கிருபானந்த வாரியார் - பிறந்தநாளில் சில சுவாரசிய தகவல்கள்

Last Modified : 25 Aug, 2017 07:35 am

சுவாரஸ்யமான எளிய நடையில் ஆன்மிகக் கருத்துகளை பரப்பிய திருமுருக கிருபானந்த வாரியார் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூரில், செங்குந்த வீர சைவ மரபில் வந்த மல்லையதாசர் - கனகவல்லி தம்பதியருக்கு நான்காவது குழந்தையாக பிறந்தார். இவரது தாயார் கனகவள்ளி முருகப்பெருமானின் பல நாமங்களில் ஒன்றான “கிருபானந்த வாரி” எனும் பெயரை இவருக்கு சூட்டினார். "கிருபை" என்றால் கருணை என்றும், "ஆனந்தம்" என்றால் இன்பம் என்றும், "வாரி" என்றால் பெருங்கடல் என்றும் பொருள். வாரியாரின் தந்தை மல்லையதாசர் ஒருநாள் சொற்பொழிவு ஒன்றுக்குப் போக முடியாத நிலை, தந்தைக்குப் பதிலாக அந்தச் சொற்பொழிவிற்கு வாரியார் சென்றார். சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், “மல்லையதாசர் சொற்பொழிவிற்கு வருவதாக ஒத்துக் கொண்டு, தான் வராமல் இளம் வயது மகனை அனுப்பி வைத்திருக்கிறாரே” என்று வருத்தப்பட்டனர். வாரியார் அன்று முதன் முதலாக செய்த சொற்பொழிவைக் கேட்டவர்கள் அசந்து போய்விட்டனர். இந்த இளம் வயதில் இவ்வளவு அனுபவமா? என்று அவருடைய சொற்பொழிவைக் கேட்டவர்கள் மகிழ்ந்து போனார்கள். பதினெட்டு வயதில் சொற்பொழிவைத் தொடங்கிய வாரியாரின் பேச்சு, எளிமையான உரைநடையில் இருந்ததால் அதைப் படிப்பறிவே இல்லாதவர்கள் கூட எளிமையாகப் புரிந்து கொண்டார்கள். சிறுபிள்ளைகள் கூட இவருடைய சொற்பொழிவு என்றால் கேட்க விரும்புவார்கள். அவ்வளவு எளிமையாக இருக்கும். சொற்பொழிவில் அதிகமான நகைச்சுவைகள் அர்த்தத்துடன் இருக்கும். குழந்தைகளுக்கு தாயின் பெயரை முதலெழுத்தாகப் போட வேண்டும் என்பதை முதன்முதலாகக் கூறியவர் இவர்தான். எம்.ஜி.ஆருக்கு பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை சூட்டியது இவர்தான். ஆன்மிக அறப்பணிகளுக்காக ஏராளமான விருதுகள் பெற்றவர். இவருக்கு சென்னை தமிழிசை மன்றம் இசைப் பேரறிஞர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. வாழ்நாள் முழுவதும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் மூலம் பக்தி நன்னெறியை மக்களிடையே வளர்த்தார். சிவனருட்செல்வர், கந்தவேல் கருணை, ராமகாவியம், மகாபாரதம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நூல்கள் 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். தியாகராஜ பாகவதரின் ‘சிவகவி’ படத்துக்கு வசனம் எழுதினார். துணைவன், திருவருள், தெய்வம் போன்ற திரைப்படங்களிலும் நடித்தார் செந்தமிழ் கடல் அருள்மொழி அரசு திருப்புகழ் ஜோதி என்றெல்லாம் போற்றப்பட்ட திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் 87வது வயதில் (1993) விமானப் பயணத்தின் போது மறைந்தார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close