டேர்னிங் பாயிண்ட்: கமலும் விஜயும் என்னைப் பாராட்டினார்கள்...

  Shalini Chandra Sekar   | Last Modified : 21 Mar, 2018 11:10 am


கண் சிமிட்டும் நேரத்தில் நாம் எதிர்பார்க்காமல் எத்தனையோ விஷயங்கள் நடந்து முடிந்துவிடும். அப்படித்தான் மெக்கானிக்கல் இன்ஜினீயர் ஒருவரை இயற்கை ஆர்வலராகவும், தொழில் முனைவோராகவும் மாற்றியிருக்கிறது வாழ்க்கை. அவர் தான் பவன்குமார். 

இது எப்படி நிகழ்ந்தது என்பதை அவரே நம்மிடம் பகிர்ந்துக் கொள்கிறார்...


"வீட்டில் நானும் அப்பாவும் தான். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்ததுமே வேலைக்குச் சென்றாக வேண்டும் என்ற நிலை. அப்பாவுக்கு ரிட்டையர்டு ஆகிற நேரம் என்பதால், எனக்கு பொறுப்புகள் அதிகமிருந்தன. கேம்பஸில் கிடைத்த வேலைகள் ஐ.டி மற்றும் பி.பி.ஓ.களாக இருந்தன. நான் மெக்கானிக்கலை அவ்வளவு விரும்பிப் படித்தேன். அதனால் மனதுக்குப் பிடிக்காத வேலைகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிறகு கல்லூரி முதல்வரின் மூலம் பிரபல கார் கம்பெனியில் (ஆட்டோமொபைல்) 3 மாத இன்டர்ன்ஷிப்புடன் சேர்த்து வேலையும் கிடைத்தது. ஆனால் அவர்கள் எங்களுக்கென்று எந்தவித பயிற்சியும் வேலையும் தரவில்லை. நாட்கள் கழிந்த நிலையில் திடீரென, ஒரு வேலையைக் கொடுத்தார்கள். எதையும் சொல்லிக் கொடுக்காமல், திடீரென டாஸ்கை முடிக்க வேண்டும் என அவர்கள் சொன்னது ஒருவித ஸ்ட்ரெஸ்ஸை உருவாக்கியது. அங்கு இருப்பவர்களும் மெஷின் வாழ்க்கை முறையிலேயே இருந்தனர். 


எனக்கு சின்ன வயதிலிருந்தே கார்டனிங்கில் விருப்பம் அதிகம். அதனால் அப்போதிலிருந்தே வீட்டில் அதைச் செய்துக் கொண்டிருந்தேன். ஆனால் எப்போதும் நான் இதை ஒரு பிஸினஸாகப் பார்த்ததில்லை. ஒருநாள் எதேச்சையாக ஃபேஸ்புக்கை பார்த்துக் கொண்டிருந்தப் போது, 'சென்னை ஷாப்பிங்' என்ற பக்கத்தில் பலரும் தங்களிடமிருப்பதை விற்கவும், வேண்டியதை வாங்கிக் கொண்டிருந்ததையும் பற்றி தெரிய வந்தது. வீட்டில் இடமில்லாத காரணத்தால் என்னிடம் இருக்கும் 5 மரக்கன்றுகளை யாருக்காவது கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் நானும் அந்தப் பக்கத்தில் பதிவிட்டேன்.


அதைப் பார்த்த ஒருவர் (இப்போது என்னுடைய கிளையண்ட்), 'என்னுடைய மகனுக்குப் பிறந்தநாள் வருகிறது. ரிட்டர்ன் கிஃப்ட் கொடுக்க இன்னும் 30 மரக்கன்றுகள் சேர்த்துத் தர முடியுமா?' எனக் கேட்டார். சரி என, என் நண்பர்களை டெலிவரி செய்யும்படி (எனக்கு வேறு வேலை வந்துவிட்டதால்) கேட்டேன். அவர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. பிறகு நானே நர்சரியில் போய் கன்றுகளை வாங்கி, அவர்களின் வீட்டில் டெலிவரி செய்தேன். அன்றைக்கு நான் சம்பாதித்தது 150 ரூபாய். அவ்வளவு தான் அன்றைக்கே அந்த ஆட்டோமொபைல் கம்பெனியிலிருந்து விலகி விட்டேன். 

 

நான் முதலில் 'ரிட்டர்ன் கிஃப்ட்' என்ற கான்செப்டையே கொடுக்கவில்லை. அந்த ஃபேஸ்புக் குழுவில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை 'மரக்கன்றுகள் டோர் டெலிவரி' என பதிவிடுவேன். யாராவது கேட்டால், அவர்கள் கேட்கும் குறிப்பிட்ட அந்த மரக்கன்றை நர்சரியில் வாங்கிக் கொண்டு போய் டெலிவரி செய்ய ஆரம்பித்தேன். என் வீடு இருப்பது கூடுவாஞ்சேரியில். ஆனால் கேட்பவர்கள் அனைவரும் சென்னையில் தான் இருப்பார்கள். அதனால் தினமும் 50 ரூபாய் பஸ் பாஸ் வாங்கி, இரண்டு மூன்று ஏரியாக்களை ஒரே நாளில் கவர் செய்துவிடுவேன். பல வீடுகள் பஸ் ஸ்டாப்பிலிருந்து வெகு தூரமாக இருக்கும். அப்போது நடந்தே போவேன். இது எதுவுமே வீட்டிற்குத் தெரியாது. இதிலிருந்து கிடைக்கும் பணத்தை இன்டர்வியூவுக்குப் போக பயன்படுத்திக் கொள்வேன். 


ஒருமுறை இதேபோல் மரக்கன்றை கொடுத்துவிட்டு பணம் வாங்கக் காத்திருந்தேன். அந்த கிளையண்ட் நான் கொடுத்திருந்த கன்றுகளை மிக அழகாக டெக்கரேட் செய்திருந்தார். அங்குக் காத்திருந்த நேரத்தில் அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை அறிந்துக் கொண்டேன். அங்கு வந்த விருந்தினர்களும் என்னைப் போலவே ஆச்சரியமுடன் பார்த்துவிட்டு எங்கு வாங்கினீர்கள் என விசாரிக்க ஆரம்பித்தனர். நானும் அங்கேயே இருந்ததால் நிறைய பேர் என்னிடம், 'ரிட்டர்ன் கிஃப்ட்' மரக்கன்றுகளைக் கேட்க ஆரம்பித்தனர். அதுதான் நான் முழு வீச்சில் இதில் இறங்கக் காரணமாக இருந்தது. 


செடி என்றால் வேண்டாம் என சொல்பவர்களும் உண்டு. அதனால் இதில் அவேர்னஸும் வேண்டும், என்டெர்டெயின்மென்டும் வேண்டும் என நினைத்து, அட்ராக்டிவாக இதனி பேக் செய்தேன். நானாக ஒன்று செய்து, அது மற்றவர்களுக்குப் பிடிக்காமல் போகலாம். அதனால் என்னைப் பொறுத்தவரையில் என் கிளையண்டுகள் சொல்லும் ஆலோசனைகளை தான் பின்பற்றுகிறேன். 


பிறகு நானே என் சொந்த கவனிப்பில் விதை விதைத்து நாற்று தயார் செய்ய ஆரம்பித்தேன். தினமும் காலையில் ஒருமணி நேரமாவது புதிதாக விதைகளை விதைத்து விடுவேன். வெள்ளம் வந்தப் போது, என் உறவினர் வீட்டில் 4 பேர் ஃபுட் பாய்சனால் மருத்துவமனையில் அட்மிட் ஆனார்கள். அந்த நிழ்வுக்குப் பிறகு, அப்பா வீட்டில் உணவு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தினார். அதிலிருந்து வீட்டில் காய்கறிகளையும் பயிரிட ஆரம்பித்தேன். பிறகு ஒரு நண்பருக்கு இலவசமாக பயிரிட்டுக் கொடுத்தேன். அதன் மூலம் தவறுகளை திருத்திக் கொண்டு, மாடித்தோட்டம் போட்டுத்தரவும் ஆரம்பித்தேன்.


இதோடு கார்டனிங் பற்றிய பொது ஒர்க் ஷாப், பள்ளி, கல்லூரிகளிலும் கன்சல்டிங் என செய்துக் கொண்டு வருகிறேன். இதன் மூலம் விவசாயத்தில் நல்ல எதிர்காலம்  இருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டுமென நினைக்கிறேன். என் உறவினர்கள் 'ஏன் இன்னும் வேலை கிடைக்கவில்லைய?' என கேட்பது சற்று வருத்தமளிக்கிறது. என்ன தான் நான் தொழில் முனைவோர் என்றாலும் அவர்களைப் பொறுத்தவரையில், நான் வேலையில்லாமல் இருக்கிறேன் என்பது தான். 


இப்போது என்னுடைய டீமில் 5 பேர் இருக்கிறார்கள். கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கிப் படித்த மாணவர்கள் செலவுக்கு காசில்லாமல் பக்கத்திலிருக்கும் ரெஸ்டாரென்டுகளில் பிளேட் கழுவுவார்கள். அதை நான் கூடவே இருந்துப் பார்த்திருப்பதால், என் ஜூனியர் 15 பேரை பார்ட் டைமாக வேலைக்கு வைத்திருக்கிறேன். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தான் எங்களுக்கு வேலை அதிகமாக இருக்கும். அப்போது அவர்கள் எனக்கு உதவியாக இருப்பார்கள். 


சமீபத்தில் ஐ.ஜி ஒருவரின் மகள் ரிசப்ஷனில் நாங்கள் ரிட்டர்ன் கிஃப்ட் கொடுத்துக் கொண்டிருந்தோம். அங்கு ஹாலில் இருந்தத் திரையில் நடிகர் விஜய் வந்திருப்பதைப் பார்த்தேன். சரி, அவர் முட்டித்துவிட்டு வெளியே வரும்போது, பிளான்ட்ஸ் கொடுப்போம் என என் டீமிடம் சொல்லியிருந்தேன். எந்தவித தயக்கமும் இல்லாமல் செடியை வாங்கிக் கொண்ட விஜய், 'வாவ், நைஸ் ஐடியாங்க!' என்று சொல்லிவிட்டு புன்னகைத்தார். இப்போது இதுபோன்ற ரிட்டர்ன் கிஃப்ட் கொடுப்பதிலும், மாடித்தோட்டம் அமைத்துத் தருவதிலும் நான் படு பிஸி. 


ஜனவரியில் சென்னையில் இருக்கும் ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் 3 நாட்கள் ஒரு ஈவென்ட் நடந்தது. நிறைய சிறப்பு அழைப்பாளர்கள் வந்திருந்தார்கள். மூன்றாவது நாள் கமல் ஹாசனும் வதிருந்தார். என்னிடம் ரிட்டர்ன் கிஃப்ட் செடியை வாங்கிக் கொண்ட எல்லோரும் அப்படியே வைத்துக் கொண்டார்கள். கமலுக்கு இரண்டு செடிகளைக் கொடுத்தேன். ஸ்டேஜில் இருந்த அவர் உடனே தன் இரு கைகளையும் மேலுயர்த்தி செடிகளைக் காட்டிவிட்டு, 'ரொம்ப நல்லாருக்கு' என பாராட்டினார்.

 

ரிட்டர்ன் கிஃப்ட்டோடு நிற்காமல், பர்த்டே சர்ப்ரைஸ் கிஃப்ட்டும் எங்களிடம் கிடைக்கும். பொதுவாக எல்லாரும் பிறந்தநாளுக்கு பூங்கொத்துத் தருவார்கள். ஆனால் அது ஓரிரு நாட்களில் வாடிவிடும். அதனால் நாங்கள் 'பாட்டெட் பிளான்ட், சாக்லேட், கிரீட்டிங் கார்டு' ஆகிய மூன்றையும் காம்போவாக தருகிறோம். நேரடியாகவும், ஆன்லைனிலும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். நாங்கள் வந்து டெலிவரி செய்வோம். இதற்கு இப்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 


தவிர, நமது நாட்டுக் காய்கறிகளின் 'ரேரான' ரக விதைகளை உடனே ஆன்லைனில் அப்டேட் செய்துவிடுவோம். அதை நிறைய பேர் வாங்குகிறார்கள். அப்படி எங்களிடம் 50 வகை வெண்டை, 43 வகை கத்தரி, 14 வகை தக்காளி என பல காய்கறிகளின் கிடைக்காத ரக விதைகள் இருக்கின்றன. 

இப்போது முழுநேர தொழில் முனைவோராக, அதுவும் எனக்குப் பிடித்த விவசாயத் துறையில் வளர்ந்து வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது' என கண்களில் பல கனவுகளுடன் கூறுகிறார் பவன் குமார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close