கடைசி பெஞ்சுக்காரி - 6 | 'நீங்க அழகா இருக்கீங்க!'

  கார்தும்பி   | Last Modified : 11 Jul, 2018 02:15 pm

1992-ம் ஆண்டின் செப்டம்பர் மாதம். ராஜஸ்தானின் வயல்வெளி ஒன்றில் கணவரோடு வேலை செய்துகொண்டிருக்கிறார் ஒரு பெண். அம்மாநிலத்தின் ஆதிக்க சாதியாக கருதப்படும் குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்த ஐந்து ஆண்கள் வயலுக்குள் நுழைந்து, அந்தப் பெண்ணின் கணவரை கொம்பால் அடிக்கத் தொடங்குகின்றனர். பதறிப் போய், செய்வதறியாமல் துடித்து, அடித்தவர்களின் கால்களில் விழுந்து கணவனை விட்டுவிட வேண்டுமென இறைஞ்சுகிறார். அடித்துக் கொண்டிருந்தவர்கள் இவர் பக்கம் திரும்புகின்றனர். ஐவரின் மூன்று பேர் இந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்கின்றனர்.

படிப்பறிவில்லாத, கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சாதி என கருதப்படுகிற அந்தப் பெண் காவல் நிலையத்தின் படியேறுகிறார். வழக்கு தொடுக்கிறார். இந்திய சட்டத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் வழக்காக அது அமைகிறது. ஆனாலும், குற்றவாளிகளில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. 

குழந்தை திருமணம் ஒன்றை தடுத்து நிறுத்தியதற்காக வன்புணர்வு செய்யப்பட்ட அந்தப் பெண்ணின் பெயர் பன்வாரி தேவி. அவர் தொடுத்த வழக்கு நாளடைவில் 'விசாகா மற்றும் பிறர் VS ராஜஸ்தான்' என்று அழைக்கப்பட்டது. இந்த வழக்கின் விளைவாக 'பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் சட்டம் 2013' இயற்றப்பட்டது. 

*

2017-ம் ஆண்டு. இந்தியாவின் ஒரு பிரபல ஆங்கில செய்தி சேனலில் விவாத நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. விவாதத்தை நடத்திக் கொண்டிருப்பவர் ஒரு மூத்த ஊடகவியலாளர். பெண்களின் ஆடை சுதந்திரம் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது, ஊடகவியலாளரிடம் தர்க்க ரீதியாக தோற்றுப் போன்ற ஒரு பழமைவாதி, 'பொண்ணுங்க எப்படி வேணும்னா உடுத்திக்கலாம்னா... நீ பிகினி போட்டுட்டு வேலைக்கு வருவியா?' எனக் கேட்கிறார்.

இதைக் கேட்டு பானலில் இருக்கும் மற்றவர்கள் முகம் சுளித்தாலும், ஊடகவியலாளரின் முகத்தில் சிறு சலனமும் இல்லை. சில நொடிகளில் ஒரு புன்னகை மட்டும் தோன்றியது. பானலில் இரண்டு நிமிடம் மௌனம் கேட்ட அவர் 'இப்படி சொல்வதனால் என்னை நீங்கள் உடைக்க முடியும் என நினைப்பீர்கள். என்னை திருப்பி சமையலறைக்கு அனுப்ப முடியும் என நினைப்பீர்கள். ஆனால், நாங்கள் எங்கும் போகப்போவதில்லை. இங்கேயேதான் இருப்போம்' என கர்ஜிக்கும் தொனியில் அவர் சொல்லி முடித்தார். இந்த வீடியோ இணையத்தில் உலவியபோது, பார்த்தவர்கள் அத்தனை பேருக்கும் புல்லரித்தது.

அவர் பெயர் ஃபே டி' சௌஸா. 

*

2018-ம் ஆண்டு. தமிழத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரிடம் கேள்வி கேட்க ஒரு ஊடகவியலாளர் முற்படும்போது, 'உங்க கண்ணாடி அழகா இருக்கு... நீங்க அழகா இருக்கீங்க... நீங்க அழகா இருக்கீங்க' என மழுப்பி தப்பித்து ஓடுகிறார் அமைச்சர். 

இதுவும் ஒரு பெண் பணியிடத்தில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான சம்பவம்தான். ஆனால், குற்றவாளி தண்டிக்கப்படவில்லை. ஒரு மன்னிப்பு அறிக்கை மட்டுமே அவர் தரப்பில் இருந்து வெளிவந்திருக்கிறது. குறிப்பிட்ட ஊடகவியலாளரின் அடையாளம் பொதுவெளிக்கு கொண்டுவரப்படவில்லை.

விஜய பாஸ்கரின் மன்னிப்பு அறிக்கைக்கு எதிராக ஒரு விளக்கமான கடிதத்தை இவர் எழுதியிருந்தால், அது எவ்வளவு வலிமையானதாக, மகத்தானதான இருந்திருக்கும்? 

மூன்று சம்பவங்களிலும் பொதுவானதாக இருப்பது - அதிகாரமும், பாலியல் தொந்தரவும். சுவாரசியமாக, பாலியல் தொந்தரவு / வன்முறை சம்பவங்களின் தொடக்கமாக இருப்பது அதிகாரம் என்பதை நாம் உணரவில்லை. 'தவறு செய்கிறோம்' என்பதை அறியும் அந்த ஒரு கணத்தில் 'இதன் விளைவுகளில் இருந்து எளிதாக தப்பித்து விடலாம்' என நினைக்கும் அதிகாரம்தான் 'ரேப் கல்ச்சர்'-ன் சாரம். 

பன்வாரி தேவிக்கும், விஜய பாஸ்கரின் பேச்சிற்கும் என்ன சம்பந்தம்? பின்னது விளையாட்டாக செய்யப்பட்டது அல்லவா? என்றால். நமக்கு வேறெதுவெல்லாம் விளையாட்டாக இருக்கிறது?

'எதுக்கு என் தங்கச்சிக்கும் தாலி கட்டி கூட்டியாந்த?'

'அடியே.. உனக்கு போர் அடிக்கும்னு தாண்டி அவளையும் கூட்டியாந்தேன்' - என்பதுவும் ஜோக்தான். இதன் பின்னால் இருக்கும் உணர்வு சுரண்டலையும், வன்முறையையும்,அதிகாரத்தையும் உங்களால் கணிக்க முடிகிறதல்லவா? 

ரேப் ஜோக்குகள், உருவ கேலி, 'உன்னையும் வெட்டுவேன் அவளையும் வெட்டுவேன்' என தைரியமாக கேமரா முன் சொல்லும் சாதி வெறி என எல்லாமே ஜோக்காக தான் தெரியும். ஆனால், இவையெல்லாம் உயிர்களை பலியாக எடுத்துக் கொள்ளாமலா இருக்கிறது? உண்மையில் நேரடியான அச்சுறுத்தலை விட ஜோக்குகள் வழியாக வரும் அச்சுறுத்தல்கள் தான் கொடூரமானவை. நம்மால் அவற்றை அடையாளம் காண கூட முடிவத்தில்லை. ரேப் கலாச்சாரத்தை தொடங்குவதும் விரிவு செய்வதும் ரேப் ஜோக்குகள் தான் என்பதை இங்கு பயிற்றுவிப்பதற்கு யாரும் இல்லை. 

இதற்கு நாம் சிரிக்கவில்லையென்றால் நம்மை 'முசுடு' லிஸ்டில் சேர்த்து விடுவார்கள் என சிரித்து வைப்பவர்கள் ஒரு பக்கம் இருந்தால், இந்த மாதிரியான ரேப் ஜோக்குகளை எல்லாம் ரசித்து லயித்து சிரிப்பவர்கள் மறு பக்கம் பெரும்பாலோனாராக இருக்கிறார்கள். 

'அழகா இருக்கீங்க'னு தானே சொன்னார் அதுக்கு எதுக்கு கோபப்படணும் என்றால் 'நிர்பயாவின் அம்மாவே இவ்வளவு அழகாக இருக்கும் போது நிர்பயா எப்படி இருந்திருப்பார் என என்னால் யூகிக்க முடிகிறது. ஆண்கள் உங்களை விட வலிமையானவர்களாக இருக்கும் போது நீங்கள் சரண்டராக வேண்டும்' என்று ஒரு அரசியல்வாதி சொன்னதை கேட்டு எதற்காக கோபப்பட்டோமோ அதற்காகத் தான். விஜய பாஸ்கரை ஆதரிப்பதன் மூலமாக அவருடைய அதிகாரத்திற்கு அடிபணிய சொல்கிறீர்கள் அவ்வளவு தான் வித்தியாசம்.

விஜய பாஸ்கரை ஆதரித்த பெண்களாய் இருக்கும் ஃபேஸ்புக் பிரபலங்களின் பட்டியலை ஒப்புவித்த ஒருவர் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரின் அரசியல் சார்பு நிலையை சுட்டிக் காட்டி 'இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதை எல்லாம் அனுபவிக்க வேண்டியதா தான் இருக்கும்' என்றார். 

எனில், பொது வாழ்க்கைக்கு வந்துவிட்ட ஆண்களில் எத்தனை பேர் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்? ஒரு ஊடகவியலாளருக்கு பொதுவெளிதான் தான் பணியிடமாக இருக்கும் பொழுதில் அந்த இடத்தில் வைத்து அவருடைய வேலையை செய்யவிடாமல் 'நீங்க அழகா இருக்கீங்க' என சம்பந்தம் இல்லாமல் பேசுவதை யாரும் காம்ப்ளிமெண்டாக எடுத்துக்கொள்ள விரும்புவதில்லை - அந்தப் பத்திரிக்கையாளர் என்ன அரசியல் சார்புடையவராக இருந்தாலுமே, அது அவருக்கு தேவையில்லாத சமிக்ஞை தான். ஆங்கில ஊடகங்கள் இதை அப்பட்டமான 'sexism' என தீர்க்கமாக எழுதும்போதும் கூட, நம்மவர்கள் விஜய பாஸ்கருக்கு கொடி பிடிப்பது வேதனை.

'இந்த அரசிடம் எந்த கேள்விக்கும் பதில் இல்லை. சுகாதாரத்துறையில் நிச்சயமாக ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பணிபுரிகிறார்கள். சுகாதாரத்துறையின் அமைச்சராக இருக்கும் விஜய பாஸ்கர் அவர் துறையில் பணிபுரியும் பெண்களிடம் எப்படி நடந்து கொள்வார் என்பதை நான் இந்த சம்பவத்தில் இருந்து புரிந்து கொள்ளலாமா?' எனக் கேட்டார் நண்பர் ஒருவர்.

அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் செய்யும் பாலியல் தொந்தரவு தொடர்பான வழக்குகள் எத்தனை வெளிச்சத்திற்கு வரும்? பணியிடத்தில் பாலியல் தொந்தரவுக்கு மிகவும் நெருங்கிய மற்றொரு கொடூரம் 'victim-silencing'. 

மதுரா ரேப் வழக்கில் காவல் நிலையத்திற்குள் இரண்டு காவல்துறை அதிகாரிகளால் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணைப் பற்றி 'இந்த பெண்ணிற்கு ஏற்கனவே பாலியல் அனுபவங்கள் இருக்கின்றன. அதனால், இவள் தான் காவல்துறையினரை உறவுக்கு அழைத்திருப்பாள்' என நீதிமன்றமே ஒரு பெண்ணின் வாயைப்பூட்டிய பெரும் நீதி வரலாறு இந்தியாவிற்கு இருக்கிறது. இங்கே 'நீ எதுக்குடி அப்படி டிரெஸ் பண்ணிட்டு வந்த? அதனால தான் அங்க தொட்ருப்பான்' என்பதும், 'இவ எடம் குடுக்காமலா அவ இவ்ளோ பண்ணிருக்கான்' என்பதும் சர்வ சாதாரணம். 

பாதிக்கப்பட்ட பெண்கள் - வேலைச் சூழலை பதற்றமாக்க வேண்டாம் என்றோ, பொருளாதாரத்தில் சரிவு உண்டாகும் என்றோ, தன் மீது பழி வருமே என்றோ, முழுக்க முழுக்க பயத்தினாலோ - அதிகாரத்தில் இருக்கும் கொடூரர்களை பற்றி வாயைத் திறப்பதேயில்லை. 

இது அத்தனை எளிதானது. தான் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியிருப்பதாக வெளியே சொல்வதற்கு ஒரு பெண்ணிக்கு பெரும் துணிச்சல் தேவை; அதை நம்புவதற்கு குறைந்தபட்ச மனிதம் இருந்தால் போதும். ஆனாலும், நடந்த சம்பவத்திற்கு சாட்சியாக ஒரு வீடியோ இருக்கும்போது கூட ஆணாதிக்கத்திற்கு பரிந்து பேசும் 'போலி பெண்ணியவாதிகள்', 'நான் ஃபெமினிஸ்டுன்னு யார் சொன்னா?- உறுப்பினர்கள்' எல்லாம் விரைவில் கண் திறக்க வாழ்த்துகிறேன்.

- கார்தும்பி,  பத்தியாளர் - தொடர்புக்கு snehabelcin@gmail.com

| ஓவியம்: சௌந்தர்யா ரவி | 

முந்தைய அத்தியாயம்: கடைசி பெஞ்சுக்காரி - 5 | வெறுமையை போக்கும் 'போதை'

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close