கடைசி பெஞ்சுக்காரி - 13 | நம் பள்ளிகளும் பிற்போக்குத்தனமும்!

  கார்தும்பி   | Last Modified : 23 May, 2018 02:32 pm

 பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முந்தைய நாள், நான் ஒரு பரீட்சை எழுத முடியாமல் அலைக்கழிக்கப்படுவதாக ஒரு கனவு. கனவு கலைந்து எழுந்ததும் தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களை நினைத்து அவ்வளவு வருத்தமாக இருந்தது; நல்ல வேளையாக நான் இப்போது தேர்வு முடிவுகளுக்கு காத்திருக்கவில்லை என்று ஆறுதலாகவும் இருந்தது. 

பலரைப் போலவே கணக்கு பரீட்சைக்கு முன் வயிற்றுவலி, வாந்தி, தலைவலி, மயக்கம், காய்ச்சல் என எல்லாமே எனக்கும் வரும். ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி வகுப்புகளிலும் இதே மனநிலையில்தான் உட்கார்ந்திருப்பேன். எங்கள் வகுப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஒருவரை ஒருவர் தொடக் கூடாது என்று 'நோ டச்' ரூல் ஒன்றை பள்ளி முழுக்க அமல் செய்திருந்தனர். பள்ளி வளாகம் முழுதும் அடக்குமுறை. மொழிப் பாடங்களில் கொஞ்சம் நிம்மதியிருக்கும். மற்றபடி, பள்ளிக்காலத்தில் நானும், உடன் படித்தவர்களும் பெரிய அளவில் மனச்சிதைவிற்கு ஆளாகிருந்தோம்.

 ஒரு குழந்தையை வடிவமைக்க பள்ளி போன்றதொரு சமூகக் கூடம் முக்கியமானதாக இருக்கிறது. ஆனால், பசுமை மாறாத ஒரு குழுந்தையின் உள்ளத்தில் முதன்முதலில் விதைக்கப்படுவது பிரிவினையின் பாடங்களாகவே இருக்கும். இந்து பள்ளி, கிறிஸ்தவ பள்ளி என்று தனித்தனியாக அல்ல. இந்தியா முழுக்க இருக்கும் பெரும்பாலான பள்ளிக்கூடங்களும் பிற்போக்குத்தனத்தை பிரச்சாரம் செய்பவை தான் என்று என்னால் அடித்து சொல்ல முடியும்.

 சமகால இந்திய சமூகத்தில் பின்னடைவை உண்டாக்கும்படியே ஒவ்வொரு மாணவரும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். 'அவன் ஆம்பள பையன், சட்டையில்லாம கோயிலுக்குள்ள போவான், நீ போவியா?' என்ற வரலாற்று ஆசிரியரும், 'இது ஆர்.சி ஸ்கூல், ஆர்.சி புள்ளைங்கதான் எல்லாத்துலையும் ஃப்ரண்ட்ல வரணும்' என்ற பள்ளி முதல்வரும் எல்லாம்தான் இங்கு ஆசான்கள். மூன்று வயதிலிருந்து பதினேழு வயது வரை இருக்கும் பிள்ளைகளை எப்படி நடத்த வேண்டும் என உளவியல் அறிவு இல்லாதவர்கள்தான் பெரும்பாலும் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். ஆசிரியர் தொழில் பாதுகாப்பான தொழில், ஒன்பது மணிக்கு போய்விட்டு ஐந்து மணிக்கு வந்துடலாம், சும்மா வீட்டில் இருப்பதற்கு பதில் எதாவது வேலை செய்யலாம் என்பதுதான் எனக்கு பாடம் நடத்திய பலரும் ஆசிரியர் ஆனதற்கு காரணம்.

 தனித்தனியே க்ரூப் செட் செய்து அதற்கு ஒரு லீடர் அமர்த்தி அவளுக்கு பெரும் பொறுப்பை கொடுத்து மற்ற பிள்ளைகளை குறைபாடுள்ளவர்களாக உணரச் செய்வது தொடங்கி, 'என்ன இருந்தாலும் அவன் ஆண்பிள்ளை' எனும் ஆணாதிக்க பிரச்சாரம் வரை பள்ளிக்கூடங்களில் நடக்கும் சிதைவுகளை நினைத்தாலே அருவருப்பாக இருக்கிறது.

 இதைவிட பெரும் வேதனையாக இருந்தது, வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு இருக்கும் அதிகாரம். ஏதேச்சதிகாரம். கற்றல் இருவழி பயணம் என்பதை எத்தனை ஆசிரியர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்? எந்த வகுப்பில் விவாத ஆரவாரம் இருக்கிறதோ அங்குதான் மாணவர்கள் உண்மையில் கல்வி பெறுகிறார்கள் என்பதை ஏற்காமல் 'இதென்னா க்ளாஸ் ரூமா? இல்ல, மீன் மார்க்கெட்டா?' என திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள். 

'தி க்ளாஸ்' என்றொரு ஃபிரெஞ்ச் சினிமாவில் வரும் வகுப்பறை கோலகலமாக இருக்கும். அங்கு நடக்கும் விவாதங்கள் தாராளவாதத்தை இளமையிலேயே கற்பிப்பதன் விளைவை வெளிப்படுத்துபவையாக இருக்கும். ஆசிரியர் வெறும் கருவியாக மட்டுமே இருப்பார். ஆசிரியரோடு சண்டை போட்டு 'உங்களுக்கு என்னைப் பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது, அதனால்தான் எப்போதும் என்னிடம் மட்டுமே கேள்வி கேட்கிறீர்கள். இனி என்னிடம் கேட்காதீர்கள்' என்று கடிதம் எழுதுவாள் ஒரு மாணவி. இப்படி ஒரு வகுப்பறையில் நான் படித்திருந்தால், எனக்கு அறிவியலும் கணிதமும் நிச்சயம் கசந்திருக்காது. 

இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? 

2007-ம் ஆண்டில், இரண்டு மாணவர்களை ஸ்கேலால் அடித்து வகுப்பு வெளியே முழங்காலிட வைத்திருக்கிறார் ஓர் ஆசிரியர். அதில் ஒருவன் 'ஸ்டூடன்ஸை அடிக்கக் கூடாதுன்னு சட்டம் இருக்குல்ல.. ஏன் அடிக்குறாங்க?' எனக் கேட்டதை மற்றவன் ஆசிரியரிடம் போட்டுக் கொடுக்க 'என்ன சட்டம் பேசறியா?' என கேட்டு மறுபடியும் அடித்திருக்கிறார். பள்ளிக்கூடத்தில் புடவை பிசினஸ் செய்கிறார் ஓர் ஆசிரியர். மாதவிலக்கானதால் யூனிஃபார்மில் ரத்தக்கறை ஆன பெண்ணை ஆசிரியர் அவமானப்படுத்தியதால் அவள் தற்கொலை செய்துகொள்கிறாள். பள்ளிக்கூட கட்டிடங்களில் இருந்து மன அழுத்தம் தாளாமல் எட்டாம் வகுப்பு மாணவிகள் குதிக்கிறார்கள். 

இந்தியாவிற்கு இங்கிலாந்தால் அளிக்கப்பட்டிருக்கும் தற்போதைய கல்விமுறை 'தங்களுடைய காலனிய ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் அடிமைகள் அடிமைகளாகவே இருப்பதற்காக வடிவமைக்கப்பட்டதாக தானே இருக்கும்?' என்பார் எழில். 

உண்மையில், தற்போது இந்தியாவிற்கு தேவையான இளைஞர்களை பள்ளிக்கூடங்கள் உருவாக்கவில்லை. கல்வி நிறுவனங்களில் பெரும்பான்மை வலதுசாரிக் கொள்கைகள் உடையவையாக இருக்கின்றன; அவை வெறும் இயந்திரங்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. அந்த இயந்திரங்கள் காரணமே புரியாமல் ஃபேஸ்புக்கில் 'வந்தே மாதரம்' என ஸ்டேட்டல் போடுபவைகளாக இருக்கின்றன; பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு வேண்டும் என கூவுபவைகளாக இருக்கின்றன; 'சென்னை பொண்ணுங்க / பசங்க' மாதிரியான மீம் பேஜை தொடங்கி 'துப்பட்டா போட்ட பெண்களைதான் ஆண்கள் விரும்புகிறார்கள்' என உளறுபவைகளாக இருக்கின்றன.

பள்ளிக்கூடங்களில் ஒன்றும் உருப்படியாக சொல்லித் தரப்படவில்லை என்று பள்ளியை விட்டுவிட்டு பதினான்கு வயதில் சினிமா கற்க சென்றவர் சமீரா மக்மல்பஃப். தமிழ்நாட்டிலும் வெற்றிகரமாக 'ஹோம்-ஸ்கூலிங்' செய்து கொண்டிருக்கிறார்கள் சில பெற்றோர்கள். இது மட்டுமே மாற்று வழி என முன்மொழியவில்லை. ஆனால் தேர்வுகளும், வசைகளும், அவமானங்களும், அடக்குமுறையும் இல்லாத கல்வியை பெற நம் குழந்தைகள் தகுதியானவர்கள் என்பதை கொஞ்சம் உரக்கச் சொல்ல வேண்டும்.

- கார்தும்பி, பத்தியாளர் - தொடர்புக்கு snehabelcin@gmail.com

| ஓவியம்: சௌந்தர்யா ரவி

முந்தைய அத்தியாயம்: கடைசி பெஞ்சுக்காரி - 12 | யாரைத்தான் நம்புவதோ..?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close