நன்றி மறக்காதே - சிறு கதை

  Sujatha   | Last Modified : 22 Jan, 2018 06:25 am


தாமஸ் என்ற ஏழைச் சிறுவன் வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்று, அதில் வரும் வருமானத்தை வைத்து பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்தான். 

ஒரு நாள் அவன் கையில் காசு இல்லை, பசி கொடுமை அவனை வாட்டி வதைத்தது. அதனால் அந்த பக்கம் இருந்த ஒரு வீட்டின் கதவை தட்டி குடிக்க ஒரு டம்ளர் தண்ணீர் கேட்டான். அவனுக்குப் பசி என்பதை கவனித்த, அந்த வீட்டில் இருந்த பெண் உள்ளே சென்று, தண்ணீருக்கு பதிலாக ஒரு பெரிய டம்ளரில் பால் எடுத்து வந்து கொடுத்தாள். நிதானமாகக் குடித்து விட்டு, எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என விசாரித்தான்.

அதற்கு அந்தப் பெண் மென்மையாக, அன்பான செயலுக்கு பணம் எதுவும் வேண்டாம் என, என் தாயார் கற்றுக் கொடுத்திருக்கிறார்! என்று கூறினாள்.

தன் மனமார்ந்த நன்றியைக் கூறிவிட்டு அச்சிறுவன் வீடு சென்றான். அந்த வீட்டை விட்டுச் சென்றவுடன், தாமஸ்க்கு மனதளவில் திடமான நம்பிக்கை வந்தது. அத்துடன் கடவுளின் மீதும், மற்ற மனிதர்கள் மீதும் நம்பிக்கை பெருகியது, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் அதிகரித்தது.

பல வருடங்களுக்குப் பிறகு அந்த பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. உள்ளூர் மருத்துவர்கள் கைவிட்ட நிலையில், அங்கிருந்த பெரிய மருத்துவனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்த பல நிபுணர்கள் மருத்துவம் செய்ய முன் வந்தனர். அப்போது அந்த மருத்துவமனையில் சிறுவனாக இருந்த தாமஸ் மருத்துவராக பணிபுரிந்து கொண்டிருந்தார். அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க அவரையும் அழைத்திருந்தார்கள். அந்த பெண்ணை பார்த்தவுடன் அவரை அடையாளம் தெரிந்து கொண்டார் தாமஸ். தன் அறைக்குச் சென்று, எப்படியாவது அந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் எனத் தீர்மானம் செய்தார்.

பல நாட்களின் சிகிச்சைக்குப் பிறகு அந்த பெண்மணி உயிர் பிழைத்தார். மருத்துவமனை அதிகாரிகளிடம் மருத்துவப் பட்டியலை தன்னிடம் அனுப்பும்படி தாமஸ் கேட்டுக் கொண்டார். 

அந்த பட்டியலைப் பார்த்து விட்டு, ஏதோ எழுதி, தன் கையெழுத்தைப் போட்டார். பிறகு அந்த பெண்ணின் அறைக்கு அப்பட்டியல் சென்றது. பயந்து கொண்டே அவர் கவரைப் பிரித்தார். தன் வாழ்நாள் முழுவதும் இந்தக் கடனை அடைப்பதிலேயே முடிந்து விடுமே என நினைத்தார். அதில் எழுதியிருந்த வார்த்தைகள் அவர் கவனத்தைக் கவர்ந்தது. ஒரு டம்ளர் பால் கொடுத்ததால், சிகிச்சைக்குப் பணம் ஏதும் தர வேண்டாம்! என்று டாக்டர் தாமஸ் எழுதியிருந்தார்.

அந்த பெண்ணின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. அவர், உங்கள் அன்பு இந்த அளவுக்கு மனிதர்களின் மனதிலும், அவர்கள் செய்யும் காரியங்களிலும் பரவி உள்ளது என்று கடவுளுக்கு நன்றி கூறினார். 

நாம் மற்றவர்களுக்கு உதவி செய்தால், பிரச்சனை என்று நமக்கு வரும் பொழுது கட்டாயமாக யாராவது நமக்கு உதவி செய்ய முன் வருவார்கள். உதவி செய்தவர்களை நாம் ஒரு நாளும் மறக்கக்கூடாது. எதிர்பார்ப்பு எதுவுமின்றி மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.