இந்திய வர்த்தக உலக ஜாம்பவானின் பிறந்த நாள் சிறப்புகள்

  Sujatha   | Last Modified : 28 Dec, 2017 08:32 am


உலக மக்கள் அனைவர்க்கும் மிகவும் பரிட்சயமான பெயர் அம்பானி. அவரை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்னும் மாபெரும் தனியார் நிறுவனத்தை உருவாக்கி, ‘இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் புகழ் பெற்றவர். அவருடைய பிறந்தநாளான இன்று அவரைப் பற்றிய சிறு தொகுப்பு.   

பெயர் : திருபாய் அம்பானி

இயற்பெயர் : தீரஜ்லால் ஹீராசந்த் அம்பானி

பிறப்பு: டிசம்பர் 28, 1932

இடம் : குஜராத் மாநிலம்

பணி: தொழிலதிபர்

இறப்பு: ஜூலை 06, 2002


பிறப்பு:

1932 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி குஜராத் மாநிலம் சோர்வாத் அருகிலுள்ள “குகஸ்வாடாவில்”, ஹீராசந்த் கோர்தன்பாய் அம்பானிக்கும், ஜமுனாபென் என்பவருக்கும் மகனாக ஒரு நடுத்தர வர்க்க மோத் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் தீரஜ்லால் ஹிராசந்த் அம்பானி.

திருமண வாழ்க்கை:

திருபாய் அம்பானி, கோகிலா பென் என்ற பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, முகேஷ் மற்றும் அனில் என இரண்டு மகன்களும், நிதா கோத்தாரி மற்றும் நினா சல்கோகர் என இரண்டு மகள்களும் உள்ளனர். 


தொழில் தொடக்கம்:

பள்ளி ஆசிரியராக, ஹீராசந்த் கிராமத்தில்  தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய அம்பானி, பிறகு தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஏமனுக்கு சென்று ஏ.பெஸி & கோ நிறுவனத்தில் சிறிது காலம் வேலைப் பார்த்தார். பத்தாண்டுகள் அங்கு பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அவர் இந்தியா திரும்பிய பின்னர், தன்னுடன் ஏமனில் வேலைப்பார்த்து வந்த சமபக்லால் தமானி என்பவருடன் இணைந்து, ‘மஜின்’ என்ற நிறுவனத்தை மஸ்ஜித் பந்தரில் உள்ள நரசினதா என்ற இடத்தில் ஆரம்பித்தார். இந்நிறுவனம் முதலில் பாலிஸ்டர் நூல் இறக்குமதியும், மிளகாய் ஏற்றுமதியும் செய்யத் துவங்கியது. ஒரு காலகட்டத்திற்க்கு பிறகு, சமபக்லால் தமானியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனியாகப் பிரிந்த திருபாய் அம்பானி அவர்கள், தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.

வெற்றிப் பயணம்:

1970 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், துணி வியாபாரத்தில் நல்ல லாபம் இருப்பதை உணர்ந்த அவர், 1977ல்  விமல் என்னும் பெயரில் துணிகளை விற்பனை செய்ய தொடங்கினார்.  இதனால்,  இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 55000-க்கும் மேற்பட்ட சிறு முதலீட்டாளர்கள், ரிலையன்ஸின் தொடக்கப் பொதுப் பங்கு வெளியீட்டை வாங்கினர். இதனால், நாளுக்கு நாள் சிறு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாக இது மாறியது. குறிப்பாக சொல்லப்போனால், 1982 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு, அவர் பங்கு சந்தையில் தன்னுடைய பங்குகளின் விலையை பன்மடங்கு அதிகப்படுத்தி, ‘பங்கு சந்தைகளின் முடிசூடா மன்னனாக’ விளங்கினார்.

தொடர்ந்து பெட்ரோலிய வேதிகள் உற்பத்தி, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, மின்சாரம், சில்லரை விற்பனை, துணி உற்பத்தி, உள்கட்டமைப்பு சேவைகள், மூலதனச் சந்தைகள், சரக்குப் போக்குவரத்து எனப் பல தொழில் அமைப்புகளை உருவாக்கி, மாபெரும் வளர்ச்சிப் பாதையில் தன்னுடைய வர்த்தக நிறுவனத்தை விரிவுபடுத்தினார்.


இறப்பு:

திருபாய் அம்பானி, 2002 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 6 ஆம் தேதி தன்னுடைய 69 ஆம் வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

திறமையும் உழைப்பும்தான் முக்கியமான விஷயம் எனக் கூறிய திருபாய் அம்பானி, இன்று சுயமாகத் தொழில் செய்யும் ஒவ்வொருவரின் முன்மாதிரியாக  திகழ்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.