கடைசி பெஞ்சுக்காரி - 8 | ஒரு ட்ரிப் போவோமே!

  கார்தும்பி   | Last Modified : 05 Apr, 2018 04:47 pm

அவன் பெயர் முகில் இல்லை. எனக்கு முகிலை ரொம்பப் பிடிக்கும். நான் அதிக முறை பயணம் செய்தது முகிலோடுதான். தொடர்ந்து 30 மணி நேரம் ரயிலில் இருந்து அவனை சந்திக்க சென்றிருக்கிறேன். அவனும் கவர்மென்ட் பஸ்ஸின் கடைசி சீட்டில் அமர்ந்து பயணித்து என்னைப் பார்க்க வந்திருக்கிறான். சும்மா, அப்படியே கிளம்பி திருச்சி, தஞ்சாவூர் என எங்கேயாவது போய்விட்டு அடுத்த பஸ்ஸில் திரும்பி வருவோம். ஒரு முறை நாகர்கோவிலுக்கு வழியனுப்ப அவன் வந்தபோது, மதுரை தாண்டும் வரை நான் அழுது கொண்டே போனேன் - பிரிவு தாளாமல். ஒரு முறை ஒரு ஸ்லீப்பர் பஸ்ஸின் அப்பர் பெர்த்தில் நட்சத்திரங்களையும், விமானங்களையும், முகத்தில் அறைவது போல வந்த இலைகளையும் பார்த்துக்கொண்டே பயணித்தோம். வேறொரு பயணத்தில் அந்த உறவு முறிந்தது. 

மீண்டும் ஒரு பயண இடைவேளையில், நிலத்திலிருந்து பல அடி உயரத்தில் இருந்துபோது - சுவாசத்தில் சிறு சிக்கலோடு, நான் ஒருவனிடம் காதலை சொன்னேன். நம் வாழ்க்கையில் ஒவ்வொரு சீனும் 'கட்' ஆகும் இடமும், அடுத்த சீன் தொடங்கும் இடமும் ஏதோவொரு பயணமாகத்தான் இருக்கிறதோ? 

'பார்ச்டு' படத்தில் விடுதலை தேடி அந்த மூன்று பெண்களும் பயணிப்பார்கள் இல்லையா? அப்படி, பயணங்கள் விடுதலையை அடிக்கோடிடுவதாக இருக்கிறது. ஒரு 9 டூ 5 வேலை பார்த்துக்கொண்டு தங்களுக்கென ஓர் அன்றாடத்தை உருவாக்கி வைத்திருப்பவர்களுக்கு சற்றே கிடைக்கும் விடுதலையாக பயணங்கள் இருக்கிறதென்றால், வேலை வெட்டியே இல்லாத சிந்தனையாளர்களுக்கு பயணங்கள்தான் பெரும் விடுதலை.

அம்மாவோடு பயணிப்பது நிம்மதியாக இருக்கும். எதிரில் இருப்பது யாராக இருந்தாலும், இரண்டாம் நிமிடத்தில் அம்மாவோடு நட்பாகிவிடுவார்கள். என்னையும், ஸ்வேதாவையும் கொஞ்சத் தொடங்கி விடுவார்கள். எதாவது பேசிக்கொண்டே, வேடிக்கை பார்த்துக் கொண்டே வருவோம். அப்பாவுடன் எங்காவது பயணிப்பது என்றாலே எனக்கு பயம். ஒரு ஃபாண்டா பாட்டிலில் சரக்கை ஊற்றி வைத்துக் கொண்டு, அதை சிப் பண்ணிக்கொண்டே உட்கார்ந்திருப்பார். பஸ்ஸாக இருந்தாலும், ட்ரெயினாக இருந்தாலும் துல்லியமாக பயணம் தொடங்கிய இரண்டு மணி நேரத்திற்குள் அம்மாவோடு சண்டை போடத் தொடங்கியிருப்பார். அத்தனை பேரும் வேடிக்கைப் பார்ப்பது எனக்கும் ஸ்வேதாவுக்கும் அவ்வளவு அவமானமாக இருக்கும். 

கோயம்புத்தூரை விட்டு எங்கேயும் போவதில்லை; போனாலும், அம்மாவை மட்டும்தான் உடன் கொண்டு போக வேண்டும் என நானும், ஸ்வேதாவும் முடிவெடுத்திருந்தோம். ஆனால், பதினாறு வயதில் இருந்தே நான் தனியாக பயணிக்க வேண்டியதாக இருந்தது. ஸ்வேதாவுக்கு உடம்பு முடியாமல் போனதால், அவள் பல முறை அப்பா அம்மாவோடு பயணித்தாள். நான் அவளுக்கு செய்த பெரிய துரோகமே, அவளை அப்பாவோடு பயணிக்க விட்டுவிட்டு மும்பையில் இருந்ததுதான். பயணம் என்பது கெட்ட கனவாய் ஆனது; மும்பையிலிருந்து கோவை வரும்போது தூக்க மாத்திரைகள போட்டுக் கொண்டு வரலாமா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். என்ன இருக்கிறது பயணங்களில்? எதற்காக இப்படி ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்? ஓர் இடத்திலேயே இருந்து, தின்று, வாழ்ந்து, செத்து விழுபவர்கள் எல்லாம் எவ்வளவு அதிர்ஷடசாலிகள்?!

ஸ்வேதா இறந்து சில நாட்களில் அம்மாவும் அப்பாவும் பிரிந்தார்கள். நானும் அம்மாவும் ஒரு பயணம் போனோம். மஞ்சள் நிறப் புடவையில், கலைந்த கேசத்தோடு வெறும் வெயிலில் சொத்தவிளை பீச்சில் அம்மா இருக்கும் புகைப்படம் முழுவதும் பயண வாசம். கடலுக்கு போய்விட்டு வந்த நாளிலிருந்தே, அம்மா கடலைத் தவிர வேறெதைப் பற்றியும் பேசவில்லை. எங்காவது வெளியே போகலாம் என அழைத்தால் 'அய்யோ வீட்ல விட மாட்டாங்கப்பா' என்று பெண்பிள்ளைகள் சொல்வார்கள் தெரியுமா? அப்படி சொல்பவர்களில் ஒருத்திதான் அம்மா. அவர் தன் நாற்பது வருட வாழ்க்கையில் பார்த்த முதல் சுதந்திர கடல் அது. 

அப்போது மீண்டும் மெலிதாய் ஒரு புத்துணர்வு எனக்குள் கூடியது. நான் யாரிடமும் அனுமதி கேட்டு பயணிக்கும் நிலையில் இல்லை என்பதே மகிழ்ச்சி. மற்றபடி ஊர் சுற்றிக்கொண்டே இருக்கும் பெண்களுக்கு எல்லாம் அப்பா, அம்மா இல்லையா? அவர்கள் எப்படி வருகிறார்கள் என்றால்... எப்போதும் ஊர் சுற்றும் பென்னியும், வர்ஷினியும் கோரஸாக சொல்லும் பதில் "என்ன சொன்னாலும் நாங்க கேட்க போறதில்லைனு அவங்களுக்கு தெரிஞ்சிருச்சி... அப்படியே விட்டுட்டாங்க" என்பது தான். இந்தப் பிள்ளைகள் எல்லாம் எனக்கு பயணத்தின் மேல் இருந்த வெறுப்பு மாறக் காரணம்.

பயணங்கள் இனிமையானவை அல்ல. பயணக் காட்சிகள் வேண்டுமானால் பசுமையாக இருக்கலாம். சில சமயம் வெறுமையை மட்டுமே பார்க்கவும் நேரலாம். பயணங்கள் எல்லாமே அசௌகரியமானவைகள். அதுவும் நீங்கள் பெண்ணாக இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு ஒண்ணுக்கு போகவோ, பேட் மாற்றவோ வசதி இருக்காது. மலையுச்சிகளில் மூச்சடைக்கும், ஹேர் பின் பெண்டுகளில் குமட்டல் வரும், வாந்தி வரும். சரியான உணவு கிடைக்காது - பசியால் சில நேரமும், ஃபுட் பாய்சனிங்கால் சில நேரமும் அவதிப்பட வேண்டியதாக இருக்கும். உறக்கம் கெடும். தலைவலி வரும். 

ஆனால், இத்தனையையும் தாங்கிக் கொண்டு நீங்கள் பயணிக்கும்போது, உங்களை போலவே இருக்கும் ஓர் உயிரை தேடிப் போகிறீர்கள் என்பது உண்மை. உங்களின் பிரதியாக ஏதோ நகரிலோ, காட்டிலோ, கோவில் அடிவார கடையிலோ, பேருந்து நிலையங்களில் வெள்ளரிக்காய் விற்றுக் கொண்டோ, உங்கள் பக்கத்து இருக்கையிலோ இருக்கும் அவரை பார்த்ததும் உங்களுக்கு 'க்ளிக்' ஆகும். அவரைப் பற்றிய கதையைத்தான் பயணக் கதையாக சொல்லிக் கொண்டிருப்பீர்கள். அந்த உயிரை பார்த்த சந்தோஷத்தில் வீடு திரும்புவீர்கள். பயணங்கள் மனிதர்களை பற்றியது.

'எதுக்கு ஊர் மேயுற'?, 'எவன் கூட ஊர் மேயுற' போன்ற கேள்விகளையும், 'எனக்கு இருக்கறதே ஒரு புள்ள.. நீயும் இல்லென்னா நான் என்ன பண்ணுவேன்' போன்ற பாசப் பிணைப்புகளையும், 'போகாதே சொன்னா போகாத', 'யான மிதிச்சு சாவப் போற' போன்ற அச்சுறுத்தல்களையும் சிரித்துக்கொண்டு அப்படியே ஜஸ்ட் லைக் தட் தூக்கிப் போட்டுக் கொண்டு பஸ் ஏறுவதுதான் சாகசம். ரோடு ட்ரிப்கள், பைக் ரைடுகள் எல்லாம் கூடுதல் சிறப்பு. ரோட் ட்ரிப் பற்றி எழுதியதால் சொல்கிறேன், இந்த வெள்ளி நானும் பென்னியும் ஸ்கூட்டியில் மன்னார்காடு போறோம். கோவையிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில், பாலக்காடு பக்கத்தில் இருக்கும் மன்னார்காடு. வண்டி இருப்பவர்கள் இணைந்து கொள்ளலாம்.

- கார்தும்பி,  பத்தியாளர் - தொடர்புக்கு snehabelcin@gmail.com

| ஓவியம்: சௌந்தர்யா ரவி | 

முந்தைய அத்தியாயம்: கடைசி பெஞ்சுக்காரி - 7 | சமைத்துத் தீருங்கள்! 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close