மார்ச்-27 சர்வதேச திரையரங்க தினம்

  jerome   | Last Modified : 27 Mar, 2017 02:08 pm
திரையரங்கம் என்றவுடன் எல்லோருடைய நினைவிற்கும் வருவது சினிமா தியேட்டர்கள் தான். ஆனால், அது மட்டுமே திரையரங்கம் கிடையாது. இன்று உலகளவில் வியாபார பூதமாய் பேருருக் கோலம் பூண்டு நிற்கும் சினிமாவிற்கு அடித்தளமிட்ட, மேடை நாடகங்கள் நடக்கும் இடங்கள் கூட திரையரங்குகள் தான். அனைவரும் அறிந்த உண்மையான உலக நாயகன் 'சார்லி சாப்ளின்' ல் தொடங்கி நம் நடிகவேள் 'எம்.ஆர்.ராதா' வரை, அவர்களை முழுமை பெற்ற கலைஞர்களாய் வார்த்தெடுத்தது இந்த மேடை நாடகங்கள் தான். கொரியா,பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நடந்துவரும் மேடை நாடகங்களுக்கு இன்றளவும் ரசிகர்கள் இருப்பது போல், இந்திய மேடை நாடகங்களுக்கும், நாடக நடிகர்களுக்கும் ரசிக பட்டாளங்கள் இருந்து வருகின்றனர். மனதின் உணர்வுகளை களைந்தெடுக்கும் மராத்திய நாடகம், நகைச்சுவைகளை வாரித் தெளிக்கும் குஜராத்தி நாடகம், நாட்டுப்புற வாழ்வியலை வெளிப்படுத்தும் ஹிந்தி மற்றும் பெங்காலி நாடகம் என வடக்கத்திய மொழிகள் அனைத்தும் தங்களுக்கான, தம் மக்களுக்கான அடையாளங்களை உலகெங்கும் பதித்துக் கொண்டிருக்க தமிழ் மேடை நாடகங்கள் மட்டும் மேற்கத்திய இதிகாசங்களை தழுவியே உள்ளன. இது சற்று கவலைப்பட வேண்டிய, அதே சமயம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் கூட. என்றோ சில சமயங்களில் மட்டும் தமிழ் புராணக் கதைகளும், சமூக அவலங்களை பிரதிபலிக்கும் விஷயங்களும் நாடகமாக உருப்பெறுகின்றன என்பதே சற்று ஆறுதலான ஒன்று. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களிலும், பாண்டிச்சேரியிலும் வாரந்தோறும் எங்கோ ஒரு மூலையில் மேடை நாடகங்கள் நடத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. இப்படி கவனிப்பாரற்று கிடக்கும் நாடகத்துறையை உலகறியச் செய்யும் முயற்சியாக மார்ச் 27-ல் சர்வதேச திரையரங்க தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்கான முயற்சி 1961-ல் சர்வதேச திரையரங்க அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டு யுனெஸ்கோவால் அனுமதியும் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் நவீன கூத்துப்பட்டறை, ஏவம், க்ரியா சக்தி, ஸ்ட்ரே ஃபேக்டரி, கட்டியக்காரி, மரப்பாச்சி, தியேட்டர்காரன் என சிறு சிறு மேடை நாடக அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. விடுதலை போராட்ட காலத்தில், வீரர்களின் மனதில் சுதந்திர வேட்கையை விதைத்த மேடை நாடகம், தெருக்கூத்து, வீதி நாடகம் இவையெல்லாம் மீண்டும் தளைத்தெழுந்தால் புதிய தமிழகம் பிறக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close