குறை நல்லது..!!

Last Modified : 01 Jan, 1970 05:30 am

நம் வாழ்வில் குறை இல்லா மனிதர்கள் இல்லை என்பதனை பார்த்திருப்போம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான குறைகள். உனக்கு என்ன குறை என்று கேட்டால், 'கை இல்லை, கால் இல்லை' என்று சொல்வதா? உடல் ஊனம் என்பது மட்டும் குறை என்று சொல்லிவிட முடியாது. நம்மில் பலர் மனதளவில் ஊனமுள்ளவர்களாக, குறையுள்ளவர்களாக வாழ்ந்து வருகிறோம். ஆனால், நம்மில் இருக்கும் இந்த குறைகளை வேறு விதத்தில் நிறைகளாக மாற்றும் பொழுது வாழ்வு முழுமை அடையும். அதற்கு உதாரணமாக, நான் படித்த கதையில் ஒரு பகுதியை பகிர்ந்துள்ளேன். ஒரு கார் விபத்தில் தன் இடது கையை இழந்திருந்த ஒரு பத்து வயது சிறுவன், 'ஜூடோ' என்ற தற்காப்புகலையைக் கற்றுக் கொள்ள ஆவலாக இருந்தான். இதனை அனுபவமிக்க ஜூடோ ஆசிரியரிடம் தனது ஆசையை தெரிவித்துள்ளான். அவனது ஊனத்தை பொருட்படுத்தாத ஆசிரியர் அவனுக்கு பயிற்சி அளித்துள்ளார். சில பல மாதங்களாக அச்சிறுவனுக்கு ஒரே ஒரு ஆக்கிரமிப்புப் பயிற்சியை மட்டுமே திரும்பத் திரும்ப மிக நுணுக்கமான முறையில் கற்றுத் தந்திருந்தார். இதில் தேறிய சிறுவன் வேறு பயிற்சிகளை கற்று தர வலியுறுத்தியும், 'வேறு எந்த பயிற்சியும் நீ கற்க வேண்டிய அவசியமில்லை' என்று கூறி விட்டார் ஆசிரியர். பின் அந்த வருடத்திய தேசிய ஜுடோ போட்டியில் அந்தச் சிறுவனைக் கலந்து கொள்ளச் செய்தார் அந்த ஆசிரியர். பெரிய பலசாலிகள், திறமைசாலிகள் கலந்து கொண்ட அப்போட்டியில் ஊனமான சிறுவன் அச்சத்துடன் கலந்து கொண்டான். அரை இறுதி போட்டி வரை, தான் கற்ற ஒரே வித்தை மூலம் வெற்றி வாகை சூடினான். இறுதிப் போட்டியில், நடுவர்கள் அவனுடைய இடது கை இல்லாத குறையையும், படும் சிரமத்தையும் கண்டு போட்டியில் இருந்து விலகிக் கொள்ள அனுமதி தருவதாகக் கூறினார்கள். அவனுடைய ஆசிரியரோ அதற்கு சம்மதிக்கவில்லை.தொடர்ந்த போட்டியில், தனது ஆக்கிரமிப்பு முறையைப் பயன்படுத்தி எதிராளியை செயலிழக்க வைத்து வெற்றி பெற்றான். பதக்கத்தைப் பெற்ற போதும் அவனுக்கு பிரமிப்பு நீங்கவில்லை. ஆசிரியரிடம் இதை பற்றி கேட்க, ஆசிரியர் சொன்னார். “அதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, நீ அந்த ஒரு பயிற்சியை முழுமையாக கற்று கொண்டாய். இரண்டாவது, இந்த ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட எதிராளிக்கு ஒரே வழி தான் இருக்கிறது. அந்த வழி ஆக்கிரமிப்பவரின் இடது கையைப் பிடித்துக் கொள்வதில் தான் இருக்கிறது.” இடது கை இல்லாதவன் ஆக்கிரமித்தால் அந்தப் பிடியில் இருந்து தப்பிக்க வேறு வழியே இல்லை. அந்த சிறுவனின் மிகப் பெரிய குறை மிகப் பெரிய பலமாகப் போய்விட்டது பாருங்கள். எனவே உடலின் குறைகளையோ, வசதி வாய்ப்புகளின் குறைகளையோ கண்டு தளர்ந்து விடாதீர்கள். குறைகளை மீறி வெற்றி பெற முதலில் தன்னிரக்கம் கொள்ளாதீர். 'எனக்கு இந்தக் குறை இருப்பதால் என்னால் இனி ஒன்றும் செய்ய முடியாது' என்று வீட்டில் ஓடுங்கி விடாதீர். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். குறைகளை கண்டு அஞ்சாமல் போராடுவோம், வெற்றி கொடியை ஏற்றுவோம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.