பராமரிப்பின்றி கிடக்கும் கன்னியாகுமரி உதயகிரிக் கோட்டை !

  இளங்கோ   | Last Modified : 15 Nov, 2018 05:30 pm

kanyakumari-s-udhayagiri-fort

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புடைய கோட்டை  உதயகிரிக் கோட்டை..  இக்கோட்டை, திருவனந்தபுரம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புலியூர்க்குறிச்சியில் உள்ளது. இது கி.பி 1600களின் தொடக்கத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. பத்மநாபபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு திருவிதாங்கூர் அரசர்கள் ஆண்ட காலத்தில் இக்கோட்டை அவர்களுக்குப் பெரிய சொத்தாக அமைந்திருந்தது. 
இந்தக் கோட்டை பின்னர் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவால் ஆளப்பட்ட காலத்தில்,  இராணுவ தலைமை அதிகாரியாக பணியாற்றிய ஈஸ்டாசியஸ் டிலெனாய் மேற்பார்வையில் 1741 - 44 ம் ஆண்டுகளில் மீண்டும் கட்டப்பட்டது. ஒரு காலத்தில் இக்கோட்டை இவரது பெயரைத் தழுவி தில்லானைக் கோட்டை  எனவும் அழைக்கப்பட்டது.


ஆரம்ப நாட்களில் இந்த கோட்டையில் ராணுவ திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. பின்னர் திப்பு சுல்தானுக்கு எதிராக பிரசாரம் செய்தவர்களை கைது செய்து இந்தக் கோட்டையில் சிறைப்படுத்தினர்.  90 ஏக்கர்  பரப்பளவை உள்ளடக்கியுள்ள இக் கோட்டையில் 200 அடி உயரமுள்ள ஒரு குன்று உள்ளது.  இப்பகுதி கோட்டையாக  தெரிவு செய்யப்படக் காரணமே இதன் உள்ளே உள்ள இந்த  பெரிய குன்றுதான்.  இக்கோட்டை,  கருங்கற்களால் இந்த குன்றைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கோட்டையில் துப்பாக்கிகளை வார்ப்பதற்கான வார்ப்பு உலை ஒன்றும் இருந்தது. 

உதயகிரி முற்காலத்தில் ராணுவ கேந்திரமாகவே இருந்திருக்கிறது.  நிரந்தர ராணுவத்தை திருவிதாங்கூர் உருவாக்கிக் கொண்டபோது, இராணுவத்தினரை  தங்கவைப்பதற்கான முகாமாக இது விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்குள் பெரிய கோயிலோ அரண்மனையோ இல்லை.  1741 ல்  நடந்த குளச்சல் போரில் டச்சுப்படையை மன்னர் மார்த்தாண்ட வர்மா முறியடித்தார். இதனால் டிலெனாய் உள்ளிட்ட டச்சு வீரர்கள் பிடிபட்டு உதயகிரி கோட்டை வளாகத்தில் சிறை வைக்கப்பட்டனர். அக்காலத்தில் உதயகிரி கோட்டையானது சிறைக்கூடமாக செயல்பட்டது.

சிறையில் இருந்த டிலெனாயின்  வீரமும், திறமையும்  பார்த்து மன்னர் மார்த்தாண்ட வர்மா, டிலெனாவை தனது தளபதியாக நியமித்தார். பின்னர் டிலெனாய் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை குமரி முதல் கொச்சி வரை விரிவடைய செய்தார்.  திருவிதாங்கூர் மன்னருக்கு விசுவாசமாக இருந்த டிலெனாய் 1777ல் காலமானார். இவரது குடும்பத்தின் நினைவிடங்கள் உதயகிரி கோட்டையில் உள்ள பழைய  மாதாகோவில் போன்ற  அமைபிலான கட்டடம் இடிந்து கூரையில்லாமல் குட்டிச்சுவராக நிற்கிறது.

அதற்குள் தான்  டிலெனாய் மற்றும் அவரது  தம்பி ஆகியோரின் சமாதிகள் உள்ளதாகவும்  திருவிதாங்கூரில் ஆதிக்கம் செலுத்திய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி, ரெசிடெண்ட் ஆட்சியைச்சேர்ந்த சில அதிகாரிகளின் சமாதிகளும், திப்பு சுல்தான் உள்ளிட்ட பல பிரபலமான மனிதர்களை இக்கோட்டையில் கைதியாக வைத்து இருந்தார்கள் என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் யார் என்பது பற்றி இதுவரை தெரியவில்லை. உதயகிரிக் கோட்டை தற்போது தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இங்கே பல்லுயுர்மப் பூங்காக்கலும் அமைந்துள்ளன.   கன்னியாகுமரி மாவட்டம் வருடம் முழுவதும் ஒரு மிதமான கால நிலையை கொண்டுள்ளதால்  உதயகிரி கோட்டை சுற்றிலும் பார்ப்பதற்கு இனிமையாகவும் காட்சி அளிக்கிறது.  தற்ப்போது தமிழகத்தின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் இத்தகைய பெருமை வாய்ந்த டிலெனாய் நினைவிடம் இன்று போதிய பராமரிப்பின்றி உள்ளது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.