கடைசி பெஞ்சுக்காரி - 5 | வெறுமையை போக்கும் 'போதை'

  கார்தும்பி   | Last Modified : 11 Jul, 2018 02:10 pm

மும்பையில் பேயிங் கெஸ்டாக நான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் ஷப்னம். அவர் பேசிக்கொண்டே இருப்பார். அவர் என்ன பேசுகிறார், எதற்காக பேசுகிறார் என்பது குறித்தெல்லாம் ஆராயவே வேண்டியதில்லை. தேவையில்லாத எதையாவது பற்றி வேகமாக பேசிக்கொண்டே இருப்பார். நம்மால் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக நூறு வார்த்தைகள் பேச முடிகிறது என்றால், அதில் இரு மடங்கு அவர் பேசுவார்.

நானும் பீனாவும் (ரூம் மேட்) எங்கள் அறைக்குள் இருக்கும் போது 'அர்ரே கமினி லோக்... க்யா கர் ரஹே ஹோ?' என கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் நுழைந்து விடுவார். எதிர்வீட்டு பெண் கதவை முக்கால்வாசி மூடிய பிறகும்கூட, புரிந்துகொள்ளாமல் சிரித்து சிரித்து கதை பேசிக்கொண்டே நிற்பார். இன்டர்நெட் அல்லது கேபிள் கனெக்‌ஷனில் எதாவது பிரச்சினையானால் கஸ்டமர் கேருக்கு கால் செய்து பல மணி நேரங்கள் சளைக்காமல் பேசுவார். ஷப்னத்திற்கு ஆகப் பெரும் கொண்டாட்டம், மார்க்கெட்டில் பேரம் பேசுவது. 'ஓல பாயில மழ பேஞ்சது மாதிரி' எனும் உருவகம் ஷப்னத்திற்காகவே உருவாக்கப்பட்டது போல பொருந்தும். 

எனக்கு இது அத்தனை இரிடேட்டிங் ஆக இருக்கும். எனக்கு யாரிடமும் நின்று பேசுவதற்கு நேரம் இருக்காது, அவர்களுடைய கதைகளில் கொஞ்சம் கூட ஆர்வம் இருக்காது. ஒரு பைத்தியம் போல நானே எனக்குள் பேசிக் கொள்வதை உதடசைத்து ஒத்திகை பார்த்து சிரித்துக்கொண்டே நடப்பேன். என்னுடைய உரையாடல்கள் எல்லாம் அவ்வளவுதான். ஷப்னமும் இளம் பிராயத்தில் அப்படித் தான் இருந்திருக்கிறார்.

தன்னை விட இளையவன் ஒருவரை காதலித்து, அவனை திருமணம் செய்ய மதம் மாறி, 'டவுன்'ஸ் சிண்ட்ரோம்' இருக்கும் ஒரு குழந்தையை பெற்றெடுத்து, கணவன் வேறு ஒருத்தியை இரண்டாவதாக திருமணம் செய்யப்போவதை அறிந்து கொண்டு, அந்த திருமணத்திற்கு தானும் வரவேற்கப்பட்டு, ஒவ்வொரு மே மாதமும் வெளிநாட்டில் இருக்கும் கணவன் வருவதை எதிர்பார்த்திருந்து, அவன் இரண்டாம் மனைவியை அழைத்து வந்து தன்னுடைய பெட்ரூமில் தங்கவைப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஷப்னம் தான் இவ்வளவு வேகமாக பேசத் தொடங்கியிருக்கிறார். 

நான் பத்தாவது படிக்கும்போது ஹிஸ்டரி பாடம் நடத்திய பத்மாவதி மிஸ்ஸும் இப்படித்தான். முதல் உலகப் போரைப் பற்றியோ, ஓப்பியம் போரைப் பற்றியோ எதுவும் நாங்கள் கேட்டதில்லை. பத்மா மிஸ் காலேஜ் முடித்தபோது மக்களுக்கு இருந்த ஃபேஷன் சென்ஸ் பற்றியும், அவருடைய மாமனாரின் ஆங்கில புலமை பற்றியும், பத்மா மிஸ் ஒரு காட்டில் வேர்க்கடலை பறித்து மாட்டிக் கொண்டது பற்றியும்தான் ஹிஸ்டரி வகுப்பில் பேசிக் கொண்டிருப்பார். என்ன ஒரு மோசமான ஆசிரியர் என்று எனக்கு ஆத்திரம் வந்தாலும், இப்போது அவரை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. 

உள்ளூர் தனியார் பேருந்துகளில் எல்லாம் ட்ரைவர் இருக்கைக்கு பக்கத்தில் இருக்கும் அந்தக் குட்டி இடத்தில் பல பெண்கள் அடைந்திருந்து கதைப் பேசிக் கொண்டிருப்பார்கள். கோவையில் மில் வேலைக்கு செல்லும் பெண்கள் இப்படி காலை, மாலை என இரு பொழுதுகளிலும் பயணிப்பார்கள் - இவர்கள் இருக்குமிடம் அப்படி சத்தமாக இருக்கும்; கூட்டத்தில் யாராவது ஒரு மொக்கை ஜோக்கை சொல்ல, அத்தனை பேரும் அதிரச் சிரிப்பார்கள். இதே காட்சியை மும்பை லோக்கல் ட்ரெயின்களிலும் பார்க்க முடியும். ட்ரெயினில் நின்று பேசிப் பேசிச் சலித்து ஒரு நூறு பெண்கள் இருட்டை வெறித்துக் கொண்டிருக்கும் ஒரு காட்சியை விட வெறுமையை வேறெப்படியாவது வெளிப்படுத்திவிட முடியுமா? 

"மெனோபாஸை நெருங்கும் பெண்களின் உடலிலும் மனதிலும் பல மாற்றங்கள் நடக்கும். சிலர் அதிகம் பேசத் தொடங்குவார்கள், சிலர் அமைதியாவார்கள், சிலர் நிறைய சாப்பிடத் தொடங்குவார்கள். மனதை அமைதியாக்க எக்சர்சைஸ் செய்யலாம், தியானம் செய்யலாம்" என ஒரு பாட்டி நேற்று எனக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தார். 

வுடி ஆலனின் 'ப்ளூ ஜாஸ்மின்' படத்தின் தொடக்க காட்சி இப்படி வரும்: விமானத்தில் பக்கத்து சீட்டில் இருக்கும் பெண்மணி எதுவோ பொதுவான கேள்வி ஒன்றை கேட்க, நாயகி தன்னுடைய காதல் காவியங்கள் அத்தனையையும் சொல்லத் தொடங்கிவிடுவாள். விமானம் தரையிறங்கிய பின்னரும் இது தொடரும். இப்படி 'ஓலப்பாயில மழ பேஞ்ச மாதிரி' பேசுபவர்கள் எல்லாரிடமும் சொல்வதற்கு ஒரு நீண்ட கதை இருக்கிறது - ஆனால் அவர்கள் நினைத்தபடி அதைச் சொல்லி முடிக்க முடிவதில்லை. 

இதை எழுதிக் கொண்டிருக்கும்போது அம்மாவிடம் 'அம்மா, ஓலப் பாயில மழ பேஞ்ச மாதிரினு சொல்லுவாங்க இல்ல...?' எனக் கேட்க தொடங்கும்போதே அம்மா பதிலுக்கு 'என்னைப் பத்தியாடி எழுதுற?' எனக் கேட்கிறார். அம்மாவிற்கு தெரியும். அம்மா வழக்கத்துக்கு மாறாக வேகமாகவும், பதற்றமாகவும், அதிகமாகவும் பேசுவதை அம்மா அறிந்திருக்கிறார். 

அதேபோல ஷப்னத்திற்கும் தெரியும், பத்மா மிஸ்ஸுக்கும் தெரியும், தன்னை ஒரு பாதிரியார் காதலித்தார் என்பதை தன்னுடைய எழுபது வயதில் என்னிடம் மட்டுமே சொன்ன பாட்டிக்கும் தெரியும், தானொரு புனிதவதி என்பதை சமூகத்திற்காக நிறுவ நினைக்கும் கணவனை இழந்த இந்தியப் பெண்களுக்கும் தெரியும். ஆனாலும் பேசுவதை நிறுத்த முடியாது - அதொரு தற்காலிகமான வலி நிவாரணி. கொந்தளித்துக் கொண்டே இருக்கும் மனதை எதாவது பேசி திசை திருப்புவதற்கான முயற்சி. இதற்கான நிரந்தர தீர்வு, நீங்கள் உங்களுடைய பாஷனை (Passion) கண்டடைவது என்று சொன்னால் நம்புவீர்களா?! 

அம்மா, அப்பா, கணவன், காதலன், பிள்ளை என யார் யாருடைய பாஷனுக்காகவோ ஓடிக் கொண்டிருப்பதால்தானே இவ்வளவு வெறுமை?

எது உங்கள் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுகிறதோ, அதற்காக மெனக்கட வேண்டும், வியர்வை சிந்தவேண்டும், தேவைப்பட்டால் கண்ணீர் சிந்த வேண்டும். இன்ஸ்டாகிராமில் ஃபுட் ப்ளாகிங் தொடங்கி மழைக்காடுகள் குறித்த விழிப்புணர்வு உண்டாக்குவது வரை எது வேண்டுமானாலும் உங்கள் பாஷனாக இருக்கலாம். அதைக் கண்டு உணர்ந்து செயல்படுத்தி ஏதோ ஒன்றை அடைந்ததாக நம்பும்போது கிடைக்கும் போதைதான் வெறுமையை போக்கும். இது இங்கே ஆண் பிள்ளைகளுக்கு மட்டும்தான் அறிவுறுத்தப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

இவ்வளவு சொல்லிய பிறகும் 'எம்புள்ளய நல்ல எடத்துல கட்டிக் கொடுக்குறதுதான் என் கனவு, ஆச, லட்சியம்' என்று சொல்பவர்களை கடந்து சென்று தலையில் அடித்துக்கொள்வோம். 

- கார்தும்பி,  பத்தியாளர் - தொடர்புக்கு snehabelcin@gmail.com

| ஓவியம்: சௌந்தர்யா ரவி | 

முந்தைய அத்தியாயம்: கடைசி பெஞ்சுக்காரி - 4 | துப்பட்டாவும் பிற படிப்பினைகளும்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close