சிறைவலம் 1 - உலகின் ஆபத்தான 'டான்லி' சிறை!

  பாலகணேசன்   | Last Modified : 11 Jul, 2018 02:10 pm

சிறைகள் எதற்காக உருவாக்கப்பட்டது என்று சிந்தித்தால், அதற்கான பதில் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. குற்றவாளியை திருத்தி வெளியே அனுப்பும் ஒரு மையமாகத்தான் சிறைச்சாலைகள் செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால்தான் சிறைச்சாலைகள் பயன்தரும் ஓர் அமைப்பாக இருக்கும். ஆனால், அதே சிறைச்சாலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் காத்திருக்கும் ஓர் எரிமலையை போல கனன்றுகொண்டே இருந்தால்?

வாருங்கள் அப்படி ஒரு சிறைச்சாலையை வலம் வருவோம்.

மேற்கத்திய, குறிப்பாக அமெரிக்க நாடுகளிலுள்ள சிறைகளை திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். மிகவும் அதிகபட்ச பாதுகாப்போடு, எல்லா இடமும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு, கைதிகள் அனைவரும் நல்ல சீருடையில், தனித்தனி அறையில் இருக்கும் பல சித்திரங்கள் உங்கள் கண்முன்னால் தோன்றி மறையலாம். ஆனால், எல்லா சிறைகளும் அப்படித்தானா என்று கேட்டால், 'இல்லை' என்றுதான் கூற வேண்டும். 

மத்திய அமெரிக்க நாடுகளுள் ஒன்று ஹொண்டுராஸ். அங்கே இருக்கும் ஒரு சிறைக்கு பெயர் 'டான்லி'. மொத்தம் 700 பேர் தற்போது கைதிகளாக இருக்கும் இந்தச் சிறையை வெளியில் இருந்து பார்த்தால் ஒரு காலனி குடியிருப்பு போன்றே தோற்றமளிக்கும். ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த இந்தச் சிறையை பாதுகாப்பது, ஒழுங்குபடுத்துவது யார் தெரியுமா..? 

கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், கடத்தல் செய்து கைதாகி உள்ளே வந்த கைதிகள்தான்!

கேட்க ஆச்சரியமாய் இருக்கிறதா? ஆனால், அதுதான் உண்மை. 

கிட்டத்தட்ட ஓர் அங்கீகரிக்கப்பட்ட தனி அரசாங்கமே இங்கே கைதிகளால் நிகழ்த்தப்படுகிறது. குற்றம் செய்து தண்டனை பெற்ற ஒருவர் இந்தச் சிறைக்கு வரும்போது அவரது கைரேகையை பதிவு செய்வது, ஏதேனும் ஆடையில் மறைத்து வைத்து இருக்கிறாரா என மேம்போக்காக சோதனையிடுவது, புகைப்படம் எடுத்து அதைக் கோப்புகளில் பதிவு செய்வது வரை மட்டுமே இங்கே காவலர்கள் வேலை. அதன்பின்னர் சிறைக்கு செல்லும் பெரிய க்ரில் கதவை திறந்துவிடுவதோடு சரி.. அதன்பின்னர் உள்ளே எல்லாமே அங்கிருக்கும் கைதிகளின் ராஜ்ஜியம்தான்.

புதிதாக உள்ளே வரும் கைதியை அந்தச் சிறையின் கைதிகளின் தலைவர் முதலில் சந்திப்பார். இந்தத் தலைவர் பல கொலைகள் செய்துவிட்டு சிறைக்கு வந்து 30 வருட சிறைத்தண்டனை அனுபவிப்பவர். அவர், புதிய நபர் என்ன குற்றம் செய்து உள்ளே வந்தான், என்ன தொழில் செய்துவந்தான் போன்ற மற்ற விவரங்களை எல்லாம் தெளிவாக விசாரிப்பார். பின்னர் இந்தத் தலைவரின் கீழ் பணிபுரியும் பாதுகாவலர்கள் புதியதாய் வந்தவரை தனியறைக்கு அழைத்துச் சென்று நிர்வாணமாக்கி சோதனையிடுவார்கள். பின்னர் மீண்டும் தலைவரிடத்தில் அழைத்துச் செல்வார்கள். எந்தச் சிறையில் புதியவர் தங்கவேண்டும் என்பதை தலைவர் முடிவு செய்வார். 

இந்தச் சிறையில் இருக்கும் அறைகளில் ஓர் அறையில் ஏழு பேர் வரைதான் தங்க இடமுண்டு. ஆனால் ஓர் அறையில் கிட்டத்தட்ட முப்பது பேர் வரை தங்கவேண்டிய நிலைமை. பெரும்பாலும் கைதிகள் தரையில்தான் தூங்க வேண்டியிருக்கும். பெட் வேண்டுமென்றால் தலைவரிடம் கேட்கலாம். ஒரு பெட் 135 டாலர் கொடுத்து அவரிடமே விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். வாடகைக்கு எல்லாம் கிடையாது. ஏனெனில் இங்கே வரும் கைதிகள் குறைந்தபட்சம் ஐந்து வருடங்களாவது உள்ளேதான் இருப்பார்கள். 

சிறையின் எல்லா தேவைகளும் இந்தத் தலைவர் மற்றும் அவரது பாதுகாவலர்களாலேயே நிறைவேற்றப்படும். இவர்கள் வைத்துதான் சட்டம். சிறை இருக்கும் வளாகத்திற்குள் காவலர்கள் நுழையவே மாட்டார்கள் பகலில். இரவில் மட்டும் சிறைக்கதவுகளை மூடுவதற்கு ஒரே ஒரு காவலர் உள்ளே வருவார். சிசிடிவி கேமராக்களோ அல்லது வேறு சிறப்புக் கண்காணிப்புகளோ எதுவுமே கிடையாது இங்கே. இதில் அறை எண் 33 இளம் குற்றவாளிக்கும், அறை எண் 20 கொடூரமான முறையில் கொலையோ அல்லது பாலியல் பலாத்காரமோ செய்த குற்றவாளிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்தச் சிறைக்குள்ளேயே ஒரு குளிர்பானம் விற்கும் கடையும், ஒரு உணவகமும், அத்தியாவசிய பொருட்களுக்கான கடை ஒன்றும் இயங்குகிறது. பணம் இருப்பவர்கள் எது வேண்டுமானாலும் வாங்கி உண்ணலாம்.

சிறைக் கைதிகளுக்கு மூன்று வேளைக்கான உணவை தயாரிக்கும் சமையல்காரர் ஒரு கொலை குற்றவாளி. இந்தச் சிறைக்கு கொடுக்கும் பணத்தில் குறைந்தபட்ச அளவு பணத்தையே உணவிற்கு செலவழிக்கும் நிலைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அதாவது ஒரு குற்றவாளிக்கு ஒரு நாளைக்கு 43 சென்ட் மட்டுமே செலவழிக்கப்படுகிறது. ஒரு டாலரில் பாதிக்கும் குறைவு இது. 

வாரத்திற்கு மூன்று நாட்கள் குடும்ப உறுப்பினர்கள் கைதிகளை சந்திக்க வரலாம். மேலும் கைதிகளின் மனைவியோ அல்லது பெண் தோழியோ இரவு தங்க விரும்பினாலும் கூட தாராளமாக தங்கலாம். உறவு கொள்ளலாம். இந்தச் சிறைக்கு தன் அண்ணனை பார்க்கவந்த ஒரு பெண், அப்போது சிறைக்கு புது கைதியாக வந்த ஒருவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டு குழந்தையும் பெற்றிருக்கிறார். இன்னும் அந்தக் கணவர் சிறையில்தான் இருக்கிறார். அவர் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் நான்கைந்து ஆண்டுகள் இருக்கின்றன. வாரத்திற்கு மூன்று நாட்களும் இவர்கள் சிறை வளாகத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். 

2014-ல் இந்தச் சிறையில் போதை மருந்து, ஆயுதங்கள் போன்றவை இருப்பதை அறிந்து அதை சோதனையிட மிலிட்டரி போலீஸ் படை வந்தது. அவர்கள் சோதனையிட ஆரம்பித்த சிறிதுநேரத்தில் கைதிகள் அந்தப் படையை சூழ்ந்துகொண்டனர். வந்த ஒவ்வொரு காவலரையும் தனித்தனியாக அடித்து விரட்டினர். அன்றிலிருந்து இன்று வரை இந்த சிறை வாசலில் மிலிட்டரி போலீசார் கால் பதித்ததில்லை. 

இந்தச் சிறையின் வெளிப்புற சுவர் வெறும் ஐந்தடிதான். மிக எளிதாக தப்பித்து ஓடிவிடலாம். காரணம், இரவில் வெறும் மூன்றே காவலர்கள்தான் பணியில் இருப்பார்கள். ஆனால் யாரும் தப்பிக்க முயற்சி செய்வதேயில்லை. அப்படி ஓர் ஒழுங்கு இந்தச் சிறையை பாதுகாக்கும் தலைவர் மூலம் இங்கே அனைவருக்கும் போதிக்கபப்டுகிறது. போதனைகளை மீறினால் மரணம்தான். அதேபோல் கைதிகளை பார்க்கவரும் பெண்கள், குழ்நதைகளிடம் யாரேனும் அத்துமீறினாலும் மரணமே பரிசு. 

இப்படி எல்லாம் நன்றாக இருப்பதாக வெளியில் இருந்து பார்க்கையில் தோன்றினாலும் கூட சிறையில் இருக்கும் எல்லாருமே பயங்கர குற்றவாளிகள். உள்ளே எல்லாவித போதை மருந்தும் எப்போதும் கிடைக்கும். கைதிகளிடம் துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களுக்கும் பஞ்சமில்லை. இதில் இன்னொரு நகைமுரண் 30 பொலிஸாரின் 15 போலீசிடம்தான் துப்பாக்கி உண்டு. ஒரே ஒரு சிறுபொறி பற்றிக்கொண்டாலும் போதும்... அந்தச் சிறைக்கு மட்டுமல்ல... சிறையை சுற்றி இருக்கும் மிகப்பெரிய சந்தையும் கூட தப்பிக்க இயலாது. ஏனெனில் இந்தச் சிறை ஊருக்கு நடுவில் இருக்கிறது. இதுவரை அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை. இனியும் நடக்காமல் இருக்க எல்லாம் வல்லவரை வேண்டுவோமாக.

 - பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close