கடைசி பெஞ்சுக்காரி - 3 | உடல், உணர்வுச் சுரண்டல்!

  கார்தும்பி   | Last Modified : 11 Jul, 2018 02:10 pm

'லைஃப் ஆஃப் பை' படம் முடியப் போகும் நேரத்தில் பையும், ரிச்சர்டு பார்க்கர் என்ற புலியும் கரையொதுங்குவார்கள். காட்டைக் காணும் புலி உடனடியாக காட்டுக்குள் பாய்ந்து செல்லும், பையை திரும்பி பார்க்காது. இதைத் தாங்கிக்கொள்ள முடியாத பை கதறி அழுவான். யோசித்து பார்த்தால், கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது பைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது அந்தப் புலியாகத்தான் இருக்கும்; அந்தப் புலி அங்கு இல்லையென்றால் குறைந்தபட்ச நிம்மதியோடாவாது வாழ்ந்திருப்பான். ஆனால், சில நாட்கள் அந்த புலியோடு வாழ்ந்து, நட்பாகி விட்டதாக நினைத்தால், அவனுக்கு அதன் பிரிவு வேதனையளிப்பதாக இருக்கும். 

ரிச்சர்டு பார்க்கர் என்ற புலி உருவகப்படுத்துவது உங்கள் துயரங்கள் சிலவற்றை என்று வைத்துக் கொள்வோமே. பல நாள்களாக அல்லது வருடங்களாக பழகிவிட்டதால் மட்டுமே ஒன்றை / ஒருவரை உங்களோடே வைத்துக்கொள்ள வேண்டும் அல்லது அதனோடு / அவரோடு மட்டுமே இருக்க வேண்டும் என்று யோசிப்பது சாதாரணமாக, வசதியாக இருக்கிறதல்லவா? பெண்கள் பல பொழுதுகளில் இப்படி துயருக்கு அடிமையாகி பின் அதிலிருந்து மீள முடியாமல், அதையே தினசரியாக மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால், மனித இனத்தில் அதிக மனவலிமையோடு இருப்பது பெண்கள்தான். 

பேரிடர் பொழுதுகளை பெண்கள் அளவிற்கு ஆண்கள் சமாளிப்பதில்லை. தஸ்லீமா நஸ்ரினின் லஜ்ஜா நாவலில் வரும் கிரன்மோயீ விடுதலை போராட்டத்தில் உடல் சிதைந்து போய் வரும் கணவனை கண்டதும் கதறி அழுது ஒப்பாரி வைக்காமல், உடனடியாக கணவனையும் குழந்தைகளையும் தேற்றி, பின்னர் ஒரு நாளில் அழுது தீர்ப்பாள். 'லெமன் ட்ரீ' படத்தில் தனியே ஒருத்தி ஒரு தேசத்திற்கு எதிராக வழக்கு தொடுப்பாள்; இராத்திரி இரண்டு மணி வரை விழித்திருந்து எம்ப்ராய்டரி தைத்து பின் நான்கு மணிக்கு எழுந்து வேலைக்குப் போகும் கணவருக்கு சமைத்தாய் பாட்டி கதை சொல்லியிருக்கிறாள். மரணம், உறவு முறிவு என தொடர்ந்து மன உளைச்சலடைய காரணங்கள் இருந்தும் அம்மா ஓடிக் கொண்டேதான் இருக்கிறாள். 

ஆனாலும், பாட்டியாலோ அம்மாவாலோ சிறு மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. 'என்ன தைரியத்துல பேக் எல்லாம் எடுத்துட்டு வீட்ட விட்டு ஹாஸ்டல் போனீங்க' என்று கேட்கும்போதெல்லாம் 'அப்பா ரெண்டு மூணு நாள்ல வந்து கூட்டிட்டு போயிடுவாங்கனு நெனைச்சேன்' என்று சொல்பவர் திருமண வாழ்விற்கு திரும்பி போக வேண்டியது கட்டாயம் என நினைக்க ஒரே காரணம் 'இருபது வருஷம் கூட வாழ்ந்தாச்சு' என்பதுதான். 

நானும் ஒன்றும் விதிவிலக்கல்ல. வேறு மாநிலம் சென்று படிப்பதற்கு வந்த துணிச்சலை கூவி கூவித் தேடிக் கொண்டிருக்கிறேன், கிடைப்பதாக இல்லை. இன்று எனக்கு சென்னையில் லோக்கல் ட்ரெயின் ஏற பயம் (சோம்பேறித்தனம்), புதிய நபர்களிடம் என்னைப் பற்றியும், என் வாழ்க்கை பற்றியும் பகிர்ந்துகொள்ள பயம் (social- anxiety), கிட்டார் க்ளாசில் சேர பயம் (கூச்சம்), கோவையில் அவிநாசி ரோட்டில் ஸ்கூட்டி ஓட்ட பயம் (உண்மையிலேயே பயம்தான்). இப்படியான சாக்குகள் எவ்வளவு வசதியாக இருக்கிறது?! 

சிலருக்கு டிராக் பேண்ட்ஸ் போட்டு கிரவுண்டில் ஓட பயம், சிலருக்கு பல வருடங்கள் வீட்டிலேயே இருந்ததால் வேலைக்குப் போக பயம், சிலருக்கு வீடு மாற்ற பயம், சிலருக்கு ஸ்கூட்டி ஓட்ட ஆசை இருந்தும் பயம், சிலருக்கு 'இருபது வருடங்கள் ஒன்றாய் வாழ்ந்ததால்' விவாகரத்து வாங்க பயம் - உடைந்து போன இதயத்தை செல்லோ டேப் போட்டு கன்னா பின்னாவென ஒட்டிக்கொண்டே வாழ்ந்து விடலாம்; புதிதாய் ஒன்றை முயற்சிப்பதற்கு பதில் வழக்கமான தினசரியோடு வாழ்ந்து விடலாம், அது எவ்வளவு அழுத்தம் தருவதாக இருந்தாலும் பரவாயில்லை எனும் நினைப்பு. 

உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் சுரண்டப்படும் பெண்கள் தொடர்ந்து அப்படியான இயல்பில் இருக்கும் உறவுகளிலேயே / சூழல்களிலேயே இருக்க விரும்புவதுதான் துயரம். 'அவனுக்கு நான் ஜீன்ஸ் போட்டா பிடிக்காது', 'எனக்கு எங்க போனாலும் இவ்ளோ தான் சாலரி கிடைக்கும்.. அதுக்கு இங்கேயே இருந்திடலாமே', ' இங்க பக்கத்துல எல்லாரையும் பழகியாச்சு.. இனி அங்க போய் புதுசா எல்லார்கிட்டயும் பேசணும்' - இப்படியான ஸ்டேட்மெண்டுகளை கேட்க தொடங்கினால் உஷார். உண்மையில், இப்படி சொல்பவர்களில் சிலரிடம் பத்து நிமிடம் தெளிவாய் பேசினாலே போதும், அவர்களுடைய ஆசையைப் புரிந்துகொள்ள; மீதி சிலரிடம் என்ன பேசியும் ஒன்றும் நடக்காது. 

இருபதில் இருக்கும் பெண்களின் வாழ்க்கையில் மாற்றம் வந்துகொண்டே இருக்கும். மேற்படிப்பு, வேலை, காதல் வாழ்க்கை, இருப்பிடம், ஆடைத் தேர்வு, உறவுகள், பார்க்கும் முகங்கள் என எதுவுமே நிரந்தரமானதாக இருக்காது. இந்த இடத்தில் ஒன்று மாற்றங்கள் எதையும் ஏற்றுக் கொள்ளாமல் தேங்கி நின்று கொள்ளலாம். அல்லது, நதி பாறைகள் மேல் தாவி ஓடுவதை போல, மாற்றங்களை உங்களை வடிவமைக்க ஏற்றுக் கொள்ளலாம். நிச்சயம், இது இலகுவான பாதையாக இருக்காது. 

மன அழுத்தம், கோபம், ஏக்கம், சுய-பச்சாதாபம், பயம் என கலவையான உணர்வுகள் வந்துகொண்டே இருக்கும். திடீரென சுரக்கும் ஹார்மோன்கள் கொலை வெறியை தூண்டுவதாக இருக்கும்; கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்ளவும் தோன்றும். இவையெல்லாம் ஒரே நொடியில் மேகமாய் கரைந்துபோகவும் செய்யும். சந்தோஷமான செய்தி என்னவென்றால், இதெல்லாம் உங்களுக்கு பழகிப் போகும். இது உங்களுக்கு பழகிப் போகும் முன்னால், அழுகை வரும்போது ஸ்நாக்ஸ் எதாவது எடுத்து வாயில் போட்டால் அழுகை வராது என்பதையும், முகம் பார்த்து சிரிக்கும் அத்தனை பேரிடமும் நின்று பேசுவது அவசியமில்லை என்பதையும், ஓர் உதடு குவித்த இமோஜி காதல் வெளிப்பாடாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை என்பதையும், உடலில் நீர் வற்றிப் போக ஓடினாலோ விளையாடினாலோ அழுது தீர்க்க வேண்டிய துயரம் எல்லாம் வியர்வையாய் வடிந்து போகும் என்பதையும் (ச்சுங்கிங் எக்ஸ்பிரஸ் - Chunking express படம் பார்க்கவும்) நீங்கள் கற்றுத் தேர்ந்து ஒரு வாழ்க்கை நிபுணராகியிருப்பீர்கள். 

இதயம் நிச்சயமாய் நொறுங்கத்தான் செய்யும். ஒவ்வொரு முறையும் செல்லோ டேப் ஒட்டி இதயத்தை கறையாக்காதீர்கள். ஆண்ட்ரியா ஜிப்சன் சொன்னது போல, 'உங்கள் இதயம் நொறுங்கி இருக்கும்போது, அதன் பிளவுகளில் விதைகள் விதைத்து மழை வரக் காத்திருங்கள்'. மழை வரும் என்று சொல்ல உடன் ஒரு நண்பர் போதும், மழை வரும்.

- கார்தும்பி,  பத்தியாளர் - தொடர்புக்கு snehabelcin@gmail.com

| ஓவியம்: சவுந்தர்யா ரவி | 

முந்தைய அத்தியாயம்: கடைசி பெஞ்சுக்காரி - 2 | பெண்களும் குற்ற உணர்வும்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close