கடைசி பெஞ்சுக்காரி - 11 | சமகாலத்தின் தனியொரு மீட்பர்!

  கார்தும்பி   | Last Modified : 23 Apr, 2018 05:18 pm

போன வருடம் மும்பையில் நடந்த 'டைம்ஸ் லிட் ஃபெஸ்டுக்கு' காலேஜில் இருந்து போயிருந்தோம். அழகான சந்தன நிற குர்தா முழுக்க வேர்வை வடிய, சூரியனுக்கு நேரே கீழே அமர்ந்து, ஒரு பேனலில் பேசிக் கொண்டிருந்தார் ஜெர்ரி பிண்டோ (ஜெர்ரி பிண்டோவின் 'எம் அண்ட் தி பிக் ஹூம்' புத்தகம் மீது விமர்சனங்கள் ஒருபுறம் இருக்கட்டும்). எனக்கு ஜெர்ரி பிண்டோவை ரொம்ப பிடிக்கும். ஜெர்ரி பிண்டோ வாழ்ந்த / வாழும் பம்பாய் ரொம்ப பிடிக்கும். நான் அப்படியே வாயைப் பிளந்து ஜெர்ரி பிண்டோவை பார்த்துக் கொண்டு மட்டுமே இருந்தேன். 

'ஜெர்ரி பிண்டோ தானே? என் கூடதான் நின்னு சாண்ட்விச் சாப்டுட்டு இருந்தாரு' என்று கூடியிருந்தவர்கள் எல்லாரும் கிண்டல் செய்யும் அளவு வாயைப் பிளந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படி ஓர் ஆளுமையை பார்ப்பது எனக்கு ஆச்சரியம். அதை விட ஆச்சரியம் என்னவென்றால் லிட் ஃபெஸ்டுக்கு வந்திருந்த மற்ற ஆளுமைகள். மற்ற ஆளுமைகள் என்பது பிற பிரபலங்களை அல்ல, பார்வையாளர்களை. 

எனக்கு நிச்சயமாக ஞாபகம் இருக்கிறது - வந்திருந்தவர்களில் அத்தனை பேரும் நம்ப முடியாத தனித்தன்மையோடும், தன்னம்பிக்கையோடும் இருந்தார்கள். 'ரூபி ஸ்பார்க்ஸ்' படத்தில் அந்த நாவலாசிரியன் தன்னுடைய கதாபாத்திரத்தை எந்த வார்த்தைகளால் வர்ணிப்பானோ, அந்த வார்த்தைகளுக்கு வடிவம் அளிப்பவர்களாய் அத்தனை பேரும் இருந்தார்கள். 

பெரிய கண்ணாடியும், கசங்கிய மேல்சட்டையும், வியர்த்த நெற்றியில் கலைந்து போய் இருந்த ஃப்ரிஞ்ச் முடியுமாய் ஒருத்தி இருந்தாள்; அநாயாசமாக ஒரு காட்டன் சேலையை உடுத்திக்கொண்டு, அது கலைந்தாலும் கவலைப்படப் போவதில்லை என்பது போல ஒருத்தி; ஓர் எழுத்தாளரின் ஸ்டாலில் பதின்வயதில் இருந்த சிறுவர்கள் நின்று குழைந்துகொண்டே கதை கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

மும்பையில் அந்த சமயத்தில் 'ஜட்ஜ்மெண்டலாக' இல்லாத கூட்டம் அங்குதான் இருந்திருக்கும். கர்வம் இல்லாத பார்வைகள், ஜோடனை இல்லாத புன்சிரிப்புகள், கொஞ்சம் அசௌகரியமான தழுவல்கள் - எழுத்தும், வாசிப்பும் இதைத்தான் சாத்தியப்படுத்துகிறது! ஏற்கெனவே, பலர் சொல்லக் கேட்டிருந்தாலும், இன்னொரு முறை நினைவுறுத்துகிறேன் - வாசிப்பு மனிதனை பண்படுத்தும். வேண்டுமென்றால், 'தி ரீடர்' படத்தில் கேட் வின்ஸ்லெட்டின் பெர்ஃபாமென்ஸை ஒருமுறை பாருங்கள், புரிந்துகொள்வீர்கள்.

 ***

இரண்டாவதோ, மூன்றாவதோ படிக்கும்போது தமிழ் பாடப்புத்தகத்தில் 'மாய மாம்பழம் நான் தானே... மலையில் இருந்து வந்தேனே' என்றொரு பாட்டு இருந்தது. பல வண்ணங்களோடு இருந்த அந்தப் புத்தகம்தான் நான் பெரிதாய் ரசித்த புத்தகமாய் இருக்கக் கூடும். அடுத்து ரயிலில் தொலை தூரம் பயணிக்கும்போது அம்மா வாங்கிக் கொடுக்கும் கதை புத்தகங்கள். அடுத்த பாய்ச்சல் நேரடியாக சுஜாதாவிற்கு தான். புத்தகங்களை நேசிப்பவர்களுக்கு எதாவது ஒரு காலத்தில் புத்தகங்கள் போதை வஸ்துவாக இருந்திருக்கும். எனக்கு அப்படி இருந்தது பனிரண்டு வயதில். எனக்கென்னவோ தொண்ணூறுகளில் பிறந்தவர்கள் எல்லோரும் சுஜாதாவில் இருந்துதான் தொடங்கியிருப்பார்கள் என்று தோன்றுகிறது. உள்ளூரில் இருந்த லைப்ரரியில் இருந்த சுஜாதாவின் புத்தகங்கள் அத்தனையையும் எடுத்து வாசித்துக் கொண்டிருந்தேன். 

சுவாரசியமாக, நான் படித்த பள்ளிகளிலும், கல்லூரியிலும் வாசிப்பனுபவத்தை சிலாகிக்க ஆட்களே இல்லை. எல்லோருக்கும் 'பென் 10'னும், 'பவர் ரெஞ்சர்'ஸும் தான் தெரிந்திருந்தது. இதையெல்லாம் தாண்டி அவர்கள் எதையாவது வாசிக்கிறார்கள் என்றால் - அடித்து சத்தியம் செய்ய நான் தயார் - அது சேத்தன் பகத், நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ், ரவிந்தர் சிங் ஆகிய மூவரில் ஒருவராகவே இருக்கும். இப்படி ஏமாற்றமளிக்கும் கூட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் நம்பிக்கை அளிக்கக்கூடிய வாசிப்பு பழக்கம் இருக்கும் இளைஞர் கூட்டமும் ஒரு பக்கம் இருக்கிறது.

'ஜெயமோகன் ஆர்.எஸ்.எஸ்-னு ஊருக்கே தெரியும்' என்றதற்கு பதிலாக ஜெயமோகனின் 'வெண்கடல்' தொகுப்பின் முதல் கதையை ஒப்பித்தான் கார்த்தி. பி.எஸ்.ஜி காலேஜில் கிராவுக்காக விழா நடத்தியபோது அவருடைய கதை ஒன்றை நடைமாறாமல் சொன்னான் பிரதீப். கூடவே நிறைய பிள்ளைகள் ஒவ்வொரு கதைகளாக அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தனர். ஓரான் பாமுக்கின் கதைகளை விவாதிக்க தயாராக இருக்கிறார்கள். எப்படி எப்படியோ எழுதி எக்ஸ்பரிமெண்ட் செய்து பார்க்கிறார்கள்.

***

நான் இப்போது கு.அழகிரிசாமியின் 'ராஜா வந்திருக்கிறார்' படித்துக் கொண்டிருக்கிறேன். வழக்கத்திற்கு மாறாக, ஒவ்வொரு கதையை படித்து முடித்த பிறகும் புத்தகத்தை நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறேன். ஏதோ, கதைகளில் வரும் ராஜாவையும், பாலம்மாளையும், சாரங்கனையும் அணைத்துக் கொள்வதாய் ஒரு நினைப்பு. திடீரென, எதாவது ஒரு கதைக்குள் புகுந்துவிடலாம் போல இருக்கிறது. அப்படி எதாவது ஒரு கதைக்குள் புகுந்துவிட முடியுமென்றால் நான் 'அன்பளிப்பு' கதைக்குள்தான் புகுந்து கொள்வேன். சாரங்கனை மட்டுமாவது பார்த்துவிட்டு புத்தகத்திற்கு வெளியே குதித்து விடுவேன்.

வாசிப்பனுபவம் மிகைப்படுத்தி புகழப்படுகிறது, புத்தகப் புழுக்கள் எல்லாருமே அசாதாரணமானவர்களாக / விசித்திரமானவர்களாக இருப்பார்கள். வாசிப்பு மட்டுமே சிறந்த பொழுதுபோக்கு கிடையாது என வாசிப்பை சுற்றி புது விவாதங்களை கேட்கிறோம். அவை சரியானவையாக கூட இருக்கலாம். வாசிப்பை மிகைப்படுத்தி சொல்லி ஒரு தலைமுறையினரை வாசிப்பு பழக்கத்திற்குள் கொண்டு வர வாசிப்பவர்கள் செய்யும் மந்திரமாக கூட இருக்கலாம். ஆனால், அத்தனை திசைகளிலும் வெறுப்பும், வன்முறையும் பரவிக் கிடக்கும் சமகாலத்தில் வாசிப்பில்லாமல் வேறெப்படி நாம் மீட்கப்படுவோம் என நினைக்கிறீர்கள்? ஆம், சமகாலத்தின் தனியொரு மீட்பர் என்றால் அது வாசிப்பு மட்டுமே!

ஒரு நல்ல புத்தகம் அளவு எந்த மனிதரும் உங்களிடம் நேர்மையாக இருக்கப் போவதில்லை. ஒரு நல்ல புத்தகம் அளவு எந்த மனிதரும் உங்களிடம் பகிர்ந்துகொள்ளப் போவதில்லை. எழுத்தும் வாசிப்பும்தான் கல்வி. எழுத்துதான் எண்ணங்களை தூண்டுகிறது.

- கார்தும்பி, பத்தியாளர் - தொடர்புக்கு snehabelcin@gmail.com

| ஓவியம்: சௌந்தர்யா ரவி | 

முந்தைய அத்தியாயம்: கடைசி பெஞ்சுக்காரி - 10 | போராட்டம் நல்லது!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close