ஒரு புத்தகம், ஒரு குழந்தை, ஒரு ஆசிரியரால் கூட உலகை மாற்ற முடியும்! - மலாலா!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 12 Jul, 2017 09:47 pm
பாகிஸ்தானில், பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதைத் தலிபான்கள் தடுத்தனர். 12 வயது சிறுமி ஒருத்தி தலிபான்களின் இந்தச் செயலை எதிர்த்துப் பலமாகக் குரல்கொடுத்தாள். யாரும் தங்களை எதிர்க்கக் கூடாது என்று எண்ணிக்கொண்டிருந்தவர்களை ஒரு சிறுமி எதிர்க்கிறாள் என்றபோது, தலிபான்களுக்குக் கோபம் கொப்பளித்தது. கொலை மிரட்டல், அச்சுறுத்தல் என எதற்கும் அந்தச் சிறுமி அஞ்சவில்லை. ஒரு கட்டத்தில், அந்தச் சிறுமியின் தலையில் துப்பாக்கியால் சுட்டனர் தலிபான்கள். ஒழிந்தால்... என்று எண்ணிக்கொண்டிருந்தபோது, கிட்டத்தட்ட சாவின் விளிம்புக்கே சென்று, ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டும் உயிருடன் எழுந்தாள் அந்தச் சிறுமி. அவள்தான் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா. இன்றைக்கு மலாலாவுக்குப் பிறந்த நாள். மலாலாவின் ஒரு சில எழுச்சியூட்டும் மேற்கோள்களைப் பார்ப்போமா... ஒரு புத்தகம், ஒரு பேனா, ஒரு குழந்தை, ஒரு ஆசிரியரால் கூட இந்த உலகத்தை மாற்ற முடியும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். தலையில் துப்பாகியால் சுடப்பட்ட பெண் என்று அல்ல... துணிவுடன் எழுந்து போராடிய பெண் என்றே என்னை அனைவரும் நினைவுகூர விரும்புகிறேன். வாயை மூடிக்கொண்டிருக்கும்போதுதான், நம்முடைய குரலின் முக்கியத்துவத்தை நாம் உணர்கின்றோம். கல்வி என்பது அவர்களின் அடிப்படை உரிமை... எனவே அது அவர்களுக்குக் கிடைக்கச் செயலாற்றி வருகிறேன். கடைசிப் பெண் குழந்தை பள்ளிக்கு செல்வதை உறுதி செய்யும்வரை நான் என்னுடைய பணியை நிறுத்த மாட்டேன். நான் எனக்காகப் பேசவில்லை... பேச முடியாமல் தவிக்கும் மக்களுக்காகப் பேசுகிறேன். தங்கள் உரிமைக்காகப் போராடும் மக்களுக்காக, அமைதியாக வாழும் உரிமைக்காகப் போராடும் மக்களுக்காக, கவுரவத்துடன் தங்களை நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கும் மக்களுக்காக, சம உரிமை, வாய்ப்பு கேட்பவர்களுக்காக... கல்வி கற்கும் உரிமை வேண்டும் என்று கேட்பவர்களுக்காகப் பேசுகிறேன். வாழ்க்கை என்பது வெறும் ஆக்சிஜனை ஈர்த்து, கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவது அல்ல... நம்முடைய எதிர்காலத்தை இப்போதே உருவாக்குவோம்... அப்போது நம்முடைய கனவுகள் நாளை நிஜமாகும். எப்போதும் அமைதியாய் இரு... அனைவரையும் அன்பு செய்... இதைத்தான் என்னுடைய மனம் எப்போதுமே என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறது. கல்வி அறிவு பெறுவதால் மட்டுமல்ல... மனம், ஆன்மா ஆகியவற்றுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமே உலக அமைதியை ஏற்படுத்த முடியும். ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு சாலையிலும், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் அமைதி நிலவ வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. இதற்கு, ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை அளிக்க வேண்டும். என்னுடைய நாற்காலியில் அமர்ந்து, பள்ளியில் என்னுடைய நண்பர்களுடன் உட்கார்ந்து, என்னுடைய பாட புத்தகத்தைப் படிப்பது என்னுடைய உரிமை. ஒவ்வொரு மனிதனும் எப்போதும் மகிழ்வுற்றிருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close