கடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு!

  கார்தும்பி   | Last Modified : 20 Jun, 2018 04:33 pm
senseless-humor-jokes-in-our-society

விக்கி ஒரு கதையை சொல்லி முடிப்பதற்குள், ஒன்பது முறையாவது அவன் முகம் சுருங்கும்.

"ஃபிரெண்டு கல்யாணத்துல எல்லாரும் சேர்ந்து கேக் வெட்டணும்னு ஒரு கேக் வாங்கி வெச்சிருக்கானுங்க. அது எப்படி இருந்துச்சு தெரியுமா? ஒரு பொண்ணும் பையனும் பெட்ல ஒரு போர்வைக்கு அடில படுத்திருக்க மாதிரி இருக்கு. இது ஃப்ரெண்ட்ஸ் மட்டும் இருக்கப்போ வெட்டுனா ஒகே. அவங்க அப்பா அம்மா எல்லாரும் இருக்காங்க. அவங்க முன்னாடி இப்படி ஒரு கேக்க வெட்டுனா அடுத்து நம்மளப் பத்தி என்ன நெனைப்பாங்க? இத நான் கேட்டதுக்கு அந்த நாயி 'டேய்..என்னடா.. நீ ரொம்ப நல்லவனா'னு ஒரு மாதிரி நக்கலா கேக்குறான். அப்படியே மண்டைக்கு ஏறிடுச்சு"

" ஏன்.. நீ நெஜமாவே நல்லவனா?"

"ஆமா.. நான் நல்லவன்தான். இதை எல்லாம் கேட்டுட்டு சும்மா இருக்க முடியாது."

"ஃப்ரியா வுடு.. ஃப்ரெண்ட்ஸ்-னாலே இன்சல்ட் பண்ணுவாங்க தானே?"

"இல்லையே. என்னை யார் இன்சல்ட் பண்ணாலும் எனக்கு டென்ஷன்தான் ஆகும்." 

என்னை இன்சல்ட் செய்பவர்களிடமிருந்தும் நான் விலகியே இருக்கிறேன். 'மக்கு புள்ள' என கொஞ்சுபவர்களை சொல்லவில்லை. நட்பாக தொடங்கி, வேடிக்கையாக கிண்டல் செய்வதை கடந்து ஒருகட்டத்தில் டைம் பாஸுக்கு என்னை யாராவது பலிகடா ஆக்கினால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். காரணம், அதொரு கெட்ட ஹ்யூமர் சென்ஸ்; அதை பாராட்ட வேண்டிய அவசியமில்லை. முடிந்தால், கண்டிக்கலாம்.

ஆனால், பக்கத்து வீடுகளிலும், அலுவலகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் இருக்கும் மூத்தவர்கள் ஏதாவது தட்டையான காமெடிக்கு நம்மை பலியாக்கும் போது நம்மால் எதிர்த்துக் கூட பேச முடியாது. 'வெயில் அடிக்குது நான் உள்ள போறேன்' என்றதற்கு பதிலாக பக்கத்து வீட்டு மல்லிக்கா ஆன்ட்டி என்னை பார்த்து 'ஓ.. ஃபோன் பேசறப்போ மட்டும் வெயில் அடிக்காதோ?' என்றார். மிடில் விரல் காண்பித்தால் அவருக்கு புரியுமா என்று தெரியவில்லை. 

அம்மா செய்யும் அபத்தங்களை எல்லாம் சொல்லி மாளாது. மும்பையில் படித்துக் கொண்டிருந்தபோது ஏதோ ஒருநாள் மனம் வெம்பி, 'அம்மா என் பெட்ஷீட் எல்லாம் ரொம்ப அழுக்கா இருக்கும்மா' என்று நான் அழுததை இன்றும் மிமிக்ரி செய்துகொண்டே சுற்றிக் கொண்டிருக்கிறார். பொழுது போகாத முண்டங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டால், தனியே எங்காவது இருந்து புறம் பேசிக் கொண்டே, சீரியஸ் வேலையாக யாராவது கடந்தால் கூட, 'என்ன சார் ரொம்ப பிஸி போல' என்று சொல்லி 'களுக்' என அவர்களே சிரித்துக் கொள்வார்கள் இல்லையா? மல்லிகாவும், என் அம்மாவும் அந்த வகையினர்தான். சொல்லப் போனால், எங்கள் தெருவில் உட்கார்ந்து இந்த வேலையை பார்ப்பதே இவர்கள் இரண்டு பேரும் தான். 

இவ்வுலக வாழ்விற்காக செய்யும் காம்ப்ரமைஸ்கள் பலவற்றில் ஒன்றாக, நாம் இந்த அபத்தங்களை 'கண்டுகொள்ளாமல்' விட வேண்டும். கண்டுகொண்டு கேள்வி கேட்டால், நாம் முசுடு. அல்லது, 'சென்சிட்டிவ்'. 'ஏன் இவ்ளோ சென்சிட்டிவ்வா இருக்கிற?' 'இவ்ளோ சென்சிட்டிவ்வா இருக்காத' என்றெல்லாம் யாராவது உங்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள் என்றால் உங்களுக்கு ஒரு ஹை-ஃபைவ். நீங்கள் மிக எளிதாக இந்த 'பேட் ஹ்யூமர்' ஆட்களை எல்லாம் அச்சுறுத்துலுக்கு ஆளாக்குகிறீர்கள் என்று அர்த்தம். அதில் ஒரு தவறும் இல்லை. 

'காமெடி நைட்ஸ் வித் கபில் ஷர்மா' என்றொரு நிகழ்ச்சி இருக்கிறது. அந்த நிகழ்ச்சியின் மையமே வருகின்ற பிரபல சினிமா நட்சத்திரங்களை காலி பண்ணி, அதில் ஒரு கிலுகிலுப்பு காண்பதுதான். அப்படி ஒருநாள் 'பார்ச்டு' பட நாயகி தனிஷ்தா சாட்டர்ஜி வந்திருந்தார். தனிஷ்தாவின் தோலின் நிறத்தை பகடி பண்ண 'அப்போ தனிஷ்தா உங்களுக்கு நாவல் பழங்கள் ரொம்ப பிடிக்கும் இல்லையா? எவ்ளோ நாவல் பழம் சாப்பிட்டுருப்பீங்க? அதனாலதான் உங்க முகம் கருப்பா இருக்கு' என்று கபில் ஷர்மா கேட்டார். கபிலை கண்டித்துவிட்டு செட்டில் இருந்து வெளியேறி விட்டார் தனிஷ்தா. 

பிறகு பேட்டிகள் கொடுத்தபோது, இந்தியாவின் தோலின் நிறம் எதை எல்லாம் தீர்மானிக்கிறது, இங்கு நாம் எவ்வளவு கவனமாக இயங்க வேண்டும், இப்படி ஒரு தவறான அனுமானம் மக்களின் தன்னம்பிக்கையை எப்படி சிதைக்கும் என்று விரிவாக பேசினார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுபவம் 'மூச்சடைப்பதாக' இருந்தது என குறிப்பிடவும் மறக்கவில்லை. 

'மூச்சடைக்கும்' உணர்வு தோன்றும் போதெல்லாம், நாம் ஒரு மாதிரி அசட்டுத்தனமாக சிரித்து, அந்தச் சூழலை இலகுவாக்க நினைப்போம். உண்மையில், ஒரு மனநடுக்கம் தோன்றியிருந்தாலும், ஒரு 'நல்ல' பிள்ளையாக நடந்துகொள்ள அமைதியாவோம். ஆனால், இந்த மூச்சடைக்கும் உணர்வு தோன்றும் போதெல்லாம் துணிச்சலாக நீங்கள் எதிர்த்து பேசலாம். 'இதுல எல்லாம் யாராவது ஜோக் பண்ணுவாங்களா? உனக்கு அறிவில்லையா?' என்று கத்தலாம். 

இந்தியா பெண்களுக்கான நாடு கிடையாது. இங்கே பாலினப் பாகுபாடு, ரேப் கலாச்சாரம், தோலின் நிறம் என வன்முறையாய் விடியும் பல காரணிகள் ஜோக்காக தொடங்குபவையாகவே இருக்கும். இதை அடையாளம் காண்பது அவசியம். வன்மத்தையும் வக்கிரத்தையும் வெளிப்படுத்தும் சமகால இந்திய பாலியல் ஜோக்குகள் எல்லாம் உண்மையில் பிரதிபலிப்பது இந்தியாவின் ஆணாதிக்க மனோபாவத்தை மட்டுமே. ('மெக்சிகன் சலவைக்காரி' ஜோக்கோடு ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும்). இதை வெறும் மோசமான ஹ்யூமர் சென்ஸ் என்று மட்டுமே சொல்லிவிட முடியாது - இது மனதிற்குள் ஆழப்படிந்திருக்கும் அழுக்கு. 

ஆக, அம்மாவோ, பக்கத்து வீட்டு ஆன்ட்டியோ, முட்டாள் புரொஃபசர்களோ, பாய் ஃப்ரெண்டுகளோ, காதலர்களோ - யார் கேவலமாக காமெடி செய்தாலும் 'நாட் ஃபன்னி', 'சிரிப்பே வரல' என்று முன்மொழிந்து, தாராளமாக ஒரு லெக்சர் எடுப்போம். 

ச்ச்சியர்ஸ்ஸ்ஸ்!

- கார்தும்பி, பத்தியாளர் - தொடர்புக்கு snehabelcin@gmail.com

| ஓவியம்: சௌந்தர்யா ரவி

முந்தைய அத்தியாயம்: கடைசி பெஞ்சுக்காரி - 15 | நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close