தமிழிசை முதல் ஓவியா வரை: வியத்தகு 10 விருதுகள்!

  சிவசங்கரி கோமதி நாயகம்   | Last Modified : 11 Jul, 2018 02:05 pm

மகளிர் தினத்தன்று மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த வியப்புக்குரிய 10 பெண்களுக்கு மகுடம் சூட்டுவதானே முறை. கடந்த ஓராண்டில் சமூக வலைதளங்களிலும் மக்கள் மன்றத்திலும் வைரலாகப் பேசப்பட்ட பெண்மணிகளுக்கு Newstm சார்பில் பதியப்படும் சிறப்பு விருதுப் பட்டியல் இதோ... 'டமால்', 'டுமீல்' என கேள்விகளையும் கிண்டல்களையும் அள்ளி வீசும் மீடியா, மக்கள் மற்றும் மீம் க்ரியேட்டர்ஸ்... இப்படி பல தரப்பையும் அசால்ட்டாக சமாளித்து தமிழில் இசையாக பேசுபவர். இயற்பெயர் தமிழிசை என்றாலும் டுமிழிசை என்ற பெயரில்தான் சமூக வலைதளங்களில் இவர் மிகவும் பிரபலம். ஆக, இந்த ஆண்டின் 'திருமிகு. கூல் பெண்மணி' என்ற பட்டம் பெறுபவர், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்!

சென்ற ஆண்டிற்கான பெரியார் விருதைப் பெற்று, தான் மட்டுமல்லாமல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியவர். அதற்குப் பிறகு அவர் மீடியா ஒன்றிற்கு கொடுத்த பேட்டி, மீம் க்ரியேட்டர்ஸ்-க்கு கிடா விருந்து படைத்தது போல் ஆகிவிட்டது. கட்சிக்காக சிறந்த கொள்கைகளை மக்கள் மத்தியில் பரவ விடுபவர். இந்த ஆண்டின் 'சிறந்த கொள்கைப் பரப்புச் செயலாளர்' விருதை பா.வளர்மதி தட்டிச் செல்கிறார்.

வெளியே வருவாரா? மாட்டாரா? என்று மக்களை ஆர்வத்திற்குள்ளாக்கி, ஒவ்வொரு படியிலும் பல தடைகளைத் தாண்டி பிரம்மாண்டமாக வெளியில் வந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த 'பத்மாவத்' இந்த ஆண்டின் 'சிறந்த போராளி' விருதைப் பெறுகிறார்.

"கொக்கு நெட்ட கொக்கு, முட்டை இட்ட கொக்கு" என்ற கருத்துள்ள பாடலைப் பாடி இளைஞர்களின் தூக்கத்தை கொள்ளையடித்தவர். மருத்துவ முத்தம் பெற்ற இவர் இப்போது விருது வழங்கும் விழாவில் மருத்துவ முத்தம் வழங்கி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தினார். இளைஞர்களின் கனவு தேவதையாக வலம் வந்த, வலம் வருகின்ற ஓவியா இந்த ஆண்டின் 'யூத் ஐகான் விருது' வெல்கிறார்.

மோடி முதல் பக்கத்துக்கு வீடு டாடி வரை என்னைப் பார்த்துதான் அவள் கண்ணடிக்கிறாள் என்று நினைத்து வெட்கப்பட வைத்தவர். ஒரே கண்ணசைவில் ஓவர்நைட் ஸ்டாராகி எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைத்த ப்ரியா வாரியர் இந்த ஆண்டின் 'சிறந்த கண்ணழகி' பட்டத்தை வெல்கிறார்.

குறும்படம்தான் எனினும் ஒரே வாரத்தில் வலைத்தளங்களில் வைரலாகி ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்த லட்சுமி மக்களிடம் போற்றலும் தூற்றலும் என இருதரப்பட்ட விமர்சனங்களையும் தாங்கிவந்தாள். லட்சுமி-யாக நடித்த ப்ரியா சந்திரமௌலி இந்தஆண்டின் 'புரட்சிப் பெண்' பட்டம் பெறுகிறார்.

மயிலாக தமிழ் மக்களின் நெஞ்சங்களில் தோகை விரித்து ஆடிக்கொண்டிருக்கும்போது, நிலவாக (சாந்தினி) மாறி ஹிந்தி மக்களின் மனங்களில் குடிபெயர்ந்து, இந்திய சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தார். சற்றும் எதிர்பாராதவிதமாக கல்யாணக் கொண்டாட்டத்திற்குச் சென்று சவப்பெட்டியில் திரும்பி வந்து மக்களைக் கண்ணீர் மழையில் ஆழ்த்திய அந்த 'மயில்' ஸ்ரீதேவி இந்த ஆண்டின் 'பேரிழப்புப் பெண்மணி'.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை என்று பாரதி கண்ட தமிழ்ப் பெண்கள் ஏராளமானோர் இன்று வலம் வந்தாலும், இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவியேற்ற இரண்டாவது பெண்மணியான நிர்மலா சீதாராமனுக்கு 'காக்கும் கரங்கள்' விருது வழங்கப்படுகிறது.

நாட்டின் நிகழ்வுகளையும், பெண்களின் பாதுகாப்பற்றச் சூழலையும் படத்தின் ஒரே வசனத்தில் எல்லா விஷயத்தையும் அருவி போல் கொட்டி மக்களின் மனதில் நற்சிந்தனையை விதைத்து சிந்திக்க வைத்ததனால் 'அருவி' பட கதாநாயகி அதிதி பாலனுக்கு 'திரையழகி' விருது வழங்கப்படுகிறது.

இவ்வளவு நேரம் நீங்கள் மற்ற பெண்களின் முன்னேற்றத்தைப் பற்றி படித்துக் கொண்டிருக்கும்போது உங்கள் மற்றும் உங்கள்வீட்டுக் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டு இருக்கும் உங்கள் வீட்டுப் பெண்மணிகள் எல்லோரும் இந்த ஆண்டின் சிறந்த குடும்பப் பொறுப்பாளர்' ஆக மிளிர்கின்றனர். - சிவசங்கரி கோமதி நாயகம்

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.