அதிகரிக்கும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்! தீர்வு என்ன?

Last Modified : 09 Aug, 2017 06:13 pm

தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் தான் குற்றங்கள் குறையும் என பொதுவாக சொல்வார்கள். ஆனால் நம் நாட்டில் பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டாலும் அவை என்னமோ அதிகரித்து கொண்டே தான் செல்கின்றன. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்த நிலைமை பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் இடையே கலக்கத்தை உண்டாக்கி உள்ளது. சமீபத்தில் மக்களவையில் உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கை ஒன்று குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த அதிர்ச்சிகரமான உண்மை ஒன்றை வெளிக்காட்டி உள்ளது. தேசிய குற்ற ஆவண ஆணையம் அளித்துள்ள தகவலின் படி உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில், 2014-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் 1065 வழக்குகள் பதியப்பட்டு , 1158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 65 பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2015-ஆம் ஆண்டு 1544 வழக்குகள் பதியப்பட்டு, கைது செய்யப்பட்ட 1869 பேரில் 143 பேருக்கு மட்டும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது 2014-ஆம் ஆண்டை விட 144% அதிகமாகும். 2016-ஆம் ஆண்டு நிலவரப்படி 1583 வழக்குகள் பதியப்பட்டு 1866 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 214 பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய அனைத்தும் தமிழகத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விபரமாகும். புள்ளி விபர படி ஆண்டுக்கு ஆண்டு குற்ற செயல்கள், அதற்காக கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு தான் சென்றுள்ளது. காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விபரம் மட்டும் அரசிடம் இருப்பதாகவும், பதிவு செய்யப்படாத வழக்குகளின் எண்ணிக்கை இதை விட அதிகம் எனவும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இது போன்ற குற்ற செயல்கள் அதிகரிக்காமல் தடுக்க வேண்டும் என அவர்கள் அரசிடம் கோரிக்கையும் விடுத்துள்ளனர். குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுபவர்கள் பெரும்பாலும் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாவே இருக்கின்றனர். குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் அத்துமீறல்களில், 100 சதவீதத்தில் 15 முதல் 20% வரை மட்டுமே வெளிநபர்களால் நடத்தப்படுகின்றன. பெற்றோரின் நண்பர்கள், உறவினர்கள் போன்றோரே இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் பெற்றோரும் இது போன்ற குற்றங்கள் குறித்து புகார் அளிக்க முன் வருவதில்லை. மேலும் குடும்ப கவுரவம், குழந்தைகளின் எதிர்காலம் போன்றவற்றை காரணம் காட்டியும் பெற்றோர்கள் புகார் அளிப்பதில்லை. அழகான குழந்தைகள், வசதி படைத்த வீட்டு குழந்தைகள், மாற்று பெண் குழந்தைகளிடம் மட்டுமே இது போன்ற அத்துமீறல் சம்பவங்கள் நடைபெறும் என்பது போன்ற கூற்றுகள் மக்களிடம் வேரூன்றி காணப்படுகின்றன. ஆனால் 10 ஆண் குழந்தைகளில் 4 குழந்தைகள் இது போன்ற அத்துமீறல்களுக்கு ஆளாகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை. ஆண்கள் மட்டும்மல்லாது பெண்களும் கூட குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். பெரும்பான்மையான சமயங்களில் விவகாரம் முற்றிய பின்னரே தங்கள் குழந்தைக்கு நடந்த கொடுமை குறித்து பெற்றோர்களுக்கு தெரிகிறது. பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு, தங்களுக்கு நடக்கும் தீங்கு பற்றி தெரிவதில்லை. அதனை உணரும் போது அவற்றை எப்படி வெளிக்காட்டுவது என்றும் அவர்களுக்கு தெரிவதில்லை. இதனால் ஒரு வித மன அழுத்தத்திற்கு ஆளாகும் குழந்தைகளின் பழக்கவழக்கங்கள், செயல்பாடுகள் போன்றவற்றில் மாற்றம் ஏற்படும். இவற்றை கூர்ந்து கவனித்தாலே குழந்தைகளிடம் ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதை பெற்றோர் உணர்ந்து கொள்ளலாம். ஒருவேளை பெற்றோர் நம்மை தவறாக நினைத்து விடுவார்களோ என்ற பயத்தில் கூட குழந்தைகள் இது போன்றவற்றை சொல்ல தயங்குவார்கள். இது போன்ற சூழ்நிலைகளில் பெற்றோர் தங்கள் கோபம், வருத்தம் போன்ற உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு அவர்களிடம் பொறுமையாக பேசுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு நம்பிக்கை கொடுங்கள். முன் பின் தெரியாத நபர்களிடம் பேசக் கூடாது, எதையும் வாங்க கூடாது என குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் பெற்றோர், பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் (Good Touch, Bad Touch) குறித்தும் கற்று கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான நம்பிக்கை வட்டத்தை உருவாக்கி கொள்ள அறிவுறுத்த வேண்டும். இன்றை டிஜிட்டல் யுகத்தில் நன்மை, தீமை எதுவாக இருந்தாலும் குழந்தைகளுக்கு எளிதில் எட்டும் தூரத்திலேயே அவை உள்ளன. இதனால் குழந்தைகளுக்கு இடையேயான பாலியல் அத்துமீறல்கள் கூட தற்போது அதிகரித்து வருகின்றன. இன்டர்நெட் மூலம் வயதுக்கு மீறிய விஷயங்களை அறிந்து கொள்ளும் குழந்தைகள் தங்களுக்காகவே பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில் பெரியவர்கள் தங்களிடம் அத்துமீறும் போது அதனை ஏற்றுக் கொள்ளவும் அவர்கள் தயங்குவதில்லை. எனவே மொபைல், கணினி போன்றவற்றை குழந்தைகள் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானால் அதுகுறித்து புகார் அளிக்க பெற்றோர் முன் வர வேண்டும். காவல் நிலையம் செல்ல வேண்டுமே என தயங்க வேண்டாம். இதற்காகவே 1098 எனும் குழந்தைகள் நல சேவை எண் உள்ளது. இதற்கு போன் செய்து உங்கள் புகார்களை தெரிவிக்கலாம். அதன் பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் அவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். இது போன்ற வழக்குகளில் குழந்தைகளின் நலனே பிரதானமாக எடுத்துக் கொள்ளப்படும் எனவே உங்கள் குழந்தைகள் குறித்த அனைத்து தகவல்களும் ரகசியமாக பாதுகாக்கப்படும். பெற்றோர்கள் புகார் கொடுக்க தயங்குவதே இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு பலமாக அமைந்து விடுகிறது. எனவே நண்பர்கள், உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். குழந்தைகள் நலனே பெற்றோருக்கு முக்கியம் என்பதை செயலில் காட்ட தவறாதீர்கள்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.