கடைசி பெஞ்சுக்காரி - 7 | சமைத்துத் தீருங்கள்!

  கார்தும்பி   | Last Modified : 11 Jul, 2018 02:12 pm

அவமான நினைவுகள் பல உணவு சார்ந்ததாக இருந்திருக்கிறது என்றாலும், உணவை இன்பத்தோடு மட்டுமே தொடர்புபடுத்த விரும்புகிறோம்.

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து வெவ்வேறு உணவுகள் எனக்கு விருப்பமானவையாக இருந்திருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சீசன். தயிர் சாதம், முருங்கைகாய் சாம்பார், ஐஸ்க்ரீம் (இது வொண்டர் வுமனின் ஃபேவரைட்டும் கூட) சிக்கன் பிரியாணி, பீட்சா என திடீர் திடீர் மோகங்கள் தோன்றி மறையும். என்னுடைய இப்போதைய ஃபேவரைட் வத்தக்குழம்பு எனப்படுகிற புளிக்குழம்பு. கத்திரிக்காய் புளிக்குழம்பு, பாகற்காய் புளிக்குழம்பு, சுண்டக்காய் புளிக்குழம்பு என விதவிதமாக சமைக்கலாம். 

என்னுடைய சமையல் வாழ்க்கை உச்சத்தில் இருந்தது கல்லூரி காலத்தில். நான் தங்கியிருந்த வீட்டில் ஒரு குட்டி கிச்சன் இருந்தது. நிறைய பாத்திரங்களும், கரப்பான்பூச்சிகளும் நிறைந்த கிச்சன் என்றாலுமே நான் அதற்கு என்னை பழக்கிக் கொண்டேன். பெரும் ஆர்வத்தோடு வாங்கிய அரிசியை பொங்கி சோறாக்குவேன். குக்கரில் சோறாக்குவது அதிருப்தியளிக்கும். அரிசியை கழுவி, பொங்கி, கஞ்சித்தண்ணீரை வடித்து, கொஞ்ச நேரம் நீராவியில் வேக வைத்து எடுப்பேன். வெண்மையான, மிருதுவான, ஈரமான, வெதுவெதுப்பான சோறு. கூடவே குழம்பும். சில சமயங்களில் தக்காளியும் உருளைக்கிழங்கும் சேர்த்து சமைத்து ஒரு கூட்டு, சில சமயங்களில் மெனக்கெட்டு தேங்காய் அரைத்து ஊற்றி ஒரு கறி, பெரும்பாலான நேரங்களில் முட்டைப் பொரியலும் சோறும் மட்டும். எத்தனை வருடங்களாக முயற்சி செய்தாலும் ரசம் வைக்கும் கலை மட்டும் கைக்கு எட்டவில்லை.  

பீனா (ரூம் மேட்) எக்காரணத்தைக் கொண்டும் தமிழ் படிக்க மாட்டாள் என்பதாலும், இந்த பத்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வாய்ப்பில்லை என்பதாலும் இதை எழுதுகிறேன். பீனாவிற்கு சமையல் செய்ய கொஞ்சம் கூட விருப்பமும் ஆர்வமும் இல்லாததால், நான் சமைத்ததை எல்லாம் திருடுவாள். நான் சமையல் செய்யாத வேளைகளில் எல்லாம் என்னுடைய டீத்தூளையும், சர்க்கரையையும், அரிசியையும் திருடுவாள். ரொட்டி, உருளைக்கிழங்கு சப்ஜி என சுருங்கும் அவளுடைய சமையல் பற்றிய நினைவுகள் எதுவுமே இல்லை. அதேபோல ஹவுஸ் ஓனர் ஷப்னத்திற்கும் சமையல் மேல் பெரிதாக ஆர்வம் இருக்காது. அவர் சமைக்கும் எதிலும் ஆன்மா இருக்காது. 

இந்தக் கதைகளை எல்லாம் பின்னந்தலையில் ஓடவிட்டுக் கொண்டே இரண்டு பெரும் கதைகளுக்கு போகலாம். ஒன்று, ஜெயமோகனின் சோற்றுக்கணக்கு. இரண்டு, உஸ்தாத் ஹோட்டல். உணவும், அறமும் ஒன்றாய் கலக்கும் புள்ளிகளை பிரம்மாண்டமாக காட்டும் கதைகள் இரண்டும். சோற்றுக்கணக்கில் உணவு பரிமாறிக்கொண்டே இருக்கும் கெத்தேல் சாகிப் போலவும், உஸ்தாத் ஹோட்டல் படத்தில் பிரியாணி சமைத்து பரிமாறி நெகிழும் சல்மான் துல்கர் போலவும் ஒரே ஒரு மனிதரை சந்தித்துவிட்டால் போதும் என இந்த கதைகளை கடக்கும் போதெல்லாம் மனம் பித்தாகும். பசியையும், பேதங்களையும் முழுமையாக அனுபவித்தவர்களின் சமையலில் இருக்கும் ஆன்மா பல பொழுதிற்கும் சேர்த்து மனதை நிறைக்கும்.

ஒரு மனிதரின் இயல்பை அவர் உண்டாக்கும் உணவில் இருந்தே தெரிந்துகொள்ளலாம் என நான் புரிந்து கொள்கிறேன். பீனாவும், ஷப்னமும் நிச்சயமாக அறம் தவறுவதை பெரிய விஷயமாக நினைக்க மாட்டார்கள். இவர்கள் இருவரும் வறுமையினால் திருடுபவர்கள் கிடையாது; கிடைக்கும் வரை எடுப்போம் எனும் சுரண்டல்காரர்கள். இருவருக்கும் இருந்த சுயநலமும், திருட்டுத்தனமும் அவர்களை பல முறை சிக்கலில் மாட்டிவிட்டிருக்கிறது. அவர்களுடைய கிச்சன்தான் அவர்களை காட்டிக் கொடுக்கும் தடயங்கள் நிறைந்த இடம். 

எனில், உங்களை நீங்கள் அறிந்துகொள்ள ஒரு சின்ன சமையல் செய்தால் போதும். சமையல் சுய அறிதலுக்கான வழியை சிவப்பு கம்பளம் போட்டு உங்களுக்கு காட்டும். "ஒரு வாரமா, நான் சமைக்குற எல்லாத்துலையும் உப்பு அதிகமா போடுறேன். முன்னாடி எல்லாம் இப்படி இல்ல. ஸ்பூன் எதுவும் யூஸ் பண்ணாம கையில தானே உப்பு போடுவேன்... பெர்ஃபெக்டா போடுவேன். சமையல்ல உப்பு கரெக்டா போடலேன்னா இவ்ளோ மைண்ட் டிஸ்டர்ப் ஆகும்னு எனக்கு தெரியாது" என்றவரை நான் ஒரு வருடம் காதலித்தேன். ஆனால், மேட்டர் என்னவென்றால், உப்பு தப்பான அளவில் போடுவதனால் மைண்ட டிஸ்டர்ப் ஆகாது. மன அழுத்தம், உளைச்சல், பிறழ்வு எல்லாம் தான் சமையலில் வெளிப்படும். 

நான் எட்டு வயதிலிருந்தே அடுப்படியோடு பரீட்சைகள் செய்து பார்த்தபடியே தான் இருக்கிறேன். ஒரு முறை அப்பளம் சுடும்போது, எண்ணெய் கையில் தெறித்தது. வேறு பெரிய விபரீதங்கள் எதுவும் நடக்கவில்லை. ஆனால், ஸ்ரீஷா (பெஸ்டு ஃப்ரண்டு) முதல் முறையாக சமைக்க முயற்சித்தபோது ஒரு பிளாஸ்டிக் கரண்டியை தோசைக்கல்லில் உருக்கி ஒட்ட வைத்ததாக சொன்னாள். சில மாதங்களுக்கு முன்னர் பார்த்தபோது, மட்டன் கட்லெட்டுகள் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தாள். அதொரு பாய்ச்சல். அடுத்தக் கட்டத்துக்கான நகர்தல். தனித்து வாழ்வதற்கு தேவையான கற்றல். டெய்லி ஹோட்டலில் பீஃப் பிரியாணி சாப்பிடும் நண்பன் 'வெண்டக்காயும் உருளைக்கிழங்கும் போட்டு ஒரு பொரியல் செய்றேன்' என சொல்லக் கேட்பதெல்லாம் பேரின்பம். 

டி.வியில் யாராவது சாப்பிடுவதை பார்த்தலே நமக்கெல்லாம் பசியெடுக்குமல்லவோ? 'மூன்றாம் பிறை' படத்தில் அடுப்பில் இருக்கும் கறி தீய்ந்து போவது, 'அந்த ஏழு நாட்கள்' படத்தில் அம்பிகா மீன் கழுவுவது, 'சிவாஜி' படத்தில் ஸ்ரேயாவுக்கு 'பப்பு மம்மு' ஊட்டிவிட ரஜினி குதிப்பது, 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் சூரி இஷ்டத்துக்கு பரோட்டாவை அடிச்சிவிடுவது, 'மஹேஷிண்டே பிரதிகாரம்' ஃபஹத் ஃபாசில் அப்பாவுக்கு 'கட்டன் டீ' கொடுப்பது, 'அங்கமாலி டைரீஸ்' படத்தில் முயல் கறிக்காக பாரில் நடக்கும் சண்டை (கோவையில் முயல்கறி கிடைக்க வாய்ப்பிருக்கிறதா?)  - இவையெல்லாம் கண் முன் நிறைந்து நிற்கும் பசுமை. 

ஃபாக்ஸ் டிவியில் வரும் பீட்டர் குருவிட்டா, டேவிட் ரோக்கோ, சாரா, டி.எல்.சி சானலில் பெரிது பெரிதாய் கேக் செய்பவர்கள் எல்லாம் தான் எனக்கு வாழும் தெய்வங்கள். இனி ஒரு முறை காதலில் விழ நேர்ந்தால், அது ஒரு சமையல் கலை நிபுணரோடாக இருக்க வேண்டும் என்பது நீண்ட கால பிரார்த்தனை. இதை படிப்பவர்கள் எல்லாரையும் சமையலறைக்குள் அனுப்ப வேண்டும் என்ற கிறுக்குத்தனமான நம்பிக்கையோடு எழுதப்பட்ட பத்தி இது. இறுதி முயற்சியாக இதைச் சொல்கிறேன் - சமையல் செய்வது மனநோய்களுக்கு தீர்வளிக்கும். நம்ப முடியாதவர்கள் எனக்கு கால் செய்யலாம்.

- கார்தும்பி,  பத்தியாளர் - தொடர்புக்கு snehabelcin@gmail.com

| ஓவியம்: சௌந்தர்யா ரவி | 

முந்தைய அத்தியாயம்: கடைசி பெஞ்சுக்காரி - 6 | 'நீங்க அழகா இருக்கீங்க!'

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close