கடைசி பெஞ்சுக்காரி - 10 | போராட்டம் நல்லது!

  கார்தும்பி   | Last Modified : 11 Jul, 2018 02:16 pm

நான் இதுவரை எந்தப் போராட்டங்களிலும் கலந்து கொண்டதில்லை. பள்ளிக்காலத்தில் என்னுடைய அதிகபட்ச போராட்டம், கொஸ்டின் பேங்கை காப்பி எடுத்து தருகிறேன் என்று வசூலித்த ஆங்கிலம் தெரியாத ஆங்கில ஆசிரியரை பார்த்து 'என் கிட்ட காசு இல்ல' என்று சொன்னதுதான். என்னைத் தவிர்த்து அத்தனை பேருக்கும் கொஸ்டின் பேங்கை ஜெராக்ஸ் எடுத்து கொடுத்தார்.

நான் இளநிலை பட்டம் படித்தது, நேரடியாக இந்துத்துவா பிரச்சாரம் செய்யும் ஒரு மும்பை கல்லூரியில். பெண்களை விளையாட்டில் சேர்க்காதது, திடீர் திடீரென வகுப்புகளை ரத்து செய்வது என போராடுவதற்கு பல காரணங்கள் இருந்தும் எங்களுக்குப் போராட்டம் ஒரு வழியாக தெரிந்திருக்கவில்லை - போராட்ட மரபு பகுத்தறிவு சார்ந்ததல்லவா? பகுத்தறிவை மழுங்கச் செய்ய அந்தக் கல்லூரியில் தொடர்ந்து மதப் பிரச்சாரம் செய்யப்பட்டிருந்ததை எல்லாம் ஒரு வருடம் கழித்து இப்போதுதான் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறேன். 

கல்லூரி முடித்து ஒரு செய்தி நிறுவனத்தில் ரிப்போர்ட்டராக வேலைக்கு சேர்ந்தபோது கோவை ஆளுநர் அலுவலகத்தில் சில போராட்டங்களை பார்த்திருக்கிறேன். குறிப்பிட்ட வண்ணத் துண்டு அணிந்த ஒருவர் 'தேமே' என்று எதோ ஒரு நோக்கத்தை விளக்கிக் கொண்டிருப்பார், அவர் உடன் ஒரு குழு இருக்கும்; உயிர்ப்பே இல்லாத போராட்டங்களாக அவை இருக்கும்; அடுத்த வாரம் அதே துண்டோடு, வேறு பதாகைகளோடு போராட்டங்கள் நடத்திக் கொண்டிருப்பார். போராட்டங்கள் வலுவற்றவை, மூலமற்றவை எனத் தோன்ற செய்ய இப்படியான போராட்டங்கள் பலவற்றை பார்த்துவிட்டோம் இல்லையா? இதனால்தான் போராட்டத்தின் வீரியத்தை புரிந்துகொள்ள இத்தனை தாமதம் ஆனதா? 

2010-ற்கு பிறகு, மக்களை பெருமளவில் சென்றடைந்த போராட்டங்களை எத்தனை நடந்தன? வெகு சில போராட்டங்களை தான் என்னால் நினைவுபடுத்த முடிகிறது. லயோலா கல்லூரியில் எட்டு மாணவர்கள் இலங்கையில் நடந்த போர் குற்றங்களுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தது, விகடனின் அட்டையில் சட்டக் கல்லூரி மாணவராக திவ்யா பாரதி நரம்பு புடைக்க வெயிலில் கோஷம் போட்டபடி நிற்பது - இப்படி சில மக்கள் போராட்டங்கள் மட்டுமே 'போராட்டம்' என்றதும் கண் முன் தோன்றுபவையாக இருந்தது.  'புரட்சி' எனும் வார்த்தையை உச்சரிப்பதே அர்த்தமில்லாதது எனும் அளவு விரக்தியும், ஏமாற்றமும் உண்டாகியிருந்த போது தான் மெரினா புரட்சி நடந்தேறியது. 

மெரினா புரட்சி மக்களால் சாத்தியமானது; எப்போதுமே இடதுசாரி செயற்பாட்டாளர்களின் முகத்தில் இருக்கும் கனிவும், மலர்ச்சியுமே அந்தப் போராட்டத்தின் முகமாக இருந்தது. இப்படித்தான் அந்த போராட்டம் காலத்தில் நிற்கும். இதன் நடுவில் 'இந்த போராட்டத்துனால இப்போ என்ன சாதிச்சிட முடியும்? எதுக்கு இப்படி எமோஷனல் இடியட்ஸா இருக்கீங்க?' என்று சில ஃபேஸ்புக் பதிவுகள் உலவின. மெரினாவில் கூடியிருக்கும் போலீசார் கூட்டத்தை எப்படி பாதுகாப்பாக கையாள்கிறார்கள் என்று சில பத்திரிகையாளர்கள் (?!) முதல் நாள் முடிவில் எழுதினார்கள். மீனவ கிராமங்கள் தாக்கப்பட்டன. இறுதியில் காவல்துறை அதன் கோர வன்முறையை பற்ற வைத்தது. போன வாரம் காவல்துறை வன்முறையை பற்றி பேசிக் கொண்டிருந்தபோது மெரினா போராட்டத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரின் லத்தி கண்ணில் கிழித்து பார்வையை இழந்த ஒருவரைப் பற்றி பென்னி சொன்னாள். இன்று, கடற்கரையில் கூட்டம் கூடினாலே அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டதாக உணர்கிறார்கள். என்றாலும், அதன்பிறகு போராட்டங்கள் நடக்காமல் இருக்கின்றனவா? 

நீட் தேர்வுக்கு தடை கோரி போராட்டம் செய்த மாணவர்களில் ஒருவரின் பேண்டை காவல்துறையினர் பிடித்து இழுத்து ஒரு நொடி அவரை நிர்வாணமாக்கியது பல சேனல்களில் லைவ்வாக ஒளிபரப்பானது. அவர் அடுத்து போராட்டங்களில் பங்கெடுக்காமலா இருப்பார்? கோவை காந்திபுரத்தில் ஓர் இயக்கத்தினர் நீட் தேர்வுக்கு எதிராக நடத்திய மறியலை கலைக்க வந்த கூட்டத்தில் இருந்த பெண் காவல் அதிகாரி ஒரு மேலதிகாரியால் பாலியல் சீண்டலுக்கு ஆளானார். போராட்டப்புவியில் காவல்துறையினரை விட கலகக்காரர்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா என்ன? 

மார்ச் 23 ஆம் தேதி ஜேஎன்யூ மாணவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டி பேரணி நடத்தியபோது, வழக்கம் போலவே வன்முறையின் முகமான காவல்துறை அப்பட்டமாக மாட்டிக் கொண்டது. முதுநிலை படிக்கும் ஷீனா தாகூர் போராட்டக்களத்தில் இருக்கும்போது 'அவளுடைய துணியை கிழியுங்கள்' என்றொரு பெண் காவல்துறை அதிகாரி கூவ, ஷீனாவின் பிரா வரை கிழிக்கப்பட்டிருக்கிறது. ஷீனாவின் நண்பர் அவருடைய துப்பாட்டை போர்த்திக் கொண்டு போயிருக்கிறார். ஷீனா தன்னுடைய போராட்டத்தை அப்போதே நிறுத்திக் கொள்ளவில்லை. போராட்ட தினத்தில் நடந்த வன்முறையின் சாட்சியாக தான் காவல்துறையினரால் தாக்கப்படும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவு செய்ய, அது 25,000 முறைக்கு மேலே பகிரப்பட்டிருக்கிறது.

பழங்குடி இனத்தை சேர்ந்தவர் என்பதற்காகவே பொதுவெளியில் நிர்வாணமாக்கப்பட்ட லஷ்மி ஒராங்கும் சளைத்துப் போய் ஒதுங்கினாரா? நிலத்தை அழிப்பவர்களுக்கு எதிராக கடலுக்குள் இறங்கி போரடிய பெண்களை நாம் பார்த்திருக்கிறோம். சென்ற கழுத்து நரம்பு தெரிய கோஷம் போடும் அந்தச் சிறுவனுக்கு பின்னே கமல்ஹாசனும் 'ப்ளர்' ஆகித் தானே தெரிந்தார்?! இவை எல்லாமுமே மனிதனின் பெரும் வலிமைக்கு சாட்சியான காட்சிகள். 

இங்கே MN+ HD என்றொரு அடிபொலி சானல் கிடைக்கிறது. அதில் வரிசையாக அடிபொலி படங்கள் போடுகிறார்கள். 'தி பட்லர்' என்றொரு படம் பார்த்தேன். பருத்திப் பண்ணையில் வேலை செய்யும் சிசிலின் தாய் பண்ணையின் வெள்ளை முதலாளியால் வன்புணரப்படுக்கிறாள்; அதைத் தட்டிக் கேட்கப் போகும் சிசிலின் அப்பா முதலாளியால் கொல்லப்படுகிறார். சிசிலை அந்த முதலாளியின் வீட்டின் 'பட்லராக்க' ஒரு வெள்ளைக் கிழவி நினைக்கிறாள். ஒரு கட்டத்தில் சிசில் வெள்ளை மாளிகையில் பட்லராகிறான். சிசிலுக்கும் அவனுடைய மனைவிக்கும் வெள்ளை மாளிகை எனும் அந்தஸ்து கொண்டாட்டமாக இருக்கும் வேளையில், சிசிலின் மகனுக்கு அமெரிக்காவில் அப்பட்டமாக இருக்கும் இனவெறியை குறித்து கவலையும் ஆத்திரமும் இருந்து கொண்டே இருக்கும். மகனின் பகுத்தறிவு சிசிலுக்கு எரிச்சலை உண்டாக்கும். 'நாம் சந்தோஷமாக இருக்கிறோம்; உனக்கு கிடைத்திருப்பவைக்கு நன்றியுணர்வோடு இரு' என்பதுவே சிசிலின் வாதமாக இருக்கும். 

மகன் அறவழி போராட்டங்கள் நடத்தும் ஒரு இயக்கத்தில் இணைவான். வெள்ளையர்களுக்கும் கறுப்பினத்தவர்களுக்கும் உணவகங்களில் தனித்தனி டேபிள்கள் இருப்பதை எதிர்த்து போராடுவார்கள். உணவகத்தில் எப்படி நீங்கள் போராட வேண்டும்? உங்களை நிலைகுலையச் செய்ய வெள்ளையர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என பிராக்டிக்கல் வகுப்பை இயக்கத்தின் தலைவர் நடத்துவார். வெள்ளையர்கள் அமரும் இடத்தில் அமர்ந்து உணவு ஆர்டர் செய்வதுதான் போராட்டம் - உணவகத்தில் வந்து அமரும் கறுப்பினத்தவர்கள் மீது வெள்ளையர்கள் காறித் துப்புவார்கள்; அது அவர்களுக்கு பயிற்சி வகுப்பில் ஏற்கனவே சொல்லிக் கொடுக்கப்பட்டது; வெள்ளையர்கள் அடிக்கும் போதும் இவர்கள் அமைதியாகவே உட்கார்ந்திருப்பார்கள். காவல்துறையினர் வந்து கறுப்பினத்தவரை கைது செய்யும். 

சிசில் கோபமாகவே இருக்கும் போது, அவருடைய மகனின் போராட்டங்கள் பல வெற்றி பெறும். மிக மிக தாமதாகவே சிசிலுக்கு ஒரு உண்மை புரிய வரும் - நான் மற்றவர்களை விட வித்தியாசமானவனாகவே இத்தனை நாளும் நடத்தப்பட்டிருக்கிறேன்; நான் தீண்டாமைக்கு ஆளாகியிருக்கிறேன் என்பதை அவர் புரிந்து கொள்ளும்போது வெள்ளை மாளிகையிலிருந்து பணி விலகுவார். மகனோடு போராட்டத்திற்கு வருவார். அன்றுதான் எந்தப் போராட்டமும் தனக்கானது மட்டுமே இல்லை என்பதை அவர் உணர்வார். இங்கு எந்த போராட்டமும் தனக்கானது மட்டுமே அல்ல என்பதை நாம் இப்போதுதானே உணரத் தொடங்கியிருக்கிறோம்?

பிறர் சலுகைகளோடு வாழும் நிலையில், நாம் உரிமைகளுக்காகவே போராட வேண்டியிருக்கிறது என்பது தான் யதார்த்தம். பெண்களுக்கு பேச்சுரிமையும், சொத்துரிமையும், வாக்குரிமையும் பெண்ணியப் போராட்டங்களினாலே வந்தது எனும் போது 'நான் ஃபெமினிஸ்ட் எல்லாம் கிடையாதுப்பா' என ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட சில பெண்களால் முடிகிறது. இந்த சமூகத்தில் உங்களுடைய பங்கு ஒரு 'வாய்மூடி பார்வையாளர்' (mute spectator) மட்டுமே என்பது ஏற்புடையது கிடையாது. 

சிசில் போல என்றாவது ஒரு நாள், பிற படிநிலைகளில் வாழ்பவர்களுக்கு கிடைத்திருக்கும் சலுகைகளால், எப்படி ஒடுக்கப்படுகிறீர்கள் என்பதை உணர்வீர்களா? உணர்ந்த பிறகும் கூட கள்ள மௌனம் சாதிக்கக் கூடாது இல்லையா? நாம் நம்புவதை விட நமக்கு துணிச்சல் அதிகமாய் இருக்கிறது. ஒரு தேசத்தின் பெரும்பாலானோரால் தலைவராய் பாவிக்கப்படும் ஒருத்தரை கருப்பு காட்டி விரட்ட நம்மால் முடிகிறது. கார்மேகம் போல கருப்பாய் பரவியிருந்து பாசிசத்திற்கு எதிர்ப்பு காட்டும் அத்தனை பேரும் பயங்கரமான இன்ஸ்பிரேஷன் அல்லாமல் வேறென்னவாம்?

ஒடுக்கப்பட்டோருக்கு வாழ்க்கை முறையே புரட்சிதான். மரங்களை கட்டியணைத்தோ, செருப்பை வீசியோ, கருப்பு பலூன்கள் பறக்கவிட்டோ, பறை அடித்தோ, பாட்டு பாடியோ நம் அதிருப்தியை வெளிப்படுத்திக்கொண்டேதான் இருப்போம். போராட்டம் நல்லது. 

எனக்கு இந்த ஜூன் வந்தால் 21 வயதாகப் போகிறது. இந்த அகவை நிறைவு பெறுவதற்குள் எனக்கு காவல்துறையினரின் முகத்திற்கு நேரே நின்று உரக்க கோஷமிட வேண்டும். இந்த வருடத்தின் முக்கியமான சபதம் இது மட்டும்தான்.

- கார்தும்பி, பத்தியாளர் - தொடர்புக்கு snehabelcin@gmail.com

| ஓவியம்: சௌந்தர்யா ரவி | 

முந்தைய அத்தியாயம்: கடைசி பெஞ்சுக்காரி - 9 | சமூக வலைதளமும் அரைவேக்காட்டுத்தனமும்! 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close