சக்ஸஸும் சறுக்கலும் தரும் 'வார்த்தை' வல்லமை!

  சிவசங்கரி கோமதி நாயகம்   | Last Modified : 11 Jul, 2018 02:10 pm

"இந்த நாள் இனிய நாள்" என்று காலை எழுந்தவுடன் வாட்சப்பிலும் டிவியிலும் மாறி மாறி நற்சிந்தனைகள். 'ஆஹா காதினிலே தேன் வந்து பாய்வது' போல் இருக்கும். மனதில் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

நேரம் செல்லச் செல்ல டிவியிலும் சரி, மக்கள் வாழ்க்கையிலும் சரி இனிமை கடுமையாக மாறுகிறது. 11 மணிக்கு சீரியலை திறந்தால் போதும், "உன் குடும்பத்தை அழிக்காம விட மாட்டேன்", "உன் சாவு என் கையில்தான்" போன்ற வசனங்கள் மட்டுமே காதில் மாறி மாறி வந்து விழுகின்றன. வசனம்தானே, இதில் என்ன இருக்கின்றது என்று யோசிக்கும் உங்கள் மனங்களுக்கு ஒரு சிறிய பதிவு.

அமெரிக்க பல்கலைக் கழகம் ஒன்று, காலங்காலமாக புகைப்பிடித்தாலும் உங்களுக்கு ஒன்றும் ஆகாது, நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள் என ஆய்வில் கண்டறிந்துள்ளதாக  ஒரு செய்தி வெளியிட்டால், அதை வாட்சப்பில் வைரல் ஆக்கிவிட்டால் விளைவு என்னவாக இருக்கும் என்று யோசியுங்கள். இதைப் படிக்கும் 10-ல் 6 பேர் புகைப்பிடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

வார்த்தைகள் அழகாக தொடுக்கப்பட்டு, பேசப்படும்போது அது ஒருவரின் எண்ண ஓட்டத்தை மாற்றும் சக்தி கொண்டது. வார்த்தைகள் டீ கடைக்காரரைப் பிரதமராகவும் ஆக்கும்; பிரதமரை டீ ஆத்துபவராகவும் மாற்றும் வல்லமை கொண்டது.

ஒருவர் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுகொள்ளாததும் நீங்கள் தேர்ந்தெடுத்து பேசும் வார்த்தைகளின் கோர்வையால் மட்டுமே. பள்ளியில் பிடித்த ஆசிரியர்கள் நடத்திய பாடங்களில் மட்டுமே அதிக மதிப்பெண் பெறுவதுண்டு. அதற்குக் காரணம் நமக்கு பிடித்தவர்கள் எது சொன்னாலும் நாம் அதை நம்புவதே!

நாசர் என்று ஒரு சிறுவன் தன் தந்தையை ரோல் மாடல் ஆக கருதி வாழ்ந்து வந்தான். அவரை எப்படியாவது ஆச்சரியத்துக்குள்ளாக்கி தன்வசப்படுத்த வேண்டும் என்று மிகவும் பிரயத்தனப்பட்டான். ஆனால் அவன் அப்பாவோ லேசில் இறங்கி வருவதில்லை. வருடங்கள் ஓடின. அவனின் எந்த முயற்சியும் அப்பாவை மயக்கவில்லை. காலேஜ் சேர்ந்து முதல் செமெஸ்டரில் நல்ல மதிப்பெண் வாங்கினான். விரைந்து ஓடி அப்பாவுக்கு போன் செய்தான். "உங்களுக்கு பெருமையாய் இருக்கா?" என்று கேட்டான். அதற்கு அவன் அப்பா "நான் ரொம்ப பிஸியாக இருக்கிறேன். திரும்ப கூப்பிடறேன்" என்று சொல்லிவிட்டார். ஆனாலும் அவர் திரும்பக் கூப்பிடவும் இல்லை; அதுபற்றி எதுவும் பேசவும் இல்லை.

அன்று முதல் குடிக்கும், போதை மருந்துக்கும், கெட்ட சகவாசத்துக்கும் அடிமை ஆனான் நாசர். "ஏன்" என்று கேட்டதற்கு, "நான் உலகம் என்று நம்பும் என் அப்பாவிற்கே என்னைப் பற்றி அக்கறை இல்லாதபோது, நான் ஏன் கவலைப்பட வேண்டும்" என்று காரணம் சொன்னான். போதை மிகுதியால் ஒருநாள் இறந்தே போனான்.

உரிய நேரத்தில் ஒரு வார்த்தை அவன் உயிரை காப்பாற்றியிருக்கும். வார்த்தைகள் வலிமட்டும் அல்ல; வலிமை பெற்றது. உங்கள் வார்த்தை விஷத்தை கக்குகிறதா அல்லது ஒரு மனதை ஆறுதல்படுத்துகிறதா என்று யோசித்துப் பேசவும்.

தமிழ் சீரியல் தயாரிப்பாளர்கள் இதனை மனதில்கொண்டு நல்ல சிந்தனைகளை, நல்ல வார்த்தைகளை மக்கள் மனதில் பதியவைப்பது நல்லது.

- சிவசங்கரி கோமதி நாயகம்

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.