கடைசி பெஞ்சுக்காரி - 9 | சமூக வலைதளமும் அரைவேக்காட்டுத்தனமும்!

  கார்தும்பி   | Last Modified : 09 Apr, 2018 12:52 pm

சம்பவம் - 1

கடந்த வாரத்தில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியிருந்த ஹேஷ்டாக்குகளில் ஒன்று 'ஓர் ஆண் எழுத்தாளர் உங்களை எப்படி வர்ணிப்பார் என்று எழுதுங்கள்'  - describe yourself like a male author would. ஓர் ஆண் எழுத்தாளர் தன் கதையில் வரும் பெண்களை எப்படி வர்ணிக்கிறார் என்பது குறித்தான பெண்களின் அனுமானத்தை பெறும் நோக்கோடு இந்தக் கேள்வி முன் வைக்கப்படுகிறது.

இதற்கு எதிர்வினையாக வந்த பெண்களின் பதில்கள் எல்லாமே 'அவளுடைய மார்பகங்கள்', 'அவளுடைய வளைவுகள்', 'அவளுடைய மேனி' எனத் தொடங்குபவையாகவோ, முடிபவையாகவோ இருந்தன. இதன் வழியே இந்தப் பெண்கள் அப்பட்டமாக்கியது எதையென்றால், ஆண் எழுத்தாளர்கள் பெண்களை உடலாக மட்டுமே விவரிக்கிறார்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த அல்லது மனதுக்கு நெருக்கமானவராக உணரும் ஆண் எழுத்தாளரும் இதை செய்திருப்பார். நான் கொண்டாடும் எழுத்தாளரும் கோவைப்பழ உதடுகள் பற்றி எழுதியிருப்பது சடாரென ஞாபகத்திற்கு வந்தது. கூடவே ஞாபகம் வந்தது, தன்னைப் பெண்ணாய் உணர்ந்து தலைவனை நினைத்து காதல் பாடும் ஆண் கவிகளை.

பெண்களாய் இருக்கும் நீங்கள் எப்படி வர்ணிக்கப்பட விரும்புகிறீர்கள் என்றும், உங்களுடைய காதல் உணர்ச்சிகள் பற்றியும் நீங்கள் எழுதுங்களேன்.

சம்பவம் - 2 

ஜ்யோதி திவாரி என்றொருவரின் முகநூல் பதிவு ஒன்று யாரோ எப்படியோ பகிர்ந்து நான் பார்க்க நேர்ந்தது. 

தலித்துகளும் பெண்ணியவாதிகளும் எப்படி ஒன்று போல இருக்கிறார்கள்...

1. இரு வகையினரும் காலம் தொட்டே அடிமைப்படுத்தப்பட்டதாக சொல்லிக் கொள்வார்கள். 

2. எத்தனை சலுகைகள் இருந்தாலும் ஒடுக்கப்படவே விரும்புவார்கள்.

3. சமத்துவம் எனும் பெயரில் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கையிலெடுக்க நினைப்பார்கள்.

4. இரு வகையினருமே 5000 ஆண்டுகளுக்கு முன் யாரோ யாரையோ அடிமைபடுத்தியதற்காக தற்போது அப்பாவிப் பிள்ளைகளை சிறைக்கு அனுப்ப நினைப்பார்கள்.

5. உங்களுடைய கருத்துக்களை சொன்னால் சங்கடப்படுவார்கள்.

6. இருவருமே இந்து எதிர்ப்பு அஜெண்டாவோடு இருப்பார்கள்.

குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஜ்யோதி திவாரி ஒரு எழுத்தாளராம். புத்தகம் வெளியிட்டிருக்கிறாராம்.

*

ஒரு பக்கம் போலியான பெண் பாத்திரங்களை படைக்கும் ஆண் எழுத்தாளர்கள்; மறுபக்கம் கிடைத்த இடத்தில் பிற்போக்குத்தன நஞ்சை விதைக்கும் பெண் எழுத்தாளர்கள். இந்த இரு பிரிவினரையும் அழித்தொழித்து அந்த இடத்தில் காலூன்ற வேண்டியது முற்போக்கான  பெண் படைப்பாளிகள். இது எத்தனை தெளிவானதாக, வெளிப்படையானதாக இருக்கிறது? ஆனால், அரிதினும் அரிதாகவே பெண்களால் இப்படியான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன, இப்படியான படைப்பாளிகள் கண்ணில் படுகிறார்கள். 

ஓங்கி வளர்ந்திருக்கும் சமூக வலைதள எழுத்துலகில் பெரும்பாலான இடங்களில் எல்லாம் அரைவேக்காட்டுத்தனமான படைப்புகள் - முழுவதுமான Mediocrity. மாயா ஆஞ்சலோவும், இசபெல் ஆலண்டேவும், கமலா தாஸும் நம்மை பிரமிக்கச் செய்தவர்கள் இல்லையா? ஹனா மக்மல்பஃப் தன்னுடைய பத்தொன்பது வயதில் இயக்கிய 'புத்தா கொலாப்ஸ்டு அவுட் ஆஃப் ஷேம்' (பார்த்திருக்கிறீர்களா? அதில் எந்த இடத்திலாவது படைப்பாளி சமரசம் செய்ததாக தெரிகிறதா? இப்படி பல படைப்பாளிகள் போராட்டத்தால் கிடைத்திருக்கும் தளத்தில்,

நான் காத்திருந்து

காத்திருந்து

கரைந்து

போனேன்

என்கிற ரீதியில் கவிதைகள் எழுதுவது நியாயமா?

தட்டையான, அரைவேக்காட்டுத்தனமான படைப்புகளை உண்டாக்காமல் இருக்கும் சில வழிமுறைகள்:

1) 'உங்களிடம் இருந்து வெடித்து வெளியேறவில்லை இல்லை என்றால் அதைச் செய்யாதீர்கள்' என்ற சார்லஸ் புக்கோவ்ஸ்க்யின் கவிதையை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். நிச்சயமாக இதைப் பதிவு செய்தே தீர வேண்டும் எனத் தோன்றுபவைகளை மட்டுமே கலையில் செலுத்துங்கள். உங்களுடைய ஃபேஸ்புக் நண்பர்கள் கவிதை எழுதுகிறார்கள் என்பதற்காகவும், உங்களுடைய இஞ்சினியரிங் நண்பர்கள் குறும்படம் எடுக்கிறார்கள் என்பதற்காகவும், உங்களுடைய விஸ்காம் நண்பர்கள் டி.எஸ்.எல்.ஆர் வாங்கியிருக்கிறார்கள் என்பதற்காகவும் நீங்களும் அதையே செய்ய வேண்டும் என அவசியமில்லை.

2) உங்களிடம் இருந்து பீய்ச்சிக் கொண்டு ஒரு கதை வெளியே வந்துவிட்ட நிலையில், அதை விட குறைவானது எதற்கும் ஓகே சொல்லாதீர்கள். Do not settle for less. 'சந்துருவுக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது' என்று ஒற்றை வரியில் என்னால் கடக்க முடியவில்லை என பல பக்கங்களுக்கு அறுவை சிகிச்சையின் விபரங்களை எழுதியவர் நம் மண்ணில் உண்டு.

3) சமரசங்களுக்கு 'நோ'. வீட்டில் இருப்பவர்கள் படித்தால் திட்டுவார்கள் என்று நினைத்ததை எழுதாமல் இருப்பது - இதைப் பற்றியெல்லாம் எழுதினால் மானம் போய்விடும் என நினைத்ததை எழுதாமல் இருப்பது; உங்களுடைய ஷார்ட் ஃப்லிம் வேலை நடந்துக் கொண்டிருக்கும்போது சக கலைஞர்கள் சொல்லும் சாக்குகள்; போர் வன்முறைகளை கவர் செய்யும் திறமை இருக்கும் வேளையிலும் 'தீபாவளி சமையல் குறிப்பு' எழுதச் சொல்லும் பொறுப்பாசிரியர் - இந்த மாதிரியான compromises-களுக்கு முகத்தில் அடித்து மறுப்பு சொல்லுங்கள். 

4) எது ஆக்கப்பூர்வமான விமர்சனம், எது வெற்று வயிற்றெரிச்சலின் பிதற்றல் என்பதை இனம் காணுங்கள். எப்போது தேவதையாக இருக்க வேண்டும், எப்போது தலைக்கு மேல் சிவப்பு கொம்புகள் வர வேண்டும் என்பதையும் கணிக்கத் தெரிந்துக் கொள்ளுங்கள். 

5) உங்களின் களம் எதுவாக இருந்தாலும் முழு நம்பிக்கையோடு, அர்ப்பணிப்போடு செயல்படுங்கள். காமக்கதைகள் எழுதுவது தான் உங்களுடைய விழைவு எனும்போது அது 'Fifty shades of grey' போன்ற ஒரு மொக்கையான படமாக உருவாகாத வகையில் புத்துணர்ச்சியோடு செயல்படுங்கள். 'எது உங்களை அதிகம் பயப்படுத்துகிறதோ அதைப்பற்றி எழுதுங்கள்' என்று சொல்லியிருக்கிறார்கள், இல்லையா? உங்களின் பெரிய அச்சத்தை தைரியமாக எழுதுங்கள் / வரையுங்கள். நேட்டிவிட்டி இல்லாத படைப்புகள் வெகு சீக்கிரத்தில் மறக்கப்படும்.

6) இவ்வளவுதான் நான் என்றொரு கட்டத்திற்குள் அடங்காதீர்கள். 'அங்கமாலி டைரீஸ்' படம் பார்த்ததில் இருந்தே 'தூள்' சொர்ணாக்கா,  'முதல்வன்' படத்தில் வரும் அம்மா, 'கடல்' படத்தில் மீன் விற்பவர் எல்லாரையும் ஒரு கதையில் கோர்த்து ஒரு படம் எழுத வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு காங்க்ஸ்டர் படம். இந்த மாதிரியான கிறுக்குத்தனமான ஐடியாக்களை ஊக்குவியுங்கள்.

7) படைப்பை உண்டாக்கியிருப்பது சக பெண் என்ற ஒரே காரணத்திற்காக, அந்தப் படைப்பை தலையில் தூக்கி வைத்து ஆடாதீர்கள். படைப்பில் கோளாறுகள் இருக்கும் பட்சத்தில் 'என்ன எழுதியிருக்க / வரஞ்சிருக்க/ நடிச்சிருக்க?' என சட்டையைப் பிடித்து கேள்வி கேளுங்கள். 

8) அறிவுரை பட்டியல் எழுதுபவர்கள் எல்லாரும் அரைவேக்காடுகளாக இருக்கும் வாய்ப்பு அதிகம் என்பதை மறவாதீர்கள். உங்களுக்கான இலக்கணத்தை நீங்களே வகுப்பதுதான் சிறப்பு.

- கார்தும்பி, பத்தியாளர் - தொடர்புக்கு snehabelcin@gmail.com

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close