சினிமா டூ விளையாட்டு: தனித்துவ தந்தை - மகன் கூட்டணி!

  சிவசங்கரி கோமதி நாயகம்   | Last Modified : 17 Jun, 2018 11:40 am

successful-father-son-combos

வீட்டிற்குத் தலைவர், அடித்தளம், ஆணிவேர் என்று பலதரப்பட்ட பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டாலும் தந்தை என்பவர் எப்போதும் காட்சிகளுக்குப் பின்னால் நின்றே செயல்பட்டுக் வருகிறார். பெரும்பாலான இடங்களில் அனைத்துக் காட்சிகளிலும் தாய் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறாள். எனவேதான் அன்னையர் தினத்திற்கு இருக்கும் வரவேற்பு தந்தையர் தினத்திற்கு இருப்பதில்லை. 
தாய்க்கும் பிள்ளைக்குமான உறவில் காணப்படும் சுமூகம், தந்தை - பிள்ளை உறவில் காண்பது என்பது அரிய விஷயமே. அப்படி இருந்தும், தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கிணங்க அப்பாவின் வழி சென்று, அவரது துறையில் வெற்றிப் பெற்ற பல பிள்ளைகள் உள்ளனர். தந்தை - மகன் வெற்றிக் கூட்டணியில் மனம் கவர்ந்தவர்களில் சிலர் இதோ...

இசை

"அய்யயோ நெஞ்சு அலையுதடி" என்று தந்தையுடன் சேர்ந்து பாடல்கள் பாடினாலும், உச்சத்தில் நிற்கும் எஸ்.பி.பி.யின் ஸ்வரத்தை எட்டிப் பிடிக்க முடியாமல் நின்றுவிட்டார் அவரது மகன் சரண். 80களில் பாடிய பல பாடகர்களின் பிள்ளைகள் அதே துறையை தேர்ந்தெடுத்தாலும், தந்தைகள் விட்டுச்சென்ற இடத்தை இவர்களால் நிரப்ப இயலவில்லை. இந்தத் துறையில் ஓரளவு வெற்றி கண்ட ஜோடி என்று சொல்லவேண்டும் என்றால் இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா ஜோடியை சொல்லலாம். 80களில் மக்களின் இரவு நேரங்கள் இளையராஜாவின் இசையின் மடியில் கழியும். இந்த தலைமுறையினரின் இளைஞர்களிடையே யுவனிசத்தை ஏற்படுத்தித் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி தந்தைக்கு பெருமை சேர்ப்பவர் யுவன் ஷங்கர் ராஜா.

நடிப்பு

நடிப்புத் துறையில் தந்தை - மகன் வெற்றிக் கூட்டணி பட்டியல் மிகவும் நீளமானது. முதல் சான்றாக, தமிழில் சிவாஜி - பிரபுவையும், இந்தியில் அமிதாப் - அபிஷேக் இருவரையும் சொல்லலாம். சிவாஜி, அமிதாப் என்ற இரு ஜாம்பவான்களின் நடிப்பை ஈடு செய்ய முடியவில்லை என்றாலும், அவர்களின் பிள்ளைகள் தந்தையின் பெயரைக் காப்பாற்றும் வண்ணம் ஓரளவு ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ளனர். 

முத்துராமன் - கார்த்திக், டி.ராஜேந்தர் - சிம்பு, எஸ்.ஏ.சி - விஜய் போன்ற பல ஜோடிகள் நம் நினைவிற்கு வந்தாலும் நடிப்பு, கடமை, மற்றும் அணுகுமுறையில் தன் தந்தையைப் பின்பற்றி வெற்றி கண்ட நடிகர் என்ற வகையில் நம் மனதிற்கு முதலில் தோன்றும் நடிகர் இவர் தான். 

யாரென்று யூகித்தீர்களா? தமிழ் திரையுலகின் என்றும் மார்க்கண்டேய கூட்டணி சிவகுமார் - சூர்யா தான் அது. 

கவிதை

யோசிக்கவே வேண்டாம். சட்டென நினைவுக்கு வரும் தந்தை - மகன் கவிஞர்கள் வைரமுத்துவும் அவரது மகன் மதன் கார்க்கியும் தான். தமிழ் மொழியின் செழுமையை தன் கவிதைகள் மூலம் நமக்கு எடுத்துரைத்தவர் கவிஞர் வைரமுத்து. வெளிநாடுகளுக்குச் சென்று பொறியியல் படிப்பு படித்து வந்தாலும், தந்தை எவ்வழி, நானும் அவ்வழி என்று இங்கு வந்து லிரிக் இன்ஜினியரிங் கற்பித்த மதன் கார்க்கி தந்தை இடத்தை எட்டிப் பிடிக்கும் நோக்கில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

அரசியல் 

தமிழக அளவில் முதலில் நினைவுக்கு வரும் தந்தை மகன் அரசியல் ஜோடி என்றால் கருணாநிதி - ஸ்டாலின் ஜோடி தான். தேசிய  அளவில் யோசிக்கும்போது ராஜீவ் காந்தி - ராகுல் காந்தி நினைவுக்கு வருகிறார்கள். இந்த இரு தந்தைகளுடன் ஒப்பிடுபோது மகன்கள் 
அரசியல் சாணக்கியத்தனத்தில் ஹைஸ்கூல் கூட பாஸ் பண்ணவில்லை என்றே சொல்லவேண்டும். 

அப்படியென்றால் அரசியலில் யார் அந்த வெற்றி ஜோடி என்று யோசிக்கிறீர்களா? 

முன்னாள் பிரதமர் தேவகவுடா - தற்போதைய கர்நாடக முதல்வர் குமாரசாமி தான். அரசியலில் தந்தை உயரிய நிலைக்குச் செல்ல மகன் உறுதுணைபுரிந்தார். அதன்பின் மகனை மாநில முதல்வராக்கி அழகு பார்த்து வருகிறார். அந்த வகையில் தேவகவுடா - குமாரசாமி கூட்டணி கவனிக்கத்தக்கதே.

நடனம்

பிரபல நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக வந்த இவர் போட்டியாளர்களை "டே பை டே இம்ப்ரூவ்மென்ட்" என்று சொல்லியே உற்சாகப்படுத்துவார். தன் மகனையும் அப்படித்தான் உற்சாகப்படுத்தி இருப்பார் போல. இன்று நம்பர் 1 நடன கலைஞர் என்றால் நினைவில் வருவது பிரபுதேவாவின் பெயரே. திரைத்துறைக்குள் சாதனையாளராக ஒளிந்திருந்த தன் தந்தை டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த புகழ் மகன் பிரபுதேவாவையே சேரும்.

விளையாட்டு

1983 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி மற்றும் அரையிறுதியில் சிறந்த ஆட்டக்காரர் விருதை வாங்கியவர். இவரது தந்தை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் சத்தத்தை அடித்து பெயர் வாங்கியவர். லாலா - மொஹிந்தர் அமர்நாத் தந்தை மகன் ஜோடி கிரிக்கெட் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த ஜோடி என்றே சொல்ல வேண்டும். அதேபோல் கிரிக்கெட் உலகில் புதிதாக கால் பதித்து இருக்கும் அர்ஜுன் டெண்டுல்கர் அழகாக விளையாடி தந்தை சச்சினுக்கு புகழ் சேர்க்கிறாரா என்று பார்ப்போம்.

மற்றவர்கள் வெற்றி ஜோடிகளாக திகழ்வது ஒரு பக்கம் இருக்கட்டும். தந்தையர் தினமான இன்று நாம் நம் தந்தைக்கு வாழ்த்து சொல்வதை தவிர வேறு என்ன புகழ் சேர்த்து நம்மை எவ்வாறு வெற்றி ஜோடிகளாக காண்பிக்க போகிறோம் என்று யோசிப்போம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.