கடைசி பெஞ்சுக்காரி - 12 | யாரைத்தான் நம்புவதோ..?

  கார்தும்பி   | Last Modified : 14 May, 2018 01:11 pm

ஆதார் கார்டை 'பிளா பிளா' வசதிகளுடன் இணைப்பதற்கான கெடு காலவரையின்றி நீட்டிக்கப்படுகிறது என நீதிபதிகள் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன் ஆதார் எடுக்க கோவை கலக்டரேட்டிற்கு போயிருந்தேன். அங்கே வரிசையில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் 'ஆதார் க்யூவா' என்றேன். அவர் என்னை மெலிதாய் முறைத்து விட்டு திரும்பிவிட்டார். எல்லாருக்கும் டோக்கன் கொடுத்தார்கள். எல்லாரும் வரிசையில் நின்று கொண்டிருந்தோம். என்னைப் பார்த்து முறைத்த அதே அம்மா, வரிசையில் எனக்கு முன் வந்து நின்றார். நம்பர் அழைத்துக் கொண்டிருந்தார்கள். 

'உங்க நம்பர் பனிரண்டா' என அவரிடம் கேட்டேன். கேட்காதது போலவே நின்று கொண்டிருந்தார். மறுபடியும் 'உங்க நம்பர்..?' எனத் தொடங்கியபோதே அழுத்தமாய் என்னை பார்த்து முறைத்தார்.

பயோ-மெட்ரிக் தகவல்கள் எடுக்க கண்ணை ஸ்கேன் செய்வீர்களா என அங்கிருந்த அலுவலரிடம் கேட்டுவிட்டு உடனேயே, 'அய்யோ, எனக்கு கண்ணுல பிராப்ளம் இருக்கு. இதெல்லாம் பண்ணுன இன்ஃபெக்‌ஷன் ஆயிடும். இதை எல்லாம் எடுத்து எடுக்குறீங்க' என அதே வாக்கியங்களை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். அந்தக் கூட்டமே மெல்ல அச்சுறுத்தப்படுவதாக உணரும் அளவு அதை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார். சில நிமிட போராட்டத்திற்கு பிறகு 'எனக்கு ஆதார் வேண்டாம்' என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். 'மெண்டல்' என்றது ஓர் ஆண் குரல்.

அவர் மனச்சிதைவுக்கு ஆளானவராக இருப்பார் என்றுதான் நானும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். பிற மனிதர்களை நம்பவே முடியாத ஒரு மனநிலைக்கு போவதற்கு முன் எவ்வளவு ஏமாற்றங்களையும், துரோகங்களையும் சந்திக்க வேண்டியதாக இருந்திருக்கும்? அந்த அம்மா அளவிற்கு இல்லையென்றாலும், நானும் பெரிதாக மனிதர்களை நம்புவதில்லை. ஒரு சிறு ஏமாற்றமும் அவநம்பிக்கையை உண்டாக்கிவிடுவதாக இருக்கிறது.  'No', ' I dont know', 'I hate you' மாதிரியான வாக்கியங்களைதான் நான் அடிக்கடி உபயோகிப்பதாக எனக்குத் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.

அடிப்படையில் 'Trust issues'. இன்செக்யூராக இருக்கும் பெண்கள், யாரையும் தங்களுக்குள் அனுமதித்துக் கொள்ள மாட்டார்கள். யாருமே தங்களை நெருங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். எதையுமே எதிர்பார்த்துவிடக் கூடாது, எதிர்பார்த்தால்தான் ஏமாற்றம் வரும் என எதிர்பார்ப்புகளின்றி, ஏமாற்றங்களை சமாளிக்க ஆயுதங்களோடு காத்திருப்பார்கள். இவ்வழியில் தாங்கள் வலிமையானவர்களாக இருப்பதாக நினைத்து சமாதானம் செய்து கொள்வார்கள். அதேசமயத்தில், எதையோ பெரிதாக மிஸ் பண்ணுவதாகவும் உணர்வார்கள். அணிந்திருக்கும் இந்தப் பாதுகாப்பு கவசம்தான் 'எதையோ மிஸ் பண்றோம்' உணர்வை தருவதாக இருக்கும்.

இந்த உணர்வுகளை நாற்பதுகளுக்கு மேல் இருக்கும் பெண்களிடம்தான் அதிகம் கவனித்திருக்கிறேன். ஆனால், இருபது வயதிற்கு முன்னரே நானும் இப்படி ஒரு பெண்ணாய் மாறிப் போயிருக்கிறேன். ரூபி கவுர் போலவே தட்டையான, மொக்கையான கவிதைகளை எழுதி வாட்ஸப் ஸ்டேட்டஸிலும், ஃபேஸ்புக்கிலும் பதிவிடும் பல இளம்பெண்கள் 'trust issues'களோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அப்பட்டமாய் தெரிகிறது. 'ஷாஷாங்க் ரிடம்ஷன்' படம் முழுக்க 'நம்பிக்கை மனிதனை பித்தாக்கிவிடும்' என மார்கன் ஃப்ரீமன் உழல்வதை போலவேதான் கொந்தளிக்கும் மனதை நிதானப்படுத்த முடியாமல் திணறுவோம்.

'ஏன் எல்லாரும் இப்படி இருக்காங்க..?' என்பதை நான் பல பேரிடம் பல மாடுலேஷனில், சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கிறேன். பலர் என்னிடமும் கேட்டிருக்கிறார்கள். போதையின் உச்சத்திலோ, சீரிய சிந்தனையிலோ இருந்த ஒருவர், நான் இப்படி கேட்டதற்கு பதிலாக 'அப்படித்தான் இருப்பாங்க' என்று சொன்னார். வகுப்பறையில் நின்றிருந்த பேராசிரியர், 'இந்த உலகில் மனிதர்களை நம்ப முடிகிறதா?' எனக் கேட்க மொத்த வகுப்புமே 'இல்லவே இல்லை. நிச்சயமாக நம்ப முடியவே முடியாது' என்று கத்தியபோது, டேபிள் மீது லாவகமாக ஏறி உட்கார்ந்து கொண்டு எங்களை பார்த்து 'அப்படியென்றால், நீங்கள் நம்பும்படியாக இல்லை என்று தானே அர்த்தம்?' என்றார். இங்கு எல்லாருமே சுயநலமாகத்தான் இருக்கப் போகிறார்கள், யாரையுமே நம்மால் மாற்றிவிட முடியாது என்பதைதான் மேற்சொன்ன இருவரும் வெளிப்படுத்துகிறார்கள். 

இதை நம்மால் கொஞ்சமாவது ஏற்றுக்கொள்ள முடிந்தால்தான் தற்காலிக நிம்மதி கூட சாத்தியப்படும். இதை ஏற்றுக்கொண்டால் தான் கவிதை எழுதவும், படம் வரையவும், பல நினைவுகளை மறக்கவும் முடியும்.

காதல் தோல்வி, பொறுப்பில்லாத அல்லது இல்லாத அப்பா, புறம்பேசும் தோழிகள், 'மாரல் போலிசிங்' செய்யும் பக்கத்து வீட்டுக்காரர்கள், வகுப்பறையில் தீவிரவாதத்தை விதைக்கும் ஆசிரியர்கள் என தினசரி மனமுடைய, அவநம்பிக்கைக் கொள்ள டிசைன் டிசைனாக காரணங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். இந்த அழுத்தங்களை எல்லாம் கடக்க தேவையான நேரத்தை எடுத்துக்கொண்டு, மீண்டும் இவற்றை சந்திக்க வேண்டும். அதற்கு கொஞ்சம் நம்பிக்கை அவசியமாகிறது. ஒருவேளை, இந்த உலகம் நாம் நினைக்குமளவு மோசம் இல்லைதான் என நம்ப வேண்டும்.

ஏமாற்றிவிடுவார்கள், பிரிந்து போய்விடுவார்கள் என பயந்து மனிதர்களுடன் நெருங்கி பழகாமல் இருப்பது அவசியமே இல்லாதது. நெருங்கிப் பழகுவோம். ஏமாறுவோம். அழுவோம். அடுத்த வேலையை பார்ப்போம். நிறைய பேர் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதே கதையை இதை விட அழகாக பல ஹாலிவுட் படங்கள் சொல்லியிருக்கின்றன. மன அழுத்தம் உச்சத்தில் இருக்கும்போது அதை எல்லாம் பார்க்கலாம் - தெரபி மாதிரி!

- கார்தும்பி, பத்தியாளர் - தொடர்புக்கு snehabelcin@gmail.com

| ஓவியம்: சௌந்தர்யா ரவி | 

முந்தைய அத்தியாயம்: கடைசி பெஞ்சுக்காரி - 11 | சமகாலத்தின் தனியொரு மீட்பர்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close