தங்கம் வாங்க போறீங்களா? இத படிச்சிட்டு போங்க...

  Sujatha   | Last Modified : 12 Jan, 2018 11:07 am

எப்படியோ புத்தாண்டை நல்ல படியாக முடித்துவிட்டோம், அடுத்து பொங்கலுக்கு தயாராக வேண்டிய நேரம் வந்துவிட்டது. "தை பிறந்தால் வழி பிறக்கும்; தரணியிலே ஒளி பிறக்கும்" என்னும் சொல்லிற்கேற்ப மக்கள் பொங்கலுக்கு புது துணி வாங்குவது, புது நகை வாங்குவது என்று இருப்பார்கள். அப்படி தங்க ஆபரணம் வாங்கும் மக்களுக்கு சில டிப்ஸ்:

சேதாரம்: ஒவ்வொரு நகைகளின் டிசைனுக்கு ஏற்ப அதன் சேதாரம் மாறுபடும். குறைவான டிசைன் உடைய நகைகளுக்கு சேதாரம் குறைவாகவும், அதிக வேலைப்பாடுகள் கொண்ட நகைகளுக்கு சேதாரம் அதிகமாகவும் இருக்கும். இந்த சேதாரமானது ஒரு சில கடைகளில் 2% இருந்து தொடங்கும், சில கடைகளில் குறைந்தபட்ச சேதாரமே 9%ல் இருந்துதான் ஆரம்பிக்கும். (இது கடைக்கு கடை மாறுபடும்)

தர முத்திரை: பிஐஎஸ் (BIS – Bureau of Indian Standards), ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்கவும். பிஐஎஸ் என்பது தங்க நகைகளில் இந்தியத் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் தரச் சான்றிதழ். BIS முத்திரை என்பது கீழ்க்காணும் 4 அம்சங்களை உள்ளடக்கியது… * தங்கத்தின் தூய்மையைக் குறிக்கும் மூன்று இலக்க எண். உதாரணமாக, 916 என்றால், 91.6% தூய தங்கம் (22 காரட்). 875, 833, 792 என, தங்கத்தின் தூய்மைக்கு ஏற்ப இந்த மூன்று இலக்க எண் மாறுபடும். *`பிஐஎஸ்’ முத்திரை வழங்கிய சென்டரின் முத்திரை. * குறிப்பிட்ட நகைக்கு `பிஐஎஸ்’ முத்திரை வழங்கப்பட்ட ஆண்டைக் குறிக்கும் ஆங்கில எழுத்து (2000-ம் வருடத்தில் இருந்து `பிஐஎஸ்’ முத்திரை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வருடம் முத்திரை வழங்கப்பட்ட நகைகளில் ‘A’ என்ற எழுத்தும், 2001-ம் வருடம் முத்திரை வழங்கப்பட்ட நகைகளில் `B’ என்ற எழுத்தும், 2002-ம் வருடத்துக்கு ‘C’ என்ற எழுத்தும்… என இப்படியே ஒவ்வோர் ஆண்டுக்கும் ஆல்ஃபபெட் வரிசை நகர்ந்துகொண்டே வரும். நடப்பு ஆண்டுக்கு, அதாவது 2018-க்கு ‘S’ என்ற எழுத்து இருக்கும்). *நகை விற்பனையாளரின் முத்திரை.

ஆன்டிக் நகைகள்: பொதுவாக ஆன்டிக் நகைகளுக்கு சேதாரம் அதிகமாக இருக்கும். ஏறத்தாழ 25% – 30% வரை கூட செல்லும் என்பதால், நடுத்தர வர்க்கத்தினர் இதைத் தவிர்ப்பது நல்லது.

மெஷின் செயின் தவிர்ப்பது நலம்: மெஷினில் செய்யப்படும் செயின்கள் உடலில் காயங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, இதனை தவிர்ப்பது நலம். (எது மெஷின் கட் செயின், எது கையால் செய்யப்பட்டது என்பதை வாடிக்கையாளர்கள் கண்டறிந்து கொள்வது சற்று கடினம், உங்களுக்கு தெரிந்த கடை எனில் அவர்களிடமே அதுபற்றி கேட்டுத் தெளிந்து கொள்ளலாம்.)

காரட் - விளக்கம்: 24 கேரட் தங்கம் என்பது, 100% தூய தங்கம். இவற்றை நகைகளாகச் செய்தால் உடைந்துவிடும். எனவே, அதன் ஸ்திரத்தன்மைக்காக மற்ற உலோகங்கள் கலக்கப்படுகின்றன. 22 காரட் தங்கம் என்பது 916 நகைகள். (91.6% தூய தங்கம்). 22 காரட் தூய தங்கத்துடன், இரண்டு காரட் உலோகக் கலவை சேர்ந்துள்ளது. இப்படி கலந்தால்தான் தங்கத்தை நகையாக வார்க்க முடியும். இதில் 19, 18, 17 காரட் எனச் செல்லச் செல்ல, தங்கத்தின் அளவு குறைந்து, மற்ற உலோகத்தின் அளவு அதிகமாகும். மதிப்பும் குறையும்.

எடையில் கவனம்: என்னதான் நகையில் பார் கோடு இருந்தாலும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் எடையை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. எடை தராசில் அதை செக் செய்துவிட வேண்டியது மிகவும் முக்கியம். பில்லில் கொடுக்கப்பட்டிருக்கும் தொகையை அப்படியே கண்மூடி தனமாக செலுத்தி விடக்கூடாது. செய்கூலி, சேதாரம், கற்களுக்கான விலை என்று ஒவ்வொன்றையும் நிதானமாகப் பார்த்து, சந்தேகம் இருந்தால் நகைக்கடையில் கேட்டுத் தெளிவுபெற வேண்டும்.

கேடிஎம்’ தவிர்க்க: `கேடிஎம்’ (KDM) முத்திரை என்பது, நகைக்கடையால் வழங்கப்படும் உத்தரவாதம். இதில் நம்பக தன்மை சற்று குறைவு என்பதால் 'பிஐஎஸ்' முத்திரைக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.

பழைய நகைகள்: பழைய நகையை மாற்றி புது நகை வாங்கும்போது, தரத்தை காரணம் சொல்லி பழைய நகையின் எடையில் அதிக கிராம்களை கழித்துவிடுவார்கள். எனவே, எப்போதும் இதற்கு வாய்ப்பில்லாத வகையில் `916′ நகைகளை வாங்குவதுடன், வாங்கிய கடையிலேயே அதை மாற்ற வேண்டியதும் அவசியம். ஏனெனில் பழைய நகைகளை மாற்றும் போது அன்றைய விலையிலேயே எடுத்துக் கொள்வர்.

ரசீது அவசியம் எந்த பொருள் வாங்கினாலும் ரசீது அவசியம். அதிலும் குறிப்பாக தங்க நகைகளுக்கு மிக அவசியம். அப்போது தான் பின்னாட்களில் நகையிலோ அல்லது அதன் தரத்திலோ ஏதேனும் பிரச்சனை என்றால், ரசீதுடனேயே சம்பந்தப்பட்ட நகைக்கடையில் அதைக் கேட்க முடியும். ‘வரி வேண்டாம்’ என சிலர் ரசீது வாங்காமல் விட்டுவிடுவார்கள். இன்னும் சில கடைகளில் மதிப்பீட்டு ரசீதை பில் என்று சொல்லி கொடுப்பார்கள். அதனால் தவறாமல் பில் கேட்டு வாங்குவது நல்லது .

அப்புறம் என்ன... தங்க நகை எப்படி வாங்குறதுனு கத்துடீங்க.. உங்க பிரண்ட்ஸும் தெரிஞ்சிக்க ஷேர் பண்ணலாமே...!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.