கடைசி பெஞ்சுக்காரி - 1 | 'பாடி ஷேமிங்'கை எதிர்கொண்ட தருணம்!

  கார்தும்பி   | Last Modified : 11 Jul, 2018 02:08 pm

எட்டு வயது தொடங்கி பதின்மூன்று வயது வரையிலான காலத்தில் வகுப்பில் சுவாரசியமாக இருந்த டாப்பிக்குகள் பிராவும், சானிடரி நாப்கின்களும். இதே காலத்தில்தான் நான் இன்னும் சிறுமியாகத் தான் இருக்கிறேனா அல்லது பெண்ணாக மாறி விட்டேனா என்ற குழப்பமும் அதிகமாக இருந்தது. 'பிரா' தான் மாற்றத்தின் குறியீடு என நம்பினோம். முதல் முதலில் பிரா அணிந்தவளை பிரா அணியாதவர்கள் எல்லாம் மௌனமாக வஞ்சித்தோம். வகுப்பில் பெரும்பாலான சிறுமிகள் பெண்களாகிவிட்ட பிறகும், எனக்கு பிரா அணிவதற்கான தேவை வரவேயில்லை என்பது என் ஆளுமைக்கே உண்டான இழுக்கு என தீர்க்கமாக நம்பினேன்.

சானிடரி நாப்கின்கள் ஒரு பெஞ்சிலிருந்து இன்னொரு பெஞ்சிற்கு தாவும்போது என்னை விட்டுவிட்டு மற்றவர்கள் விளையாடுவதாக எனக்கு தோன்றியது. பீரியட் என யாராவது ஒருத்தி கடைசி பெஞ்சில் படுத்திருப்பதை பார்த்தால், அடுத்த நாள் நானும் வெறுமனே வயிற்றை பிடித்துக் கொண்டு கடைசி பெஞ்சில் படுத்துக்கொள்வேன். 

பதின்மூன்று வயது கழிந்த பிறகு தான், நான் எப்போதும் என்னை 'பெண்ணாக' உணர விரும்பியதே இல்லை, ஒரு சிறுமியின் துள்ளல் தான் என்னுடையது என கண்டறிந்தேன். அது சாதாரண கண்டறிதல் இல்லை. நான் எதிர்பார்த்தபடி, பழக்கமில்லாத ரகசியங்கள் எனக்கென கொடுக்கப்பட்டன. நானும் அவற்றை ரகசியங்களாகவே வைத்திருந்தேன். சில ரகசியங்கள் உங்களை வலிமையாக்கும், இந்த ரகசியங்கள் என்னை பலவீனப்படுத்த தொடங்கியது.

வீட்டிலிருந்தே தொடங்கிய பாடி ஷேமிங் (தோற்றத்தைக் கிண்டல் செய்தல் - Body Shaming) தான் 'பெண்ணாகிய' நான் முதன்முதலில் சந்தித்த சீண்டலாக இருக்கக் கூடும். முகத்திற்கு நேரே ஒருவரை பார்த்து, 'நீ அசிங்கமாக இருக்க' என்பது மட்டுமே தோற்றத்தைக் கிண்டல் செய்தல் இல்லை. 'அவ போட்ருந்த டிரெஸ்ஸ பார்த்தியா? கொஞ்சம் கூட ஃபிட்டே ஆகல' என புறம் பேசுவதும், ' கடலை மாவும் மஞ்சளும் மிக்ஸ் பண்ணி மொகத்துல தடவுனா நல்லா கலர் ஆயிடுவ' என ஒருவர் கேட்காமலே ப்யூட்டி டிப்ஸ் வழங்குவதும், 'மஞ்ச கலர் எல்லாம் உனக்கு செட் ஆகாது' என்பதும், 'நான் எவ்ளோ குள்ளமா இருக்கேன்... அவ அளவு ஹைட் ஆகணும்' எனும் சுய பச்சாதாபமும்தான் 'பாடி ஷேமிங்'.

ஊடக பெருவெளியின் ஸ்டீரியோடைப்புகளின் விளைவாக உற்பத்தியான பல பிற்போக்குதனங்களில் ஒன்று 'பாடி ஷேமிங்'. வெண்மையான பற்களுக்கு 'கோல்கேட்', 'இல்லாத தொப்பையை இரண்டு வாரங்களில் குறைக்க கெல்லாக்ஸ் சேலஞ்ச்', 'ரோமங்களை அகற்ற வீட்', 'வெண்மையான தோற்றத்திற்கு ஸ்கின் டோன்', 'உயரமாக வளர காம்பிளான்', 'முகப்பருக்களை அகற்ற ஹிமாலயாஸ் ஃபேஸ்வாஷ்' - இப்படியான விளம்பரங்கள் செய்யும் நேரடி பிரச்சாரம் 'நீங்கள் வெண்மையான பற்களுடன், இடை குறுகி, ரோமங்களை நீக்கி, உயரமாக, வெண்மையாக, முகப்பருக்கள் இல்லாத முகத்துடன் இருக்க வேண்டும்' என்பது. இந்த 'பார்பி' பொம்மை ஸ்டீரியோடைப்பில் இல்லாதவர்கள் எல்லாம் ஏதோ ஓர் அளவுகோலில் குறைந்தவர்களாக உணர வேண்டும் என்பதே பாடி ஷேமிங்-கின் நோக்கமாக இருக்க முடியும்.

எனக்கு என் கழுத்து எலும்புகள் துறுத்திக் கொண்டு நிற்பதாக சில காலத்திற்கு ஒரு இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் இருந்தது. நிறைய சாப்பிட்டு உடல் எடையை கூட்டினால், கழுத்துப் பகுதியிலும் சதை வரும் என கணக்குப் போட்டு சீஸ், சிக்கன், வெண்ணெய், முட்டை, கேக், ஐஸ்க்ரீம் போன்ற கலோரிக்கள் அதிகம் இருக்கும் உணவுகளை தேடித் தேடி சாப்பிட்டேன். இப்படி காஸ்ட்லியான உணவுகளுக்கு பொருளாதாரம் ஒத்துழைக்காத காரணத்திலும், முன்பை விட ஸ்டாமினா குறைந்து கொண்டிருப்பதாக உணர்ந்ததாலும் அந்த உணவு பழக்கத்தை தொடர முடியவில்லை. எனவே, கழுத்து எலும்பை மறைக்கும் ஆடைகளை மட்டுமே அணியத் தொடங்கினேன். இப்போதும் என்னிடம் இருக்கும் ஆடைகளில் எழுபது சதவிகிதம் கழுத்தை மறைப்பவையாகவே இருக்கும். கல்லூரியில் ஒரு புராஜெக்டிற்காக குறும்படம் ஒன்று எடுத்து சமர்பித்தபோது, அதை பார்த்த ஒருவர் 'கழுத்து அழகாக இருக்கிறது' எனச் சொல்லும் வரை எனக்கு என் கழுத்து அருவருப்பாகத்தான் இருந்தது.

நான் 'பேயிங் கெஸ்ட்'டாக தங்கியிருந்த வீட்டின் ஓனரின் உறவுப் பெண் அவள். அவள் பெயர் தனிம். தனிமிற்கு தட்டையான மார்பகங்கள். ஆண்கள் குழுமியிருக்கும் இடத்தை விட பெண்கள் கூடியிருக்கும் இடங்களில்தான் இரட்டை அர்த்த ஜோக்குகள் கரை புரண்டோடும். மார்பகங்களும், வாழைப்பழங்களும் சர்வ சாதாரணமாக பேச்சுபொருட்கள் ஆகிவிடும். அப்படியான சமயங்களில், வேறு ஒருவர் எதுவும் சொல்வதற்கு முன்னர் அவளே, 'நான் பிரா போட்டாலும் ஒண்ணுதான் போடலேன்னாலும் ஒண்ணுதான், '28 எல்லாம் ஒரு சைஸ்னு கடையில் சொல்ல வெக்கமா இருக்கு' என எதையாவது சொல்லி நகர்வாள்.

எனக்கு பள்ளியில் ஜூனியராக இருந்த மெர்சி, முகம் வெண்மையாக வேண்டும் என சில ஆம்வே தயாரிப்புகளை பயன்படுத்தினாள். எதிர்பார்த்த விளைவுகளை கொடுக்காத அந்தத் தயாரிப்பு, பக்க விளைவாக சரும நோயை கொடுத்தது. முகப்பருக்கள் மறைய வேண்டும் என முகம் முழுக்க 'க்ளிசரின்' தடவிக் கொண்ட பீனா, ஒரு இரவு முழுதும் 'முகம் எரியுது' என புலம்பிக்கொண்டே இருந்தாள். உடல் எடை குறைக்க பட்டினி கிடந்து டீச்சர் ஒருவர் வகுப்பில் மயங்கி விழுந்தார்.

மார்பகங்களை பெரிதாக்க செயற்கை முறைகள் [இதுவும் ஒரு மருத்துவ துறை என்பது அவமானத்திற்குரியது], ஹார்மோன் ஊசிகள், எண்ணெய் மசாஜ்கள் போன்றவை எல்லாம் வெற்றிகரமான தொழில்களாக வளர்ந்து வர காரணம் என்னைப் போன்ற ஒருத்தியின் தாழ்வு மனப்பான்மை (Inferiority Complex). அதைவிட சுவாரசியமானது 'தன்னம்பிக்கையை வளர்க்க மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்ளுங்கள்' என்ற தொனியில் இருக்கும் இந்த நிறுவனங்களின் ஸ்லோகன்கள். அதேசமயத்தில் அசாதாரண மார்பக வளர்ச்சி இருக்கும் பெண்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு முடிவு. அதற்காக அவர்கள் மார்பக அளவு குறைப்பு (Breast reduction) அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள்.

"அங்க என்ன இருக்குன்னு பிரா போடுற?", "பின்னாடி ஒண்ணுமே இல்லையே", "ரோடு ரோலர்", "தார் டின் மாதிரி இருக்காடி", "இவ்ளோ உயரமா இருந்தா யார் கல்யாணம் பண்ணிக்குவா?" - இந்த தொனியில் நீங்கள் உங்கள் தோழியிடம் பேசுவதும் பாடி ஷேமிங் தான். பாடி ஷேமிங்கும் ஒருவகையில் பாலியல் சீண்டல். "சும்மா... வெளையாட்டா ஜோக்காதானே சொன்னேன்?" என்றால், ஆமாம் உங்களுக்கு மட்டுமல்ல, உலகிற்கே பாடி ஷேமிங் ஜோக்தான். '2 Broke girls' என்றொரு அமெரிக்க காமெடி சீரியலில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தட்டையான மார்புகள் கொண்ட பெண்ணை பண்டமாக்குவார்கள்.

ஸ்டீரியோடைப்புகளை உடைப்பதுதான் இதற்கு தீர்வாக இருக்க முடியும். நீங்கள் அதை செய்யாவிட்டாலும், அது ஒரு மூலையில் நடந்து கொண்டேதான் இருக்கும். இன்டர்வ்யூ (Interview) எனும் பத்திரிக்கைக்கு டாப்லெஸ்ஸாக போஸ் செய்த ஆங்கில நடிகை கீரா நைட்லி பத்திரிகையிடம் வைத்த ஒரே கோரிக்கை: 'என் மார்பை ஃபோட்டோஷாப் செய்து பெரிதாக்காதீர்கள்' என்பது மட்டும்தான். 'நீங்கள் என்ன வடிவத்தில் இருக்கிறீர்கள் என்பது முக்கியமில்லை எனச் சொல்வது அவசியமாகப்படுகிறது' என்பதுவே அவரின் வாதம்.

அடர்த்தியான தேகம் ஒரு காலத்தின் ஃபேஷன் டிரெண்டாக இருந்தால், ஸீரோ சைஸ் ஒரு காலத்தின் ஃபேஷன் டிரெண்டாக இருக்கிறது. ஊடகம் 'டிரெண்ட்' என எதை விவரிக்கிறதோ அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என மெனக்கெடுவது முட்டாள்தனம். ஆரோக்கியமாக இருக்க வேண்டும்; இயல்பை, இயற்கையை தழுவிக் கொள்ள வேண்டும். பிராவின் கப் சைஸ் தன்னம்பிக்கையை வளர்க்காது.

- கார்தும்பி, பத்தியாளர் - தொடர்புக்கு snehabelcin@gmail.com

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close