கடைசி பெஞ்சுக்காரி - 14 | மரண வீடுகளில் ஒலிக்கும் பாடல்கள்!

  கார்தும்பி   | Last Modified : 04 Jun, 2018 07:59 pm

ee-ma-yau-malayalam-movie-and-its-effects

மரணத்தை பெரும் விடுதலையாக எதிர்பார்த்திருப்பவர்களை பற்றி கவலையே இல்லை. ஆனால், வாழ்க்கையை ரசிப்பவர்களுக்கும், வாழ்க்கையை எதிர்பார்த்திருப்பவர்களுக்கும் மரணம் விடுதலை கிடையாது.

இறந்தவர்களை எழுப்பி, 'இங்கே வாழ்தல் ஒன்றும் அவ்வளவு சிறப்பில்லை... நீ வருந்தாதே' என்று சொல்லிவிட மனது துடிக்கும். அநியாயமான மரணங்களை எல்லாம் என்ன நினைத்து சமாதானமாவது? எப்படி மனதின் கொந்தளிப்பு அடங்கும்? யாரிடம் போய் அழுவது?

"அய்யா.. எங்கப் பிள்ளைங்க அப்பனை காணல்லையா.. கண்டுபிடிச்சு கொடுங்கையா..." என ஒக்கி புயலில் கணவனை இழந்த கிழவி ஊடகத்தின் முன் ஒப்பாரி வைக்கும் இயலாமையை என்னால் சொல்லிவிட முடியாது. 

ஸ்னோலினை பற்றி நினைக்கும் போதெல்லாம் தொண்டைக் குழியில் ஏதோ திரள்வதை என்ன செய்ய முடியும்? நீங்களும் நானும் வெறும் சதைப்பிண்டங்கள். இனி நாம் குரலெடுத்து அழ இருக்கும் உரிமையும் பறிபோகுமா? அவ்வளவு துரதிர்ஷ்டசாலிகளாக நாம்?

"கர்த்தாவே ஆழத்தில் நின்னும் இப்போல் 
ஆர்த்தனாய் கேளுன்னு பாவியாம் நான்
கர்த்தாவே என் சப்தம் கேட்கேணுமே 
அன்பொடு பிரார்த்தனா கைகொள்ளனே"

இப்படி ஒரு பாடல் உண்டு. கடைசியாக ஈ.மா.யௌ (Ee.Ma.Yau) படத்தில்தான் இதைக் கேட்டேன். மீனவ கிராமங்களில் இருக்கும் கிறிஸ்துவ மரண வீடுகளில் ஒலிக்கும் பாடல். மீனவ கிராமங்களில் இருக்கும் தேவாலயங்களிலும் ஒலிக்கும். என்னைப் போலவே அடிக்கடி மனம் பிறழும் இயல்புடையவராக நீங்கள் இருக்கும் பட்சத்தில், இந்தப் பாடலை ஒருமுறை கேட்டதும், அது உங்களுக்குள் ஒலிக்கத் தொடங்கிவிடும். 

படம் எதையெல்லாமோ பேசியது. ஆனால், எனக்கு நினைவிருப்பது அந்த பாதிரியாரும், காவல் நிலையமும் மட்டும்தான். 
ஆட்டுக்குட்டியை கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டே மந்தையை வழிநடத்தும் மேய்ப்பனுக்கு ஒப்பாக அல்லவா மத நம்பிக்கை உள்ளவர்களால் இங்கு பாதிரியார்கள் புகழப்படுகிறார்கள்? அப்புறம் ஏன் அந்த பாதிரியாரை ஈஸி ஓங்கி அடிக்கும்போது தியேட்டரில் எல்லாரும் ஆரவாரம் செய்கிறார்கள்? 

காவல்துறையினரிடம் உதவி கேட்க போகும் விநாயகம் அங்கிருந்து விம்மி வெடித்து வெளியேறுவது தான், காவல்துறைக்கும் பொதுமக்களுக்குமான எப்போதைக்குமான உறவின் பிம்பம். 

காவல்துறை அதிகாரிகள் முதலாளித்துவத்தின் ஆயுதங்கள். காவல்துறை அதிகாரிகள் அரசின் ஆயுதங்கள். எந்த அரசும் நமக்கானது அல்ல. ஜனநாயகத்தை போலொரு வஞ்சகம் வேறில்லை. விரக்தி மட்டுமே நிரந்தரம். இவ்வளவு விரக்திக்கு மத்தியில் போராடி, உயிர் விடும் அத்தனை பேருக்காக தொடர்ந்து மரணப் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும். நாம் கடலோரத்தில் வெளிச்சம் ஏந்தி நின்று அவர்களை வழியனுப்புவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.
 
பலர் இன்னும் இந்தப் பாடலை கேட்டிருக்கவில்லை. அவர்களால்தான் போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் எனவும், போராட்டம் நாட்டை சுடுகாடாக்கும் என்றும் சொல்ல முடிகிறது.

என்றாலுமே, இந்தப் பாடல்கள் தொடர்ந்து ஒலித்து யார் யாரை எல்லாம் மன்னிக்கவே கூடாது என்று நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. 

நாடாளும் பெரிய அயோக்கியர்களையும், திமிர் பிடித்த முதலாளிகளையும், மதவெறியர்களையும் மன்னிக்காமல் இருக்க வேண்டுமென இன்னும் சத்தமாய் இந்தப் பாடல் ஓடிக் கொண்டே இருக்கிறது. மெலிதாக, மென்மையாக ஒலித்துக் கொண்டேயிருக்கும் இந்தப் பாடல் கடல் போல நம்மை ஆர்ப்பரிக்க செய்வதாகவே இருக்கிறது. 

- கார்தும்பி, பத்தியாளர் - தொடர்புக்கு snehabelcin@gmail.com

முந்தைய அத்தியாயம்: கடைசி பெஞ்சுக்காரி - 13 | நம் பள்ளிகளும் பிற்போக்குத்தனமும்!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.