நீங்க சொல்ற பழமொழிகளுக்கு உண்மையான அர்த்தம் தெரியுமா?

  Sujatha   | Last Modified : 22 May, 2018 12:08 pm


1) ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

அறிந்த விளக்கம் :

மற்றவர்கள் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் குழந்தை தானே வளர்ந்து விடும்.

உண்மையான விளக்கம்: 

ஊரான் வீட்டு பிள்ளையாகிய உன் கர்ப்பிணி மனைவியை பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயற்றில் இருக்கும்  உன் குழந்தையும், ஆரோக்கியமாக தானே வளரும் என்பதே உண்மையான பொருள்.


2.) கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.

அறிந்த விளக்கம் :

கழுதைக்கு கற்பூர வாசம் தெரியாது.

உண்மையான விளக்கம்: 

'கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை'.

கழு என்பது ஒரு வகை கோரைப்புல். அதில் பாய் தைத்து படுத்து பார்த்தால் கற்பூர வாசனை தெரியும் என்பதே சரியான விளக்கம்.


3.) ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.

அறிந்த விளக்கம் :

ஆயிரம் மக்களை (நோயாளிகளை) கொன்றவன் பாதி வைத்தியன்.

உண்மையான விளக்கம்: 

ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் ஆவான்.

நோயை போக்க ஆயிரம் வேரை கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான்.


4.) அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல

அறிந்த விளக்கம் :

அரசனை மேல் (ஆசை) நம்பிக்கொண்டு, தன கணவனை கைவிட்டது போல.

உண்மையான விளக்கம்: 

அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல

அரசினை என்பது அரச மரத்தை குறிக்கும். திருமணமான பெண்கள் பிள்ளைப்பேறு பெற அரச மரத்தை சுற்றுவார்கள். கட்டிய கணவனை கவனிக்காமல் வெறும் அரச மரத்தை சுற்றுவது பயன் தராது.


5.) ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.

அறிந்த விளக்கம் :

ஐந்து பெண்களை பெற்றெடுத்தால், அவர்களுக்கு செய்ய திருமணம், சீர் போன்றவற்றை செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டி ஆண்டி ஆகிவிடுவான் .

உண்மையான விளக்கம்: 

கீழ்க்கண்ட ஐந்தும் கிடைத்தால் அரசனும் ஆண்டி ஆவான். 1.ஆடம்பரமாய் வாழும் தாய்; 2.பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன்; 3.ஒழுக்கம் தவறும் மனைவி; 4.துரோகம் செய்யும் உடன் பிறப்பு; 5.பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை. இந்த ஐந்தும் கொண்ட எந்தக் குடும்பமும் முன்னுக்கு வராது என்பதே பொருள்.


6.) சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

அறிந்த பொருள்:

சட்டியில் என்ன (சோறு) இருக்கிறதோ அது தான் நமக்கு கிடைக்கும்.

உண்மையான விளக்கம்: 

சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை வரும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று பொருள் கொள்ள வேண்டும்.


7.) சேலை கட்டிய பெண்ணை நம்பாதே!

அறிந்த விளக்கம் :

சேலை கட்டும் பெண்களை நம்பாதே!

உண்மையான விளக்கம்: 

சேல் அகட்டிய பெண்ணை நம்பாதே!

சேல் என்பது கண்ணை குறிக்கும். கணவன் உடனிருக்கும் போது, (சேல்) கண்ணை அகட்டி வேறொருவனை பார்க்கும் பெண்ணை நம்ப கூடாது.


8.) பந்திக்கு முந்து ! படைக்கு பிந்து !!

அறிந்த விளக்கம் :

பந்திக்கு முதலில் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டும்;இல்லாவிடில் பலகாரம் நமக்கு முழுமையாக கிடைக்காது, போருக்கு செல்பவன் படைக்கு பின்னால் நின்று கொள்ள வேண்டும். அப்படி செய்தால், உயிருக்கு ஆபத்து வராது.

உண்மையான விளக்கம்: 

பந்திக்கு முந்து என்பது சாப்பிட போகும் போது நமது வலது கை எப்படி முன்னோக்கி செல்கிறதோ, அது போல போரில், எவ்வளவு தூரம் வலதுகை வில்லின் நாணலை பிடித்து பின்னால் இழுக்கிறதோ, அந்த அளவுக்கு அம்பு வேகமாய் பாயும். இது போருக்கு போகும் வில் வீரருக்காக சொல்லியது 


9.) மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?

அறிந்த விளக்கம் :

மண் குதிரையில் ஆற்றை கிடந்ததால், உடனே மண் கரைந்து, ஆற்றில் மாட்டி கொள்ள நேரிடும்.

உண்மையான விளக்கம்: 

மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?

மண் குதிர் என்பது ஆற்றின் நடுவில் இருக்கும் மணல் திட்டு /மேடு. இதை நம்பி ஆற்றில் இறங்கினால் ஆற்றில் சிக்கி கொள்ள நேரிடலாம்.


10. போக்கத்தவனுக்கு போலீஸ்காரன் வேலை. வாக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை.

அறிந்த விளக்கம் :

நிறைய பேர் இதை அறிந்திருக்க கூடும். உண்மையான விளக்கமும் தெரிந்திருக்கலாம்.சாதாரணமாய் படிக்கையில் போக்கிடம்

இல்லாதவன் அல்லது வெட்டித்தனமாய் சுற்றுபவன் காவல் துறை அதிகாரிக்கும், எந்தவித பின்புலமும் ,செல்வமும் இல்லாதவன் வாத்தியார் வேலைக்கும் ஏற்றவர்கள்/செய்பவர்கள் என்று அர்த்தம் கொள்ளும்படி ஆகி விட்டது.

உண்மையான விளக்கம்: 

வார்த்தைகளை சற்று பிரித்து பொருள் கொண்டோமேயானால் இந்த உட்பொருளை சொல்ல வந்த விளக்கத்தை எளிதாக விளங்க

கொள்ளலாம். போக்கத்தவன் = போக்கு + கற்றவன் அதாவது ஒழுங்குகளை கற்றுக் கொண்ட மனிதன் போலீஸ் வேலைக்கு

தகுதியானவன். வாக்கத்தவன் = வாக்கு +கற்றவன்.. வாக்கு என்பது சத்தியம்,அறிவு என்றெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது,

மொத்தத்தில் படித்தவன், அறிவு பெற்றவன். இந்த தகுதிகளை கொண்டவன் கற்பித்தல் பணிக்கு தகுதியானவன். இதைக் கொண்டே சொல்லப்பட்ட மொழி மறுகி திரிந்து மேற்கண்ட முறையில் வந்துவிட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close