சிறைவலம் 2 - பயங்கர கைதிகளை அடக்கும் போலந்து உத்திகள்!

  பால கணேசன்   | Last Modified : 11 Jul, 2018 02:15 pm

போலந்து நாட்டில் க்ரிப்சர் என்றொரு மிக பயங்கர குற்றவாளி கும்பல் ஒன்று உண்டு. போதை மருந்து கடத்துதல், கொலைகள் செய்தல், ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், பாலியல் பலாத்காரம் என எல்லா குற்றங்களையும் சர்வ சாதாரணமாக செய்துகொண்டிருந்த இவர்களால் மொத்த போலந்தின் சட்ட ஒழுங்கும் கெட்டு அதன் மூலம் அரசாங்கம் எண்ணிலடங்கா பிரச்சினைகளை சந்தித்தது.

போலந்தில் கம்யூனிஸ்ட் வீழ்ந்த பின்னர் இந்த க்ரிப்சர் கும்பலை ஒட்டுமொத்தமாக வளைக்க ஆரம்பித்தது அரசு. இவர்களை அதி உச்ச கண்காணிப்பில் வைக்க வேண்டி கட்டிய சிறைதான் பியாத்ரிகாவ் சிறை. உலகின் மிக அதிக பாதுகாப்புகள் உள்ள சிறைகளில் இதுவும் ஒன்று. அதை பற்றி இப்போது பார்ப்போம்.

தற்சமயம் 700 கைதிகள் இருக்கும் இந்தச் சிறையில் கொலை குற்றவாளிகள் தவிர்த்து பெரும்பாலும் போதைமருந்து கடத்தலில் ஈடுபட்டு சிக்கியவர்களே அதிகம். புதிதாக வரும் கைதியை முதலில் முழு எக்ஸ்-ரே எடுத்து சோதிப்பார்கள். பின்னர் முழு நிர்வாணமாக்கி எல்லா கோணங்களிலும் பரிசோதித்துவிட்டே சிறை சீருடையை அணிய தருவார்கள். எதற்காக இந்தச் சோதனை என்றால், வாரம் ஒருமுறையாவது புதியதாய் வரும் கைதிகள் போதை மருந்தை எங்கேயேனும் வைத்து மறைத்து எடுத்துவருவார்கள். அதற்கான எந்த வாய்ப்பையும் சிறைத்துறை அளிக்கக்கூடாது என்பதற்காகவே இந்த சோதனை. அதன் கூடவே பல் துலக்கும் ப்ரஷ், பேஸ்ட் போன்றவையும், பெட்ஷீட், போர்வை முதலியவையும் தரப்படும். ஓர் அறைக்கு மூன்று பேர் என்கிற வீதத்தில் இங்கே கைதிகள் தங்கவைக்கப்படுகின்றனர். 

ஒரு நாளைக்கு 23 மணி நேரம் கைதிகள் தங்கள் அறைக்குள்தான் இருக்க வேண்டும். தினமும் ஒரே ஒரு மணி நேரம் மட்டுமே அவர்கள் அறை இருக்கும் இடத்தை விட்டு வெளியில் வந்து நடை பழகலாம். அதுவும் ஒரு நேரத்தில் ஐந்தே பேர்தான் இப்படி ஒன்றாக நடக்க அனுமதிக்கப்படுவார்கள். ஒரு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அறைக்குள் திரும்பிவிடவேண்டும். உணவு அவரவர் அறைக்கே கொண்டு வந்து தரப்படும். ஏனென்றால், உணவிற்காக தனி இடம் இருந்தால் அங்கே மற்ற கைதிகளும் வருவார்கள். சக கைதிகளோடு உரையாட வாய்ப்பு கிடைக்கும். இதன்மூலமாக தப்பிக்க திட்டமிடலாம். கூட்டணி அமைக்கலாம். இந்தக் கூட்டணி காரணமாக ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழவும் வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் தடுக்கவே உணவு முதற்கொண்டு அறைக்கே வந்து தரப்படுகிறது. 

இந்தச் சிறையின் மிக முக்கிய தாரக மந்திரம் ஒழுங்கு. இரவில் படுக்கப்போகும்போது படுக்கை எவ்வளவு ஒழுங்காக இருந்ததோ காலையில் விழித்ததும் மீண்டும் அதையெல்லாம் சரியாக்கி அதே ஒழுங்கோடு வைத்திருக்க வேண்டியது கைதிகளின் கடமை. அப்படி ஒருவேளை இல்லாமல் இருந்தாலோ அல்லது அறையிலேதானே இருக்கப்போகிறோம் என்று நினைத்துக்கொண்டு அலாரம் அடித்தபின்னும் படுக்கையில் இருந்து எழாமல் இருந்தாலோ அதற்கு தண்டனை உண்டு. எந்த மாதிரியான தண்டனைகள் என்றால், குடும்பத்தார் பார்க்க வருவதற்கு சில பல மாதங்கள் தடை விதிக்கப்படலாம். அல்லது, அப்படி பார்க்க வந்த குடும்பத்தாரை நேரடியாக சந்திக்க விடாமல் ஒரு கண்ணாடி கூண்டிற்குள் நின்று கொண்டு சந்திக்க நேரிடலாம். இதே ஒழுங்கின்மை தொடர்ந்தால் யாருமே இல்லாத மிக சின்ன அறை ஒன்றில் கைகள் இடுப்போடு சேர்த்து கட்டப்பட்டு, தலைக்கு ரப்பரால் செய்யப்பட்ட ஹெல்மெட் அணிவிக்கப்பட்டு தனிமையில் விடப்படலாம். 

அதேபோல் எல்லா அறைகளும் தினந்தோறும் பரிசோதனை செய்யப்படும். பரிசோதனை என்றால் மேம்போக்காக அல்ல.. மிக உன்னிப்பாக நடக்கும். போதைமருந்து இருக்கிறதா என அறிய மோப்ப நாய்கள் தினமும் அறையை சோதனை செய்யும். அவர்கள் பயன்படுத்தும் ஷேவிங் ரேஸரில் சின்ன மாற்றம் இருந்தால் கூட தண்டனை உண்டு. அதேபோல் தினமும் ஷேவ் செய்யவில்லை என்றாலும் தண்டனை உண்டு. இந்தக் கைதிகளில் சிலரை சிறை அலுவலர்கள் மற்றும் காவலர்கள் இருக்கும் அறையை சுத்தம் செய்ய அழைப்பார்கள். அவர்கள் வரும்பொழுதும் சரி போகும்பொழுதும் சரி முழு நிர்வாணமாக்கி சோதனை செய்தபின்னரே மீண்டும் சிறைக்குள் செல்ல முடியும். 

அதேபோல் இந்தச் சிறையை பாதுகாக்கும் காவலர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுக்க இந்தச் சிறைக்குள்ளேயே தனி பயிற்சிக்கூடம் உண்டு. துப்பாக்கி சுடுதலில் ஆரம்பித்து, கைதிகள் முரண்டு பிடித்தால் அவர்களை அடக்குவதற்க்குண்டான பயிற்சி வரை எல்லாமே இந்த சிறை வளாகத்திற்குள்ளேயே கிடைக்கிறது. 

சிறையின் எல்லா இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் உண்டு. அதைக் கண்காணிக்க தனிக்குழுவே உண்டு. இதில் விஷயம் என்னவென்றால், மேற்சொன்ன எல்லாமே சாதாரண கைதிகளுக்கு. ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட க்ரிப்சர் கேங் குற்றவாளிகளுக்கு என்று இந்தச் சிறையில் தனிப்பிரிவே உண்டு. அவர்கள் கூட்டத்தில் கைதாகும் ஒருவர் அந்த பிரிவில்தானே அடைக்கப்படுவார். ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறை. சிறையில் அவர்கள் சந்தித்துக் கொள்ள வாய்ப்பே வழங்கப்படாது. இதன்மூலமாக அவர்கள் சிறைக்குள் திட்டம் போடுவது தடுக்கப்படும். மேலும் எப்போதேனும் தற்செயலாக சாதாரண குற்றவாளி ஒருவர் இந்த க்ரிப்சர் கேங் கைதியை எதிர் எதிர் சந்திக்க நேர்ந்தால் உடனே அந்த க்ரிப்சர் கைதிக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றுவிட வேண்டும். இது அங்கே சட்டம்.

இந்தச் சிறை கட்டியபிறகு க்ரிப்சர் குழுவின் ஆட்களின் விகிதம் 5% ஆக குறைந்திருக்கிறது. இந்தச் சிறை கட்டப்பட்டதற்கான நோக்கம் கிட்டத்தட்ட நிறைவேற்றப்பட்டதாக கொண்டாலும் கூட மற்ற கைதிகளின் சுதந்திரமும் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம்தான் என்பது கேட்கையில் மிகுந்த வருத்தமளிக்கும் செய்தியாகவே இருக்கிறது. ஆனால், சில இடங்களில் தண்டனைகளும், தடைகளும் கடுமையாக இல்லையென்றால் குற்றங்களை குறைப்பது குதிரைக்கொம்பாகி விடும்.

 - பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

முந்தைய அத்தியாயம்: சிறைவலம் 1 - உலகின் ஆபத்தான 'டான்லி' சிறை!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close