கபிலர் குன்றின் வரலாறும், சிறப்புகளும் !

  Newstm Desk   | Last Modified : 11 Nov, 2018 05:23 pm

kabilar-history

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பேரூராட்சி அருகே அமைந்துள்ளது  கபிலர் குன்று. முதலில் கபிலரை பற்றி பார்ப்போம், சங்க காலத்து தமிழ்ப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர் கபிலர்.  

சங்க இலக்கியப் பாடல்களுள் மிக அதிக எண்ணிகையில் பாடல்களை இயற்றியவர்.  இவர் அகத்திணைகள் பலவற்றைப் பாடும் திறன்னுடையவர். கலித்தொகையில் குறிஞ்சிக் கலி, பத்துப் பாட்டில் குறிஞ்சிப் பாட்டு, ஐங்குறு நூற்றில் குறிஞ்சித் திணை பற்றிய நூறு பாடல்களை பாடியதோடு, இத்திணைபற்றி அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களிலும் மிகுதியான பாடல்களைப் பாடியுள்ளதால் குறிஞ்சி பாடிய கபிலர் என்றே போற்றப்படுகிறது.

கபிலர் குன்று வரலாறு:
கபிலர் குன்று  கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த இடம் என்று சொல்லப்படுகிறது.  மன்னன் பாரியின் மறைவுக்கு பிறகு, பாரிமகளிர் அங்கவை, சங்கவை என்பவர்களை திருக்கோவிலூர்பார்ப்பான் ஒருவனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு, தென்பெண்ணை ஆற்றில் உள்ள ஒரு குன்றில் வடக்கு பக்கம் அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார் என்பது வரலாறு.

திருக்கோவிலூரின் தென் பெண்ணையாற்றில் அமைந்துள்ள கபிலக்கல் தர்ப்போது "கபிலர் குன்று" என்று அழக்கப்படுகின்றது. கபிலர் குன்று என்னும் இடத்தில் கபிலர் உயிர்துறந்தார் என ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.  திருக்கோவிலூரில் உள்ள  வீரட்டானேசுவரர் கோயிலின் அருகில் தென்பெண்ணையாற்றின் நடுவில் "கபிலர்குன்று" உள்ளது. கபிலர்குன்று என இன்று அழைக்கப்பட்டாலும் "கபிலக்கல்" என்றே இந்த இடத்தைக் கல்வெட்டுக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கபிலர் குன்று   தற்போது தமிழக அரசின் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட இடமாகப் பராமரிக்கப்படுகிறது. கபிலர்குன்று என்பது தனித்த பாறையும் அதன்மேல் சிறுகோயில் அமைப்பில் கட்டப்பட்ட கட்டடமும் கொண்டது. கோயில் உள்ளே சிவலிங்கம் உள்ளது. செங்கல் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடத்தின் பழைமை மாறாமல் உள்ளது. கபிலர்குன்று 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டடபாணியில் அதன் அமைப்பு உள்ளதாக தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். கோயிலின் மேல்பகுதியில்  நான்கு பக்கமும் கடவுள் சிற்பங்கள் தெரிகின்றன. சற்று உற்று நோக்கினால் அச்சிலையின் மேல்பகுதியில் இரண்டு ஆண் உருவங்களும், இரண்டு பெண் உருவங்களும் தெரியும். பெண் உருவங்களின் முகம் பொலிவுடன் காணப்படுகின்றன. இப்பெண் உருவங்கள் அங்கவை, சங்கவையாகவும், ஆண் உருவம் அவர்களை மணந்தவர்களாகவும் கருதப்படுகிறது.  அதே வேளையில் பாரி, கபிலர் உருவங்கள் என்பதும் ஆராயப்பட வேண்டியுள்ளது. 

கபிலர் பார்ப்பனர்களிடம் பாரிமகளிரை ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்து உயிர்விட்டார் என இலக்கியங்கள் குறிப்பிடும்பொழுது.  திருக்கோவிலூர் வீரட்டானேசுவரர் கோயிலின் கருவறையின் வடபுறச்சுவரில் உள்ள முதலாம் இராசராசசோழனின் காலத்துக் கல்வெட்டானது கபிலர் தீயில் இறங்கி உயிர்நீத்தார் என்கிறது. அதேபோல்  வீரட்டானேசுவரர் கோயிலின்  பெருமையைச் சொல்லும்பொழுது கோயிலின் அருகே உள்ள பெண்ணையாற்றில் உள்ள கபிலக்கல்லில் கபிலர் உயிர்நீத்தார் எனவும் கூறுகிறது. ஆகையால் கபிலர் குன்றை துள்ளியமாக எக்காலத்தைச் சார்ந்தவை என இதுவரை கணக்கிட முடியவில்லை.

கபிலர் குன்று தற்போது :
தற்போது அக்குன்றின் மேல் சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு மக்களால் வணங்கப்பட்டு வருகிறது. இக்குன்றின் உச்சியை அடைய ஒருவர் மட்டும் செல்லக்கூடிய படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கபிலர் குன்று தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சரியான முறையில் பராபமரிப்பின்றி காணப்படுகிறது.

- இளங்கோ

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.