கடைசி பெஞ்சுக்காரி - 4 | துப்பட்டாவும் பிற படிப்பினைகளும்!

  கார்தும்பி   | Last Modified : 11 Jul, 2018 02:13 pm

பெண்பிள்ளைகளுக்கு வழக்கமாக அப்பாவைத் தானே பிடிக்கும்? எனக்கு அம்மாவை மட்டும்தான் பிடிக்கும். அம்மாவோடு நிறைய நேரம் இருந்திருக்கிறேன். அவரது போராட்டங்களை எல்லாம் நேராகப் பார்த்திருக்கிறேன் என்றாலும் அம்மாவை ரொம்ப பிடிக்கக் காரணம் - அடிப்படையில், அம்மா 'பாவம்', அம்மா பலவீனமாக இருக்கிறாள், அம்மா கற்பனை செய்ய முடியாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறாள் என்பதுவாகவே இருக்கும். அம்மா வலிமையாக இருக்கிறாள் என்பது அடிக்கடி நினைவுக்கு வரும் என்றாலும் 'அனுதாப அன்பு' ஓடை போல ஓடிக்கொண்டே இருக்கும். இதனால்தான் அம்மாக்கள் செய்யும் தவறுகளை பற்றியெல்லாம் பேச முடிவதே இல்லையோ? நம்முடையது தாய்வழிச் சமூகம். இங்கு குழந்தை வளர்ப்பில் அதிகம் பங்கெடுப்பது தாய்தான். எனில், அந்தத் தாய் எவ்வளவு முற்போக்கு சிந்தனையுடன் இருக்க வேண்டும்? 

*

ஒரு கோடை விடுமுறை சமயம், நானும் தங்கையும் வீட்டில் தனியே இருக்கிறோம் - எனக்கு பதினோரு வயதும், ஸ்வேதாவுக்கு ஒன்பது வயதும் இருக்கும். பக்கத்தில் ஒரு வீட்டின் கட்டுமானப் பணி நடந்துக் கொண்டிருந்தது. நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். அங்கே வேலை செய்து கொண்டிருந்தவர்களின் குழந்தைகளும் செங்கல் சுமப்பது போன்ற சின்னச் சின்ன வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள். அங்கேயே நின்று பேசி, பழகி நாங்கள் இரண்டு பேருமே அந்தக் கூட்டத்திற்குள் இறங்கி வேலை செய்யத் தொடங்கி விட்டோம். உழைப்பது உற்சாகமாக இருந்தது, வேறு எது பற்றியும் நாங்கள் யோசித்திருக்கவில்லை. மாலை அம்மா வேலை முடிந்து வந்தார். நாங்கள் இருவரும் வேலை செய்துகொண்டிருப்பதைப் பார்த்தார். அடுத்த ஒரு மணி நேரத்தில் கோவையிலிருந்து ஈரோடு கிளம்பினோம். அம்மா எதுவுமே பேசவில்லை - ஈரோட்டில் பெரியம்மா வீட்டிற்கு போய் சேர்ந்தபோது, 'அமைதியா சாப்டுட்டு டிவி பார்த்துட்டு வீட்டுல இருக்காம, அந்த ***** காஸ்ட் ஆளுங்களோட நின்னு வேலை செய்யுதுங்க அக்கா... எனக்கு பார்த்த உடனே எப்படி இருந்திருக்கும்?' என அதிர்ச்சி மாறாமல் பெரியம்மாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார். 

எனக்கு 'சாதி' பரிச்சயமான பல சந்தர்ப்பங்களில் இது முதன்மையானது. 'ஸ்கூல் படிக்குற வரை அமைதியா இருக்கதுக எல்லாம் காலேஜ் போனதும் ரவுசு பண்ணுதுக' எனச் சொல்லக் கேட்டிருக்கிறீர்களா? ஒரு குழந்தையைப் பிற்போக்குத்தன சிந்தனைகளோடு வைத்துக் காப்பத்தில் பள்ளிக் கூடத்திற்கும், தாய்மார்களுக்கும் பெரிய பங்கு இருக்கிறது - குறிப்பாக பெண்களைப் பெற்ற அம்மாக்களுக்கு. கல்லூரிகள் திறந்து விடும் கதவுகளுக்கு கோடான கோடி நன்றிகள். கல்லூரியில் பயிற்றுவிக்கப்படும் பாடங்கள் அல்ல, கல்லூரி கொடுத்த அனுபவங்களும், பார்ன் பேன் தொடங்கி ஜி.எஸ்.டி வரை எதைப்பற்றி வேண்டுமானாலும் பேச கிடைத்த பேச்சு சுதந்திரமும் தான் பகுத்தறிவை சாத்தியப்படுத்துகிறது. இப்படி ஒரு பேச்சு சுதந்திர சூழலை வீட்டிலேயே உருவாக்க வேண்டுமல்லவா? 

'சென்னை பொண்ணுங்கடா' என்ற ஃபேஸ்புக் பேஜில் 'துப்பட்டா போடுங்க தோழி, லெக்கின்ஸ் போட்டா முட்டி வரைக்கும் வர்ற மாதிரி டாப்ஸ் போடுங்க தோழி' என அறிவுரை சொல்பவர்களை எல்லாம் நம்மால் விமர்சிக்கவும், வசை பாடவும் முடியும். ஆனால், 'அஞ்சாதே மனமே செல்!' 'சென்று வா! வென்று வா! மகளே!' என பாடிய பின் 'ஒரு நிமிஷம் நில்லு, இப்படியேவா போற?' எனக் கேட்கும் அம்மாக்களோடு விவாதம் கூட செய்ய முடியாது. துப்பட்டா அறிமுகமாகி அவசியமாவதும், உணவுக் கட்டுப்பாடு பயிற்றுவிக்கப்படுவதும், நியாயமேயில்லாத நிபந்தனைகள் பிரச்சாரம் செய்யப்படுவதும் அம்மாக்களால்தான்! 

இப்படித் தேவையில்லாத ஒழுக்கத்தை எல்லாம் மெனக்கெட்டு நெறியாக்கும் தாய்மார்கள் பாலியல் கல்வி பற்றியும், வளர்ச்சிக்கு தேவையான தன்னம்பிக்கை பற்றியும், உலகம் உருவாகியிருக்கும் 'அழகு' எனும் பிம்பத்தை உடைப்பது பற்றியும் கவலைப்படுவதே இல்லை. 'பாய்ஸ் டச் பண்ணாலே கன்சீவ் ஆயிடுவ' என்ற ஒரு அம்மா , 'கடலமாவு போட்டுக் குளிச்சா நல்லா கலராய்டுவ' என்ற ஒரு அம்மா, ' பஸ்ல எல்லாம் போக வேண்டாம், அப்பா கொண்டுபோய் விடட்டும்' என்ற ஒரு அம்மா, 'நம்ம சாதி இல்லென்னாலும் பரவாயில்ல, லோ-காஸ்ட் பையன கூட்டிட்டு ஓடிடாத' என்ற ஒரு அம்மா, 'இந்தப் பொழப்புக்கு தூக்கு மாட்டிக்கலாம்' என்று சொல்லி மகளின் தற்கொலைக்கு காரணமான ஒரு அம்மா, 'ஹோமோசெக்சுவல்- எல்லாம் கெட்ட வார்த்தை' என்ற ஒரு அம்மா - இப்படி ஏமாற்றமளிக்கும் அம்மாக்களை எல்லாம் நான் தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருக்கிறேன்.

இதைவிட கொடுமையான ஒரு குணம் அம்மாக்களிடம் இருக்கிறது - அடிபணிவது, அடிபணியச் செய்வது. ரொம்ப சாதாரணமாக அம்மாக்கள் இதை செய்கிறார்கள். 'எனக்கு என்ன தெரியும்? நீங்களே பார்த்துக்கோங்க' என்பது தொடங்கி மன்னிக்கக் கூடாத பல தவறுகளை மன்னிப்பதில் வந்து நிற்கும் இந்த அடிபணியும் குணம், 'கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடி... உங்க அப்பாவும் ஆரம்பத்துல என்ன ரொம்ப அடிப்பாங்க... இப்போ கம்மியாயிருக்கு இல்ல' என்பதுவாகவும் தொடரும். இவ்வளவு தீவிரமாக இல்லையென்றாலும் குறைந்தபட்சம் 'எம்.டி-ய எதிர்த்து பேசாத.. வேலை போச்சுன்னா கையில காசு இருக்காது', ' பாட்டிய எதிர்த்து பேசாத, அப்பா சாப்டப்புறம் சாப்டு' என்றாவது நாம் கிளர்ச்சியடையாமல் இருப்பதை உறுதி செய்துக் கொண்டே இருப்பார்கள். 

சரி ஓகே, நம் மீதும் தவறு இருக்கலாம் - அமைதியாய் இருப்போம் என்றால், ஒரு பிரேக் - அப்பை கூட புரிந்துகொள்ள முடியாத அம்மாக்களை என்ன செய்வது? 'நீ என்ன லவ்வா பண்ற? நீ ட்ரயல் பார்க்குற... ஒழுங்கா ஒருத்தனை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ' என்பது என்னைப் போல எத்தனை பெண்களுக்கு சுப்ரபாதமாக இருக்கிறதோ! என் வாழ்க்கையை யாரோடு வாழ விரும்புகிறேன் என்பதை முடிவு செய்ய எனக்கு உரிமையும், நேரமும் இருக்கிறது என்பதை அம்மாவால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் இந்த 'ஒரு செடி, ஒரு ப்ளவர்' கான்செப்டையே காலம் போன காலத்தில் (?!)  நம்பிக் கொண்டிருக்கிறார்.

அம்மாவால் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றொரு விஷயம் 'பாஷன்' (passion). 'பாஷன்' மிக சமீபத்திய வார்த்தையாக இருக்கிறது.  'பாஷனா? ஃபேஷனா?' என திரும்பத் திரும்ப கேட்பவருக்கு நான் திரும்பப் திரும்ப விளக்கம் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். இருந்தாலும் அம்மா என்னை யாருக்காவது அறிமுகம் செய்யும்போது, 'அவ விஸுவல் மீடியால இருக்கணும்னு நெனைக்குறா... ஆனா, எனக்கு அவள இந்த ஃபீல்டுல விடறதுக்கு இண்டிரஸ்டே இல்ல' என்பார். இதைக் கேட்டதும் எனக்கு எலிப்பொறியில் மாட்டிக் கொண்ட எலியை ஒரு பெரிய க்ரிக்கெட் மைதானத்தில் வெளியே விடும் காட்சி கண் முன் தோன்றும். 

இதிலெல்லாம் இருந்து மாறுபட்டு, விதிவிலக்காக இருக்கும் தாய்மார்களை கொண்டவர்கள் நீங்கள் என்றால், பெருமிதப்பட்டுக் கொள்ளுங்கள். இல்லையென்றால், ஒன்றும் செய்ய முடியாது. ஸ்டார் மூவிஸில் 'கிட்டன் ஃபிகர்ஸ்' என்றொரு படம் போட்டிருந்தார்கள் - அதில் 'ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை கொடுக்கப்படுவதில்லை; ஒடுக்கப்பட்டோர் விடுதலையை எடுத்துக்கொள்ள வேண்டும்' என்றொரு வசனம் வந்தது. இதே போலொரு வசனம் ராஜுமுருகனின் 'ஜோக்கர்' படத்திலும் வரும். இது அவ்வளவு எளிதானதில்லை என்றாலும், அவ்வளவு எளிதானதுதான். கொடுக்கலேன்னா எடுத்துப்போம், அது தான் பவரு!

- கார்தும்பி,  பத்தியாளர் - தொடர்புக்கு snehabelcin@gmail.com

| ஓவியம்: சௌந்தர்யா ரவி | 

முந்தைய அத்தியாயம்: கடைசி பெஞ்சுக்காரி - 3 | உடல், உணர்வுச் சுரண்டல்! 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close