சாம்பார் இட்லி மட்டுமே நம்ம அடையாளம் கிடையாது - உணவு விமர்சகர் ஷப்னம்

  Shalini Chandra Sekar   | Last Modified : 05 Apr, 2018 08:22 pm


'வாரத்துல ஒருநாள் வெளில போய் நல்லா சாப்பிடணும், ஆனா எங்க சாப்பிடறது, என்ன சாப்பிடறது' என நமக்குள் ஒரு கேள்வி வரும். அதுமட்டுமில்லாமல், 'விலைவாசியெல்லாம் ஏறிக் கிடக்குது, அதனால காசும் கம்மியா இருக்கணும், சாப்பாடும் நல்லா இருக்கணும்' என யாரிடமாவது 'ஐடியா' கேட்டால், அவர்கள் சற்று புருவத்தை உயர்த்தி நம்மை ஏற இறங்கத்தான் பார்ப்பார்கள். 'சரி நம்மளே போய், குத்து மதிப்பா ஒரு ஹோட்டல்ல சாப்பிடுவோம்' என்றால், 'அது நல்லா இல்லாட்டி உன் காசு வேஸ்ட்' என நம் மனசாட்சி நம்மை எச்சரிக்கும். 


சரி... அதுக்கு இப்போ என்ன தான் பண்றது? எனக் கேட்கிறீர்களா, பொதுவாக நாம் தெரிந்துக் கொள்ள ஆசைப்படும் எல்லா விஷயங்களையும் 'கூகிள்' செய்வது நம்முடன் பிறக்காத ஒன்றாகிவிட்டது. அப்படியே ஃபேஸ்புக்கிலும் தேடுவோம். அப்படி ஃபேஸ்புக்கில் இருக்கும் உணவுப் பிரியர்களுக்கு, 'வேர் சென்னை ஈட்ஸ்' என்ற பக்கம் தெரிந்திருக்காமல் இருக்காது. அந்தப் பக்கத்தை பின் தொடர்கிறவர்களுக்கு உணவுப் பிரியை ஷப்னம் பற்றி தெரியாமல் போக வாய்ப்பே இல்லை.

இன்று பெரியளவில் பேசப்படும் மெரீனா பீச் சுந்தரி அக்கா கடை, மந்தவெளி டிரவுஸர் தாத்தா, பார்க் டவுன் தஞ்சாவூர் மிலிட்டரி ஹோட்டல் என பல இடங்களைப் பற்றி ஃபேஸ்புக்கில் முதன் முதலில் எழுதியவர். அதன் பின்னர் தான் பலரும் தேடிச் சென்று சுவைத்தார்கள், கூடவே மீடியாக்களின் பார்வையும் அவர்கள் மீது பட்டது. அவரைப் பற்றி இன்னும் தெரிந்துக்கொள்ள சூடாக சிக்கன் கரி தோசையும், முட்டை பணியாரத்தையும் ஆர்டர் செய்துவிட்டு,  பேசத் தொடங்கினோம். 


"நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைல தான். எம்.பி.ஏ மார்க்கெட்டிங் முடிச்சேன். சின்ன வயசுல இருந்தே நான் உணவுப் பிரியயை. உணவு சம்பந்தமா படிக்கிறது, வீடியோ பாக்குறதுன்னு இருந்த நான், ஒரு கட்டத்துல ரோட்டோரக் கடைகள்ல இருந்து ஸ்டார் ஹோட்டல் வரைக்கும் எல்லா கடைகளுக்கும் போய் விதவிதமா சாப்பிட ஆரம்பிச்சேன். அப்படி சாப்பிட்டத என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட ஷேர் பண்றதோட, என் ஃபேஸ்புக்லயும் எழுத ஆரம்பிச்சேன். அப்புறம் 'வேர் சென்னை ஈட்ஸ்', என்னோட 'மை டிரஸ்ட் வித் ஃபுட்' ஆகிய பேஜ்கள்லயும் எழுதுறேன்.

கடந்த மூணு வருஷமா 400 இடங்களுக்கு மேல விசிட் பண்ணிருக்கேன். பட் இப்போ தான் ஓரளவு சென்னையே முடிஞ்சிருக்கு, அப்பப்போ மத்த மாவட்டங்களுக்கு போய்ட்டு இருந்த நான், இனி தீவிரமா இறங்கணும். வீட்ல அப்பா, அம்மாக்கிட்ட 'பிளாக்'குகாக வெளியூருக்குப் போகணும்ன்னு சொன்னா, சரி வா போகலாம்ன்னு சொல்ற அளவுக்கு நல்லா என்ன புரிஞ்சிக்கிட்டாங்க. 


நல்லா இருக்கு, நல்லா இல்லைன்னு உள்ளத உள்ளபடியா எழுதறனால நிறைய பஞ்சாயத்துக் கூட நடந்திட்டு இருக்கு. ஆனா நல்லா இல்லைன்னாலும் கரெக்டான காரணத்தோட தான் எழுதுவேன். இந்த மாதிரி 'நெகடிவ்' ரேட்டிங் கொடுத்திருந்தா, மூணு மாசம் கழிச்சு திரும்பவும் அந்த இடத்துக்குப் போய் சாப்பிட்டுப் பாப்பேன், அப்போ நல்லா இருந்தா அதையும் நிச்சயமா எழுதுவேன். ஆனா ரெண்டாவது முறை போறப்போ, அந்தளவுக்கு நம்மள கூலா ஹேண்டில் பண்ண மாட்டாங்க, உள்ளுக்குள்ள ஒரு காட்டம் வச்சிருப்பாங்க. இதனால நிறைய ரெஸ்டாரெண்ட் ஓனர்ஸ் கூட எனக்கு பிரச்னை இருக்கு. நிறைய பேர் இந்தப் பொண்ணு காசுக்காகத் தானே இப்படி எழுதுறா, சரி வாம்மா, பேசி தீத்துக்கலாம்ன்னு ஒரு விலை பேசுவாங்க, ஆனா அது என் நோக்கம் இல்ல. 


உணவு மேல இருக்க பிரியத்துல இடையில வேலையெல்லாம் விட்டுட்டு, ரெண்டு நிறுவனங்களுக்கு 'ஆர்கனோலெப்டிக்'னு (Organoleptic) சொல்லக் கூடிய கன்சல்டிங் பண்ணிட்டு இருந்தேன். அவங்க கொடுக்குற உணவை டேஸ்ட் பண்ணி அதுக்கு ரேட்டிங் கொடுக்கணும். அதுக்கப்புறம் தான், அந்த உணவை அவங்களோட கஸ்டமர்ஸுக்குக் கொடுப்பாங்க. கிட்டத்தட்ட 'டெஸ்டிங் மவுஸ்' மாதிரி தான், ஆனா இப்போ திரும்பவும் என் மார்க்கெட்டிங் துறைக்கு திரும்பிட்டேன். 

என்னோட இந்த உணவு பிரியத்துக்காக போன வருஷம் ஏப்ரல்ல ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் மும்பைல வச்சு எனக்கு, 'Live Your Passion'ன்னு ஒரு விருதும் கொடுத்தாங்க. உங்களுக்குப் பிடிச்சதை செய்யக் கூடாதுன்னு நினைக்குறதுக்கு, 100 காரணங்கள் சொல்லலாம், ஆனா செய்யணும்ங்கறதுக்கு ஒரு காரணம் நிச்சயம் இருக்கும். அந்த பாஸிட்டிவ் பிடிவாதத்தை கெட்டியா பிடிச்சுக்கணும். 


உணவைப் பொறுத்தவரைக்கும் இந்தியான்னு எடுத்துக்கிட்டா எல்லாரும் மும்பை, டெல்லின்னு நார்த் சைட் உணவுகளைப் பத்திதான் பேசுவாங்க. தமிழ்நாட்ட பத்தி பேசினாலும் சாம்பார் இட்லியையும், ஃபில்டர் காபியையும் தான் சிலாகிச்சுப் பேசுறாங்க. ஆனா, நம்ம கிட்ட இதுக்கு மேல எவ்வளவோ இருக்கு. செட்டிநாடு, மதுரை, கொங்குநாடு, தஞ்சாவூர் உணவுன்னு எல்லாரும் கொஞ்சம் ஆழமா பேசணும். இந்த உணவுகள் தான் நம்மளோட பாரம்பரியம்" என அழுத்தமாக ஷப்னம் சொல்லி முடிக்கும் போது கரி தோசையும், பணியாரமும் காலியாகியிருந்தது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.