மாற்றுத் திறனாளிகளுக்கென தனி ஆடை வடிவமைப்பு: கணவருக்காக களமிறங்கி சாதித்த ஷாலினி!

  Shalini Chandra Sekar   | Last Modified : 10 Apr, 2018 12:49 pm


ஷாப்பிங் சென்ற இடத்தில் கையில் காசு மட்டும் இருந்தால் நமக்குப் பிடித்ததை எல்லாம் வாங்கி விடுவோம். ஆனால், மாற்றுத் திறனாளிகளுக்கு அப்படியில்லை. உடை பிடித்தும் இருக்க வேண்டும், அதே சமயம் அவர்களின் வசதிக்கேற்பவும் இருக்க வேண்டும். 

இந்தியாவில் இவர்களுக்கென்று தனி கடைகளோ, ஷோரூம்களோ இல்லை. சரி ஆன்லைனில் முயற்சி செய்யலாமே என்றால், அங்கு நார்மலாக இருப்பவர்களுக்கு வாங்கும் உடைகளையே பலமுறை ஆல்டர் செய்தால் தான் போட முடியும். அப்படியிருக்க மாற்றுத்திறனாளிகளுக்கு சொல்லவா வேண்டும்? அவர்களுக்காகவே ஒருவர் தனி சிரத்தையுடன் உடைகளை வடிவமைத்தால் தான் உண்டு. ஆம், அப்படி ஒருவர் தான் ஷாலினி விசாகன். 


ஷாலினியைச் சந்தித்தோம்... "ஐதராபாத்தைச் சேர்ந்த நான் திருமணத்துக்குப்பிறகு சென்னைக்கு வந்தேன். என் கணவர் 3 வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டவர். நாங்கள் டிராவல் பண்ணும்போது ரெகுலர் உடைகளால் அவர் மிகவும் கஷ்டப்படுவார். இதற்கு ஒரு முடிவுக்கட்ட, நானே ஃபேஷன் டிஸைனிங் கோர்ஸ் படித்தேன். என் கணவரின் உடல் வசதிக்கேற்ப ஆடைகளையும் வடிவமைத்தேன். 

என் கணவரின் நண்பருடைய அம்மாவும் வீல் சேரில் இருப்பவர் தான். அவருக்கு தினமும் கோயிலுக்குச் செல்ல வேண்டும். ஆனால், நைட்டி மாதிரியான ஆடைகளை அணிந்துக் கொண்டு கோயிலுக்குச் செல்ல முடியாதல்லவா? புடவை தான் கட்ட வேண்டும். நார்மல் புடவைகளை கட்ட கஷ்டப்பட்ட அவருக்காகவே ரெடிமேட் சேலை (சிங்கிள் பீஸ் சாரி) ஒன்றை வடிவமைத்தேன். அதிலேயே பிளவுஸ், முந்தானை எல்லாம் சேர்ந்திருக்கும். அது அவருக்கு அவ்வளவு கம்ஃபர்டபிளாக இருந்தது. இப்போது நார்மல் உடைகளை டிஸைன் செய்தாலும், என் முதல் கவனம் பிஸிக்கலி சேலஞ்சுடாக இருப்பவர்களுக்கான, 'அடாப்டிவ் க்ளோத்திங்' மேல் தான்.


இந்த வருடம் நடந்த என்னுடைய ஃபேஷன் ஷோவில் கூட ஆண், பெண் மாற்றுத் திறனாளிகள் தலா 5 பேர் கலந்துக் கொண்டார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்னை. அதனால் அவர்களின் பிரச்னையை மனதில் வைத்து, அந்த பத்து பேருக்கும் ஆடைகளை வடிவமைத்தேன். அப்படி வடிவமைத்தாலும், இந்த ஆடைகள் ஒரே முறையில் செட்டாகிவிடும் என்று சொல்ல முடியாது. அவர்களுக்குப் போட்டுப் பார்த்து அவர்களின் வசதிக்கேற்ப திரும்பத் திரும்ப ஆல்டர் செய்ய வேண்டியிருக்கும். அதற்குப் பொறுமையும் நிதானமும் மிகவும் முக்கியம்".

 மாற்றுத்திறனாளிகளின் ஆடையில் எதிலெல்லாம் கவனம் வேண்டும்?

"வீல் சேரில் இருப்பவர்கள், சேரிலிருந்து காருக்கு மாற ஒரு போர்டை பயன்படுத்துவார்கள். கடினமான மெட்டீரியல் உடைகளாக இருந்தால் டிரான்ஸ்ஃபர் செய்வது சற்றுக் கடினம். அதன்னால் அவர்கள் உடையின் பின் பகுதியில் சாஃப்டாக வழவழப்புத் தன்மை கொண்ட மெட்டீரியலில் பேட்ச் ஒர்க் செய்யலாம். 

ஸ்பைனல் கார்டு இஞ்சுரி ஏற்பட்டிருப்பவர்களுக்கு விரல்கள் ஒத்துழைக்காது. அதனால் அவர்களின் உடைகளில் பட்டன்களுக்குப் பதில் வெல்க்ரோ, லாங் ஜிப் பயன்படுத்தலாம். 

கப் & டயாபர் பயன்படுத்துபவர்களுக்கு பேண்டில் லாங் ஜிப் வைக்கலாம். தவிர, பின்புறம் ஈஸி ஓபனிங் கொடுக்கலாம். இதனால் டயாபர் பயன்படுத்துவதோ, ரெஸ்ட் ரூம் பயன்படுத்துவதோ ஏளிது!

சிங்கிள் பீஸ் சாரியானது மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமல்ல, வயதானவர்களுக்கும் மிகவும் உபயோகமாக உள்ளது. மற்றொன்று 'டபுள் பீஸ் சாரி'. இதில் சேலை பிளீட்ஸோடு தைக்கப்பட்டிருக்கும். பிளவுஸ் மட்டும் தனியாக இருக்கும். 

வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உடை மாற்றுவதென்பதே பெரிய விஷயம். அதனால் அவர்களுக்கு லாங் கவுனில் பின்புறம் ஓபன் வைத்து வடிவமைத்தேன். படுக்கையில் படுத்தவாறே இந்தக் கவுனைப் போட்டு பின்புறம் வெல்க்ரோவால் ஒட்டிக் கொள்ளலாம்". 


கணவர் விசாகன் சொன்னார் ;

"பொதுவாக மாற்றுத் திறனாளி என்றாலே கொஞ்சம் வித்தியாசமாக, பரிதாபமாகத்தான் பார்ப்பார்கள். அதில் உடைகளும் நன்றாக இல்லை என்றால் கேட்கவே வேண்டாம். என் மனைவி டிஸைனர் என்பதால், மாற்றுத் திறனாளிகளுக்கான பல ஃபேஷன் ஷோக்களை நடத்தி வருகிறோம். சமீபத்தில் மகளிர் தினத்தையொட்டி இலைட் விமன்ஸ் கிளப் விழாவில் ஒரு இன்க்ளோசிவ் ஃபேஷன் ஷோ, பண்ணினோம். இதில் முதன் முறையாக எங்கள் ஷோவில் ஒரு 'விஷுவலி சேலஞ்சுடு' பெர்சனனும் ரேம்ப் வாக் பண்ணினாங்க. அதே மாதிரி ஒரு விஷுவலி சேலஞ்சுடு மாடலை வச்சு, ஒரு விளம்பரப்படமும் பண்ணினோம். இது இந்தியாவுலேயே நாங்க தான் முதன் முறையா செஞ்சுருக்கோம். இதனால் பலரின் தன்னம்பிக்கை லெவல் உயரும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை" என்கிறார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.