கடைசி பெஞ்சுக்காரி - 15 | நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?

  கார்தும்பி   | Last Modified : 11 Jun, 2018 11:48 am

understanding-millennials-and-generational-differences

விகடன் பத்திரிகையில் சரவணன் சந்திரன் ஒரு தொடர் எழுதுகிறார். அதில் பெரும்பாலான பத்திகள் 'ப்ளா ப்ளா ஒரு தலைமுறையை நாம் உருவாக்கி விட்டோம்' எனும் வரியை கொண்டிருக்கின்றன. 'குற்றவுணர்ச்சி இல்லாத தலைமுறையை நாம் வளர்த்தெடுத்து இருக்கிறோம்', 'சுடுசொல் தாங்க முடியாத ஒரு தலைமுறையை நாம் வளர்த்தெடுத்திருக்கிறோம்...' - இப்படியான வாக்கியங்கள். 

மில்லினியல்ஸ் ( Millenials) மீது முந்தைய தலைமுறைகளுக்கு இருக்கும் வன்மத்தை புரிந்துகொள்ள இந்தத் தொடரை படித்தால் போதும். (எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் பிறந்து, 2000-ல் வயது வந்தோராக கருதப்படுபவர்களே 'மில்லினியல்ஸ்'.)

காதலன் திருட்டில் ஈடுபட்டிருக்கும்போது, அவனுடைய காதலி இன்னொருத்தனுக்கு 'ஐ லவ் யூ' என்று மெசேஜ் அனுப்பியிருப்பாள் - அவளுக்கு எந்தக் குற்றவுணர்ச்சியும் இருக்கவில்லை என்று அந்தத் தொடரில் எழுதப்பட்டிருக்கிறது. உண்மையில் காதலிப்பவர்களுக்கு தெரியும், இங்கு யாருமே யாரோ ஒருத்தரை மட்டுமே காதலித்துக் கொண்டிருப்பதில்லை என்று. Monogamy-ன் அபத்தங்களை எல்லாம் விவாதிப்பதில் மில்லினியல்ஸுக்கு பெரிய சிக்கல்கள் இருப்பதில்லை. ஆனால், மோசமான குழந்தை வளர்ப்பு நுட்பங்களை தங்களுடைய வெற்றியாக நினைக்கும் சிலருக்கு இதை பொறுத்துக் கொள்ளவே முடிவதில்லை. இப்படியான பெற்றோர்களுக்கு ஒருபாலீர்ப்பு தொடங்கி பாஷன் (passion) எனும் வார்த்தை வரை எல்லாமே கெட்ட வார்த்தையாகத் தெரியும்.
 
மில்லினியல்ஸ் Anxiety, Depression, Bipolar disorder, Dysthymia என பல மனநலச் சிக்கல்களை கையாள தயாரானவர்களாக இருக்கிறார்கள். மனநலக் குறைவை தீர்ப்பதற்கான முதல் கட்டமே பிரச்னையை பற்றி பேசுவதுதான். இப்படி மனம் திறந்து பேசுவதை கண்டாலோ, கேட்டாலோ முந்தைய தலைமுறையினர் சிலிர்த்தெழுத்து, 'அடேய்... உனக்கென்னடா எப்போ பாரு டிப்ரஷன், ஸ்ட்ரெஸ்? இருபது வயசுலயே உனக்கென்னடா மென்டல் பிரஷர்? எனக்கில்லாத டிப்ரஷனாடா உனக்கிருக்கும்..?' என சாமியாடத் தொடங்கிவிடுவார்கள்.

இப்படி பகடி பண்ணுவது முந்தைய தலைமுறையினருக்கு எவ்வளவு எளிதாக இருக்கிறது? தன்னுடைய குறையை மனம் திறந்து பேச நினைக்கும் ஒருவரை நீங்கள் இதைவிட பெரிதாக அவமானப்படுத்திவிடவே முடியாது. 

'பெற்றோர்' எனும் உரிமையிலோ, 'ஆசிரியர்' எனும் உரிமையிலும் ஒரு குழந்தையை வெர்பல் அப்யூஸுக்கு ஆளாக்குவது தப்பு என்பதை மில்லினியல்ஸ் எடுத்துச் சொன்னால், முந்தைய தலைமுறையினருக்கு மூக்கு வேர்க்கும். பி.எஸ்.ஜி காலேஜில் விஸ்காம் படிக்கும் ராகேஷ் சொன்னான், 'ஆமாக்கா... நம்ம அவங்க முன்னாடி கிங்கினி மிங்கினின்னு சுத்திட்டு இருந்திருப்போம்... திடீர்னு வளர்ந்து இப்படி இந்த விஷயம் நீங்க பண்றது தப்புன்னு சொன்னா, அவங்க அதை எப்படி ஏத்துப்பாங்க? அந்த ஈகோ கூடவா இருக்காது? கண்டிப்பா ஏத்துக்க மாட்டாங்க. கண்டிப்பா அவங்களை எல்லாம் மாத்தவும் முடியாது' என்று. 

நார்சிசிஸ்டிக் (Narcissistic) குணம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. நார்சிசிசம் - யதார்த்தத்தில் ஒரு மனநலக் கோளாறு. இது குழந்தை வளர்ப்பில் தலையிடும்போது உண்டாகும் சிக்கல்களில் குழந்தைகளின் தன்னம்பிக்கை குறைபாடு, பதற்றம், மன அழுத்தம், பைபோலார் டிஸ்-ஆர்டர் ஆகியவையும் உண்டு. நார்சிசிஸ பெற்றோர்கள் காரணமே இல்லாமல் ஒரு குழந்தையை திட்டித் தீர்த்துக் கொண்டே இருப்பார்கள். அதனுடைய உள்நோக்கம் அவர்கள் முதன்மையானவர்களாக உணர வேண்டும் என்பது மட்டும்தான். இதைச் சொன்னாலும் அவர்களுக்கு கோபம் வரும். 

உதாரணமாக, நீங்கள் புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போது 'ஆமா, நீ இப்போ கதை புக் படிச்சு என்னத்த கிழிச்ச?' என அம்மாவோ அப்பாவோ சொல்லிவிட்டு கடந்து செல்வது, ' நீ வெளையாண்டு என்னத்த கிழிச்ச?',  நீ ஸ்கூலுக்கு போய் என்னத்த கிழிச்ச' என்பதெல்லாம். நான் அடிக்கடி 'ஆமா.. நீ இப்போ எழுதி என்னத்த கிழிச்ச' என்பதை கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.
 
இந்தியாவில் இருக்கும் பெற்றோர்களில் அத்தனை பெரும் இப்படி ஒரு கோளாறோடுதான் குழந்தை வளர்த்திருக்கிறார்கள். சமகாலத்தில் ஒரு தலைமுறையை விமர்சிக்க வேண்டும் என்றால், அது மோசமான குழந்தை வளர்ப்பினால் மன நோய்கள் பலவற்றை உருவாக்கியிருக்கும் முந்தைய தலைமுறையினரைத் தான்.
 
இந்த நூற்றாண்டுக்கான வாழ்க்கை முறை மினிமலிசம்தான். நாம் எவ்வளவு இலகுவாக இருக்கிறோமோ, வாழ்க்கையும் அவ்வளவு எளிதாக இருக்கும். ஆனால், நாமெல்லாம் நுகர்வு கலாச்சார அடிமைகள். 'நீ பெரிய வேலைக்கு போய், நிறைய சம்பாதிச்சு, வீடு கட்டி, கல்யாணம் பண்ணி, கொழந்த பெத்து...' என்பது தான் மில்லினியல்ஸின் மூளைக்கு விதைக்கப்பட்டிருக்கும் முதல் தீவிர அறிவுரையாக இருக்கும். இப்படி நுகர்வு கலாச்சாரத்தை நோக்கி பிள்ளைகளை நகற்றும் பெற்றோர்தான் பிள்ளைகளில் பெரிய ஏமாற்றமும் அடைகின்றனர்.

மேற்கில் மிக எளிதாக சில மீம்கள் போட்டு மில்லினியன்ஸ் சந்திக்கும் பிரச்னையை காட்டிவிடுகிறார்கள். இன்றைக்கு பெருகியிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள், குறைந்திருக்கும் வேலை வாய்ப்பு, பரவி வரும் மன நோய்கள் என எதையுமே கணக்கில் கொள்ளாமல் , எதற்கெடுத்தாலும் 'இப்படி ஒரு தலைமுறை வளர்ந்து வருகிறது' என சிலோன் ரேடியோ செய்தி வாசிப்பாளர் மாதிரி எதற்குத்தான் புலம்பி கொண்டிருக்கிறார்களோ?

எஞ்சினியரிங் படித்தவர்களுக்கு வேலை இல்லை, விஸ்காம் படித்தவர்களுக்கு வேலை இல்லை, ஆங்கில இலக்கியம் படித்தவர்களுக்கு வேலை இல்லை, தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு வேலை இல்லை. அப்படி பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாது. மாதம் ஆறாயிரம் ரூபாய்க்கு எதாவது செய்தி தளத்தில் நியூஸ் எழுதலாம் அல்லது காப்பி ரைட்டர் ஆகலாம் அல்லது திருமணங்களில் ஃபோட்டோ எடுக்கலாம். இப்படித்தான் முட்டி மோதி ஏதேதோ செய்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் மில்லினியல்ஸ். 

எனக்கு இந்த தலைமுறை மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. நான் இந்த உதாரணத்தை ஓராயிரம் தடவை எனக்குத் தெரிந்தவர்களுக்கு சொல்லியிருக்கிறேன். மேலும் ஒருமுறை சொல்கிறேன். சில விலங்குகளுக்கு பிறவிலேயே நீச்சல் தெரிந்திருக்காது, ஆனால் தண்ணீரில் விழுந்த நொடியே திணறித் துடித்து, துள்ளி மிதித்து எப்படியோ அவை கரையேறிவிடும். அந்த விலங்குகள் உயிரை எவ்வளவு நெருக்கமாக நினைக்கின்றனவோ, அதே அளவு நெருக்கமாக பாஷன் எனும் பெருங்காதலை வைத்திருக்கிறார்கள் மில்லினியல்ஸ். இதற்கு மேலும்,உட்கார்ந்து உங்களுக்கு பாஷன் என்றால் என்னவென விளக்கப் போவதில்லை. 

நீங்கள் செய்யும் ஒரே உதவி, உங்களுடைய நார்சிசிச அழுக்குகளை பிரச்சாரம் செய்து எங்களை நிலைகுலையச் செய்ய நினைக்காமல் இருப்பது மட்டும்தான். 

ச்ச்சியர்ஸ்!

- கார்தும்பி, பத்தியாளர் - தொடர்புக்கு snehabelcin@gmail.com

| ஓவியம்: சௌந்தர்யா ரவி

முந்தைய அத்தியாயம்: கடைசி பெஞ்சுக்காரி - 14 | மரண வீடுகளில் ஒலிக்கும் பாடல்கள்!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close