'காலா' டூ கலிஃபோர்னியா : உலக நடன மேடையில் சென்னை பசங்க!

  சௌந்தரியா   | Last Modified : 26 Jun, 2018 03:54 pm

kaala-to-california-chennai-dance-team-represents-india-in-wod

பாட்டு, நடனத்தின் வழியாக அரசியல் பேசும் போது அதன் தாக்கம் அதிகமானதாகவே இருக்கும். அந்த வகையில் அட்டக்கத்தியில் 'கானா', மெட்ராஸ் படத்தில் 'பி-பாய்ஸ்' என இயக்குநர் பா.ரஞ்சித் கலைஞர்களை பயன்படுத்தி இருப்பார். சமீபத்தில் வெளியான 'காலா' படத்திலும் கூட ரஜினியுடன் 'ஹிப் ஹாப்' கலைஞர்கள் வருவார்கள். முக்கிய காட்சிகளில் வரும் அந்த கலைஞர்களில் சிலர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

ஓபிஎம் என்ற நடனக்குழுவை சேர்ந்த இவர்கள் 'நியூஸ்டிஎம்' உடன் காலா படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசினர். ஆடிஷன் முடிந்து காத்திருந்ததையும், பின் ரஜினி தங்களை பாராட்டியதையும் பற்றி உற்சாகத்துடன் தொடங்கினார் அந்த குழுவை சேர்ந்த சிந்து. "காலா படத்தில் நடிக்க ஆடிஷனுக்கு சென்ற போது அங்கிருந்த பலர் முன்னரே பார்த்த முகமாக இருந்தனர். ஆடிஷன் முடிந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் அழைப்பு வராததால் நானே ஃபோன் செய்து கேட்டேன். ஸ்டூடியோவிற்கு வரசொன்னார்கள். பின் நான் செலக்ட் ஆகிவிட்டதாக கூறினார்கள். படப்பிடிப்புக்கு முன் ரஞ்சித் சார் அலுவலகத்தில் இருந்து பாடல்கள் எழுதினோம். பின்னர் படப்பிடிப்பு தொடங்கியது. ரஜினி சாருக்கு முன் அறிமுகப்பாடலில் ஆடினோம். அதனை பார்த்து நாங்கள் சென்னையில் இருந்து வந்தவர்களா? என்று ஆச்சர்யப்பட்டார் ரஜினி" என்றார். 

காலாவில் கவனம் ஈர்த்த இவர்கள் 4 ஆண்டுகளுக்கு முன்பு நடேசன் பார்க்கில் குழுவாக நடன பயிற்சி மேற்கொள்ள தொடங்கி உள்ளனர். பின் சைதாப்பேட்டையில் உள்ள நண்பரின் வீட்டை ஸ்டூடியோவாக மாற்றி அங்கு பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த குழுவில் சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்தும் நடனக்கலைஞர்கள் உள்ளனர். மொழி, பொருளாதாரம் என பல வேறுபாடுகள் இருந்தும்  நடனம் மட்டுமே அவர்களை ஒன்று சேர்ப்பதாக கூறுகின்றனர் இந்த இளம் கலைஞர்கள். 

இந்த குழு தற்போது உலகின் மிக பெரிய நடன போட்டியான வேர்ல்ட் ஆஃப் டான்ஸ் நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ள இருக்கின்றது. வேர்ல்ட் ஆஃப் டான்ஸ் என்பது நடனத்தின் ஆஸ்கர் போன்ற நிகழ்வு. இதில் கலந்து கொள்ள வேண்டும் என்பது ஒவ்வொரு நடனக்கலைஞரின் கனவு. இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பாக கலந்து கொள்ளும் முதல் குழு இது தான். இந்த நிகழ்ச்சி 2008ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஆடிஷன் வரை சென்ற இந்த குழு இந்த ஆண்டு ஜூலை 28ம் தேதி தொடங்கவிருக்கும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்று உள்ளது. 

இதுகுறித்து அவர்கள் கூறும் போது, "இந்த நிகழ்ச்சிக்கான தகுதிச் சுற்றில் 25 அணிகள் பங்கேற்றன. அதில் முதல் இடம் பிடித்து நாங்கள் தகுதிப்பெற்றோம். இந்த போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்" என்றனர். 

மேலும் மற்ற நாடுகளில் இருந்து வரும் அணிகளுக்கு அந்தந்த நாட்டு அரசாங்கமே நிதி வழங்கி போட்டிக்கு அனுப்புகின்றனர். ஆனால் இந்தியாவில் இது போன்ற ஒரு போட்டி நடப்பது பற்றியே யாருக்கும் தெரியவில்லை. தற்போது எங்கள் குழுவில் இருந்து 25 பேர் இந்த போட்டியில் பங்கேற்கிறோம். ஒவ்வொருவருக்கும் ரூ. 2 லட்சம் செலவாகும். எனவே 40 லட்சம் வரை எங்களுக்கு தேவைப்படுகிறது. இதற்காக நிதிகளை சேமித்து வருகிறோம். கார்ப்பரேட் நிறுவனங்களில் ஸ்பான்சர்ஷிப் கேட்பது, நடன பயிற்சி வகுப்புகள் என முடிந்தவற்றை செய்து வருகிறோம் என்கிறார்கள். ஆனால் 40 லட்சம் என்பது அரசின் ஆதரவு அன்றி பெரிய விஷயம் தான் என்று கூறுகிறார் சிந்து. 

இந்த வாய்ப்பின் மூலம் இந்தியாவில் நடனத்துறையை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லலாம் என்று கூறும் இவர்கள் அண்ணாநகர், முகப்பேர், வேளச்சேரி என சென்னையில் பல இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர். இதில் கலந்து கொள்ள நிவாஸ்: 98409 72919 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். 

மேலும் விவரங்களுக்கு : http://milaap.org/fundraisers/helpopm

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.