சிறைவலம் 3 - பிலிப்பைன்ஸ் சிறைகளில் கேங்ஸ்டர்களின் கொடூரங்கள்!

  பால கணேசன்   | Last Modified : 11 Jul, 2018 02:12 pm

பிலிப்பைன்ஸ் நாடு 10 கோடி மக்கள்தொகையை கொண்டது. அதில் 1.2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தலைநகர் மணிலாவில் வசிக்கிறார்கள். உலகின் மிகக் கூட்டமான நகரங்களில் முக்கியமானது மணிலா. இப்படி மக்கள்தொகை அதிகமாக இருக்கும் இடங்களில் குற்றங்களும் அதிகமாகவே இருக்கும். தலைநகர் மணிலாவில் மட்டும் ஒரு வாரத்திற்கு 140 கொலைகள் பதிவாகின்றன என்று கூறினால் உங்களால் நம்பமுடிகிறதா? 

ஆனால், அதுதான் உண்மை. 140 கொலைகளில் ஒரு கொலைக்கு ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தாலும் 140 புதிய குற்றவாளிகள். இவர்களை விசாரித்து அடைத்து வைக்கச் சிறைகள் வேண்டுமே? 

இருக்கிறது. நிறைய இருக்கிறது. அப்படி ஒரு சிறையைத்தான் இப்போது நாம் காணப் போகிறோம்.

ரிசால் நகர சிறைச்சாலை. ஸ்புட்னிக் கேங் எனப்படும் ஒரு மிக மோசமான குற்றவாளி கும்பல்களால் நடத்தப்படும், காவலர்களால் வெறும் மேற்பார்வை மட்டும் பார்க்கப்படும் ஒரு சிறை. புதியதாய் வரும் ஒரு கைதியை வெறும் மேம்போக்காக மட்டும் சோதனை செய்துவிட்டு, புகைப்படங்கள் எடுத்துவிட்டு உள்ளே அனுப்பிவிடுவார்கள். உள்ளே சிறையில் ஒரு தனி அரசாங்கம் இருக்கிறது. கமாண்டர், மேயர், டீச்சர் என பல படிநிலைகள் கொண்ட இந்த அரசாங்கத்தை இயக்குவது ஸ்புட்னிக் எனப்படும் ஒரு கொடூர கேங். போதைமருந்து கடத்தல் முக்கிய தொழிலாக கொண்ட இவர்களில் ஒருவர் கைதாகி உள்ளே வந்தால் சிறைக்குள் ராஜவாழ்க்கைதான். எந்த வேலையும் செய்யத் தேவையில்லை அவர்கள். இந்த கேங்கிற்கு சம்பந்தமில்லாத புதிதாக வருபவருக்கோ இந்த சிறை ஒரு 'வாழும் நரகம்'.

சிறைக்குள் புதிதாக வரும் ஸ்புட்னிக் கேங் அல்லாத நபருக்கு இரண்டு வாய்ப்புகள் தரப்படும். ஒன்று இனிமேல் ஸ்புட்னிக் கேங்கிற்காக வேலை செய்வேன் என்று சத்தியப் பிரமாணம் செய்து கேங்கில் இணைவது; அல்லது, சிறையில் இருக்கும் காலம் வரை ஒவ்வொரு மாதமும் 500 பேசோஸ் (பிலிப்பைனி பணம்) ஸ்புட்னிக் கேங் லீடருக்கு கொடுத்துவிடுவதாக வாக்களிப்பது. இந்த இரண்டில் ஒன்று செய்து வரும் நாட்களை நிம்மதியாக சிறையில் கழிப்பது அல்லது விடிந்ததில் இருந்து இரவு வரை ஓர் அடிமை போல ஸ்புட்னிக் கேங் ஆட்களுக்கு வேலை செய்வது. சிறையின் தரைகளை துடைப்பது, கழிவறைகளை சுத்தம் செய்வது, தண்ணீர் எடுத்து நிரப்புவது என எல்லா வேலைகளும் இவர்களே செய்யவேண்டும். மீறினால் மரணம் கூட பரிசாக கிடைக்கலாம். ஆக மொத்தம் ஸ்புட்னிக் கேங்கில் இல்லாதவர்கள் ஒரு இரண்டாம் தர குடிமகன்கள் போலதான் இங்கு நடத்தப்படுவார்கள்.

ஆனால், இதுவெல்லாம் அதிர்ச்சியில்லை. புதியதாய் வரும் கைதிக்கு பிரச்சினையில்லை. உண்மையான பிரச்சினை என்னவென்றால் இந்தச் சிறையில் இருக்கும் கைதிகளில் 60% பேர் மீது இருக்கும் குற்றம் இன்னும் நிரூபிக்கப்படவே இல்லை. இந்தச் சிறையிலே பத்து வருடங்களாக இருக்கும் பலரது வழக்கும் கூட இதுவரை விசாரணைக்கு வரவே இல்லை. அதுதான் பிலிப்பைன்ஸின் மிகப்பெரிய பிரச்சினை. ஏனெனில் பிலிப்பைன்ஸில் நடக்கும் குற்றங்களோடு ஒப்பிடுகையில் நீதிமன்றங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. காவலர்களின் எண்ணிக்கையும் குறைவு. இதன் காரணமாக ஒரு கொலையோ அலலது ஏதேனும் ஒரு குற்றமோ நடந்தால் யார் மீது சந்தேகம் எழுகிறதோ அவர்களை உடனே சிறையில் அடைத்துவிடுவார்கள். ஆனால் வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்று யாருக்குமே தெரியாது. இப்படி நிரபராதிகளாக இருந்தும் சிறையில் பத்து வருடங்களுக்கும் மேல் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கை மிக அதிகம். 

ஆயிரம் குற்றவாளி தப்பைத்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்னும் இந்திய சட்ட அமைப்பு வசனம் எல்லாம் அங்கே பொருந்தாது. இதன் காரணமாகவே சிறையில் பெயருக்கு காவலாளிகளாக இரண்டு மூன்று பேர் இருக்க, மொத்த சிறையும் மோசமான கைதிகளால் நிர்வகிக்கப்படுகிறது.

இது பிலிப்பைன்சின் ஒரே ஒரு சிறையில் மட்டும் இந்த நிலைமை இல்லை. மணிலா போன்ற தலைநகரத்திற்கு அருகில் இருக்கும் ரிசால் போன்ற சிறையே இப்படி இருந்தால், கிராமப்புற பகுதிகளில் இருக்கும் சிறைகளில் நிலையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அபப்டி ஒரு சிறை தெற்கு பிலிப்பைன்ஸில் உண்டு. உலகின் மிக மோசமான சிறைகளில் ஒன்றாக இதைச் சொல்லலாம். காரணம் இந்த சிறையில் இருக்கும் கைதிகள் மரணதண்டனை பெற்று இறப்பார்களோ இல்லையோ இதே சிறையில் ஒரு நான்கைந்து வருடம் தொடர்ச்சியாக இருந்தால், அதுவும் இந்தச் சிறையின் கமாண்டர்களான பஹாலா நா கேங்கை சார்ந்தவர்களாக இல்லாமல் இருந்தால் இயற்கையாகவே மரணம் அடைந்துவிடுவார்கள். 

காரணம் வெறும் 28 படுக்கைகளை கொண்ட ஒரு பெரிய அறையில் இருக்கும் மொத்த கைதிகளின் எண்ணிக்கை 71. இது கமாண்டர் இருக்கும் அறை. அதனால்தான் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இதுவே சாதாரண கைதிகள் இருக்கும் மற்ற அறையில் படுக்கைகளின் எண்ணிக்கை 24. ஆனால் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கை 160. இதில் 24 பேர் மட்டும் படுக்கையில் துயில, மற்றவர்கள் கட்டாந்தரையில் உருள்வதைத் தவிர வேறுவழியே இல்லை. இதன் காரணமாக சுகாதாரமற்ற தன்மை இங்கே பொதுவான அம்சம். சுத்தம் இல்லாத இடத்தில் நோய் பரவுதல் எளிதான விஷயம். அந்த வகையில் காசநோய் இங்கே மிக பரவலான ஒன்று. காசநோய் இருப்பதாக கண்டறியப்டும் ஒருவனை அருகிலேயே இருக்கும் தனி அறையில் அடைத்து வைப்பார்கள். இதேபோல் கிட்டத்தட்ட 15 நபர்கள் ஒரே அறைக்குள் நோய்வாய்ப்பட்டு அடைத்துவைக்கபப்டும் கொடுமையெல்லாம் நிகழும். இதில் கொடுமை, பாதிக்கும் மேற்பட்டோரின் குற்றம் இன்னும் விசாரணைக்கே வரவில்லை என்பதுதான்.

சிறை என்பது குற்றவாளியை திருத்தும் இடம் என்பதிலிருந்து மாறி சிறை என்பது பிலிப்பைன்ஸில் ஒரு சித்திரவதைக் கூடமாகவும், நரகமாகவும் மாறி நிற்கிறது. இந்த நிலையை கண்ட ஐக்கிய நாடுகள் சபை, செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகள் வழக்குகளை விரைவாக முடிக்கவும், சிறைகளின் தன்மையை மேம்படுத்தவும் தங்களால் ஆன உதவிகளை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். வரும்காலத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்தப் பிரச்சினைகள் தீரும் என நம்புவோம்.

- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

முந்தைய அத்தியாயம்: சிறைவலம் 2 - பயங்கர கைதிகளை அடக்கும் போலந்து உத்திகள்! 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close