கடைசி பெஞ்சுக்காரி - 12 | குடும்பத்தில் 'பெண்' ஆக நடப்பீர்!

  கார்தும்பி   | Last Modified : 30 Apr, 2018 04:33 pm

'நீ ஒரு ஆணா? பெண்ணா? பொண்ணு மாதிரி நடந்துக்கோ' எனும் கேள்வி ஒரு வயதில் இருந்து பதினாறு வயது வரையில் என நினைக்கிறேன் - குற்றவுணர்ச்சியையும் நடுக்கத்தையும் உண்டாக்குவதாக இருந்தது. இப்போது அந்தக் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. இப்படி ஒரு முட்டாள்தனமான கேள்வி கேட்பது யாராக இருந்தாலும், அவருக்கு நாம் பதில் சொல்ல வேண்டியது அவசியம் இல்லை.

'பொண்ணு மாதிரி நடந்துக்கோ' எனும் பிரச்சாரத்தின்படி அம்மாக்களும், அப்பாக்களும், குடும்பமும் சொல்ல வருபவை எல்லாம் இவ்வளவு தான்:

"சத்தமாக பேசாதே, சிரிக்காதே, பார்ப்பவருக்கு ஆபாசமாக தெரியும்படி உடுத்தாதே, கை நீட்டாதே, காலைத் தூக்காதே, ஊர் சுற்றாதே, கீழ்ப்படிதலோடு இரு, உன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் எனக்கு அறிவித்தபடியே இரு, சொந்தமாக முடிவு எடுக்காதே, சமையல் செய்வது உன் கடமை, வீடு கூட்ட தெரியாதென்றால் நீ உயிர் வாழ்வதே வீண்..."

எவ்வளவு அடிமுட்டாள்தனமான கட்டளைகள். இவ்வளவு அடிப்படையான விஷயங்களை பற்றியே தெளிவே இன்னும் உண்டாகாமல் இருப்பது பெரும் தலைவலி. என் புரிதலின்படி இவற்றில் எதாவது இரண்டை திரும்பத் திரும்ப கேட்கும்படி இருந்தாலே, நமக்கிருக்கும் விடுதலை வீட்டாருக்கு அச்சுறுத்தலாக தெரிகிறது என்று அர்த்தம். நமக்கிருக்கும் விடுதலையை கைப்பற்ற அவர்கள் எடுக்கும் கடைசி ஆயுதம் தான் 'பொண்ணு மாதிரி நடந்துக்கோ'.

'பாவம்.. அம்மாவுக்கு என்ன தெரியும்? அவளும் இப்படி ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டவள் தானே? அவளுக்கு நீ தானே எடுத்துச் சொல்ல வேண்டும்' என்பவர்கள்தான் 'தாய்மையின் பரிசுத்தம் - பேரானந்தம்' என பேபி சோப் விளம்பரங்களுக்கு பாட்டு எழுதுவார்கள் என நினைக்கிறேன்.

'தாய்மை' எனும் பெயரில் ஒரு பெண் எவ்வளவு சுரண்டப்படுகிறாளோ, அதே அளவு 'தாய்மை'யை கருவியாய் வைத்தும் ஒரு பெண் சக மனிதர்களை - குறைந்தபட்சம் தன் வீட்டாரையோ, பிள்ளைகளையோ - சுரண்டுகிறாள். இந்த வகையான 'எமோஷனல் அப்யூஸை' எல்லாம் கையாள்வதற்கு தனி திராணி வேண்டும்.

அம்மாக்களை திருப்திபடுத்தவே ஒரு வாழ்க்கையை வாழ முடியுமா? குடும்பத்தை பெருமைபடுத்தவே வாழ்ந்து தீர்க்க முடியுமா? சமூக விலங்காக மனிதன் பிறரை சார்ந்திருந்தாலும், யதார்த்தத்தில் நாம் அனைவரும் தனித்தனி தீவுகள்தான். இதை மதிக்காமல், மறுத்து, ஒரு நபரின் தனிமையையும், தனித்தன்மையையும் குலைக்க அத்தனை ஆயுதங்களையும் வைத்திருப்பது 'குடும்பம்' எனும் சீரழிவு. 

ஒரு குடும்பத்தில் பெண்ணாக நடந்து கொள்ள சில வழிமுறைகள்:-

1. 'பெண்' என்பதற்கு உங்களுடைய ஆணாதிக்க, பழமைவாத, இனவாத, மதவாத, சாதிய குடும்பம் சொல்லும் விளக்கம் நூறு சதவிகிதம் தவறானது, முட்டாள்தனமானது, பிற்போக்குத்தனமானது என்பதை நம்ப வேண்டும். 

2. உங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் எல்லாமே நகைப்புக்குரியவை என்பதை ஆணி அடித்து மனதில் மாட்டிக் கொள்ள வேண்டும். 

3. போர் அடிக்கும் சமயத்தில் உங்களோடு எதாவது சண்டை உண்டாக்க கிளம்பும் அம்மாவிற்கு / அப்பாவிற்கு தீனி போடாமல் தவிர்ப்பது நலம். 

4. 'சுய-சந்தேகத்தை' உண்டாக்கி அதன் வழியே லாபம் பார்க்கும் ஒரு உலகில், நீங்கள் உங்களை நேசிப்பதே புரட்சி என்றொரு பிரபல வாக்கியம் இருக்கிறது. என்ன ஆனாலும், உங்கள் இயல்பை சந்தேகிக்காதீர்கள்.

5. குடும்பத்தை சாராமல் வாழ்தலே கெத்து. முதலில் அதை செய்யப் பாருங்கள். 

இவ்வளவையும் எழுதுவதனால், கார்தும்பி ஒரு ஃப்ரீ ஸ்பிரிட் எனும் அபத்த முடிவிற்கு வர வேண்டாம். இதெல்லாமே  #Note_to_self தான். 

'பொண்ணு மாதிரி நடந்துக்கோ' எனும் அம்மாக்களுக்கு... 

அறியாமையை போல அபாயகரமான விஷயம் வேறெதுவும் இல்லை; அறியாமையை இருளென்றும், பாவமென்றும் சொல்கிறார்கள் அறிஞர்கள். உங்கள் வார்த்தைகளில் இருக்கும் பிற்போக்குத்தனத்தை உங்கள் பெண் வெளிச்சம் போட்டு காட்டினால், அதை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மொக்க 'ஈகோ'வை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஆணாதிக்கத்தின் வேராக, விழுதாக, மார்க்கெட்டிங் எக்சிக்யூட்டிவாக செயல்படாமல் இருங்கள். தயவு செய்து ஆணாதிக்கத்தையும், பேதங்களையும் புரிந்து கொள்ளுங்கள். 

உங்களுடைய பெண்ணின் இயல்பை மாற்ற நினைக்காமல் இருப்பது நீங்கள் இந்த உலகிற்கு செய்யும் பெரும் உதவி. 'சமுதாயத்திற்கு பயந்து வாழ வேண்டும்' என உங்கள் பெண் குழந்தைகளுக்கு பயிற்றுவிப்பது முட்டாள்தனம். நீங்கள் வைத்திருக்கும் 'கீழ்ப்படிதல்', 'ஒழுக்கம்' ஆகிய வரையறைகளுக்கு உங்கள் பெண் வரவில்லையென்றால் அவளை மனச்சிதைவுக்கு ஆளாக்கும் வகையில் வார்த்தைகளை விடுவது வன்முறை - உணர்வு சிதைத்தல். 

ஒரு தாயாக உங்களுக்கு இருக்கும் ஒரே கடமை, உங்கள் பெண்ணை 'பிறர்-சாராமல்' வாழப்பழக்குவது தான். உங்களுடைய இன்செக்யூரிட்டியை பிறருக்கு பரப்புவது வன்மம் - அதை உங்கள் பெண் மேல் திணித்து அவளை உங்களைப் போலவே ஒரு ஆணாதிக்கவாதியாக மாற்றுவது தீவிரவாதம்.  

எனக்கு நிச்சயமாய் மனிதர்கள் மீது இப்போது நம்பிக்கையே இல்லை. ஏதோ, வார்த்தைகளின் மீதும், எழுத்தின் மீதும் கொஞ்சம் நம்பிக்கை இருப்பதால் இதை எழுதுகிறேன். 

அப்பாவின் பைக் ஹார்ன் சவுண்ட் கேட்டு பயந்து ஓடி, அமைதியாய் அடங்கும் குடும்பமாக நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்றாலே, உங்களுடைய குடும்பமும் பெரும்பாலான குடும்பம் போலவே பெண் விடுதலைக்கு எதிரானது; உங்கள் வீட்டில் இருக்கும் பெண் பிள்ளையின் இயல்பு, புற்றுநோய் போல பரவும் பிற்போக்குத்தனத்தால் வேக வேகமாக அரிக்கப்படுகிறது. நீங்கள் பயப்படும் அளவிற்கு பெண் விடுதலை வேதனையாக இருக்காது - கொஞ்சம் முயற்சித்து பார்த்தாலே புரியும்.

- கார்தும்பி, பத்தியாளர் - தொடர்புக்கு snehabelcin@gmail.com

| ஓவியம்: சௌந்தர்யா ரவி

முந்தைய அத்தியாயம்: கடைசி பெஞ்சுக்காரி - 11 | சமகாலத்தின் தனியொரு மீட்பர்! 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close