அமெரிக்காவை தெறிக்க விட்ட "டைஃபாய்டு மேரி" யைத் தெரியுமா..?

  jerome   | Last Modified : 09 Feb, 2017 05:42 pm

இன்று உலகமே பார்த்து பயப்படும் அமெரிக்க வல்லரசிற்கு, ஒரு காலத்தில் மரண பயத்தை உண்டாக்கியவர் தான் டைஃபாய்டு மேரி. 1869 - ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று அயர்லாந்தில் குக்ஸ் டவுனில் பிறந்தவர் மேரி மலோன். இவர் பிறந்த குக்ஸ் டவுன் மிகவும் வறுமை பாதித்த பகுதியாக கருதப்பட்டது. சிறு வயதில் வறுமையின் பிடியில் சிக்கிய மேரி மலோன், தன்னுடைய 15-ஆம் வயதில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வசிக்கும் தன் மாமா வீட்டிற்கு சென்றார். அங்கு இருந்த மேரியை, சமையல் வேலைக்காக சார்லஸ் ஹென்றி வாரன் என்பவர் 1906 - ஆம் ஆண்டு தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அந்த ஆண்டு கோடை விடுமுறையை கோலாகலமாக கொண்டாட, வாரன் குடும்பத்தினர் மேரி மலோனையும் அழைத்துக்கொண்டு லாங் தீவிற்கு சென்றனர். (அன்னைக்கு ஆரம்பிச்சது, வாரன் குடும்பத்துக்கு ஏழரை.) விடுமுறையை சந்தோசமாக கொண்டாடிய வாரனின் மகளுக்கு முதலில் டைஃபாய்டு வந்தது. அதை, சரி செய்வதற்குள், இன்னொரு மகளும், தோட்டக்காரனும் டைஃபாய்டால் பாதிக்கப் பட்டனர். குழம்பிப் போன வாரன், தன் நண்பர் ஜார்ஜ் சோபரை அழைத்து விசாரித்தார். தன் சோதனையை தொடங்கிய ஜார்ஜ், டைஃபாய்டிற்கு காரணமான கிருமி, மேரி மலோனிடம் இருந்து வருவதாக கண்டுபிடித்தார். பிறகு, மேரி யார்? அவர் எங்கிருந்து வந்தார்? என்ற விசாரணை தொடங்கியது. அப்போது தான், அதிர்ச்சியான விஷயங்கள் வெளி வந்தன. மேரி, வாரன் வீட்டிற்கு வேலைக்கு வருவதற்கு முன்னரே, பல இடங்களில் சமையல் வேலை செய்துள்ளார். அவர் வேலை பார்த்த இடத்தில் இருந்த 22 பேருக்கு டைஃபாய்டு பாதிப்பு இருந்துள்ளது. இதில், ஒரு சிறுமி உயிர் இழந்துள்ளார். இதையறிந்த ஜார்ஜ், அமெரிக்க மருத்துவ கவுன்சிலிற்கு தகவல் தெரிவித்து மேரியை சோதனை செய்ததில், அவருடைய மலத்தில் டைஃபாய்டு கிருமி இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. (வாரன் குடும்பத்த பிடிச்ச சனி, இப்ப மேரியை செலக்ட் பண்ணிடுச்சு) மேரியைப் பார்த்து ஒட்டுமொத்த அமெரிக்காவே பயந்தது. அன்றிலிருந்து மேரி மலோன் என்ற அவர் அமெரிக்க மக்களால் "டைஃபாய்டு மேரி" என்று வெறுப்போடு அழைக்கப் பட்டார். பல்வேறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மேரி, பிறகு வடக்கு பிரதர் தீவில் தனிமைச் சிறையில் அடைக்கப் பட்டார். சிறையில் இருக்கும்போது கூட அவரின் மலத்தை ஆய்வு செய்தனர். 163 தடவை சோதனை செய்ததில் 123 முறை அவரது மலத்தில் டைஃபாய்டு கிருமி இருப்பது கண்டறியப் பட்டது. 23 ஆண்டுகளுக்கும் மேலாக தனிமைச் சிறையில் இருந்த டைஃபாய்டு மேரி, 1938 ஆம் ஆண்டு நவம்பர் 11 - ல் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார். மேரி வாழ்ந்த கால கட்டத்தில் நியூயார்க் முழுவதும் சுமார் 3000 - 4500 பேருக்கு டைஃபாய்டு பாதிப்பில் இருந்தனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.