாரத்திற்கு 4 முறையாவது Bokito-வை பார்க்க வந்து விடுவார் என்பதும், அவர் கண்ணாடிக் கூண்டின்மீது கைவைத்து Bokito-வின் கண்களைப் பார்த்து சிரிப்பார் என்பதும் தெரியவந்தது. மேலும், "கொரில்லாக்கள் மனிதர்களின் சிரிப்பை, நாம் அவற்றைப் பார்த்து கோபத்தோடு முறைக்கிறோம் எனத் தவறாக எடுத்துக் கொள்ளும். எனவே அவ்வாறு செய்யாதீர்கள்" எனப் பாதுகாவலர்கள் அவரைப் பலமுறை எச்சரித்துள்ளனர். அப்போதெல்லாம் அவர், "எனக்கும் அந்தக் கொரில்லாவுக்கும் ஒரு விசேஷ உறவு உள்ளது. நான் சிரித்தால், அதுவும் என்னைப்பார்த்துச் சிரிக்கிறது!" என்று பதில் கூறியுள்ளார். மனிதக்காதலைத் தாண்டிய புனிதமான காதல் எல்லாம் படத்துக்கு மட்டும்தான் செட் ஆகும் போல...

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close