கடைசி பெஞ்சுக்காரி - 17 | காதல் மறத்தல் எனும் பெருங்குற்றம்!

  கார்தும்பி   | Last Modified : 28 Jun, 2018 02:18 pm
how-to-handle-a-breakup

கோவையிலிருந்து சேலத்திற்கு பயணமாகிக் கொண்டிருந்தபோது, பஸ்ஸில் இருந்த கண்டக்டர் பேசிப் பேசி நெருக்கமாகிவிட்டார். அவர் சொன்ன கதைகள் பல ஞாபகம் இல்லை. ஆனால், அவர் காதலித்த கதை மட்டும் நினைவில் இருந்து மாறாமல் இருக்கிறது. 
 
"அவ வீட்ல பேச டைம் கேட்டுட்டே இருந்தா. நான் வெயிட் பண்ணிட்டே இருந்தேன். அப்போ எனக்கு வீட்ல பொண்ணு பார்த்துட்டாங்க. நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, எங்க வீட்டு முன்னாடி தான் அவ பாட்டி வீடு இருக்குமா, என் கல்யாணத்தன்னைக்கு, அந்த வீட்ட தொறந்து வெச்சுட்டு நடுவீட்ல உக்காந்து அழுதுட்டு இருந்தா."

"அப்புறம் என்ன பண்ணீங்க?"

"நான் என்ன பண்றது? நான் ஒண்ணும் பண்ணல. நான் பண்ணது தப்பா?"

கோபம் தான் வந்தது. நிச்சயமாக அவர் செய்தது தப்பு என்று தான் தோன்றியது. உண்மையாகவே காதலித்திருந்தால், அவளோடு தான் வாழ நினைத்திருக்க வேண்டும் என்று சொன்னபோது, எதுவும் சொல்லி என்னை காம்ப்ரமைஸ் செய்யவும் அவர் முயற்சிக்கவில்லை. 

மொத்தமாய் மனதும் மூளையும் பிளாங்காக இருந்தபோது, கல்யாண மேளச் சத்தத்துக்கு நடுவே உட்கார்ந்து அழுது கொண்டிருக்கும் ஒரு பெண்ணும், பஸ் ஓட்டிக்கொண்டே என்னிடம் கதை சொன்ன கண்டக்டரும் ஞாபகம் வந்தார்கள்.
 
காதல் ஒருத்தரோடு மட்டுமே தோன்றும், காதலித்தவரையே கல்யாணம் செய்துகொள்ள வேண்டும், காதலரை தவிர வேறு ஒரு நபரை நினைத்து ஃபாண்டசைஸ் செய்வது எல்லாம் குற்றங்கள் என டீஃபால்ட்டாகவே நினைத்துக் கொண்டிருந்தோம் இல்லையா? 

அடுத்தகட்ட கற்றலாக, வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம் என்பதுபோல காதல் என்பது அந்தத்த நேரத்து உறவு என நம்பிக் கொண்டிருப்போம் - அந்தக் கண்டக்டரை போல. 

மேலும் ஒரு முறை காதல் கொள்வோம். இப்படி ஒரு சைக்கிள் மாதிரி. ஆனாலும், எக்ஸ்-லவ்வர் நம்மை நினைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறோம்? 

சில நேரங்களில் கோபமாகவும், சில நேரங்களில் பரிதாபமாகவும் பொங்கி எழுந்து சில நினைவுகளை கிளறிவிட்டால்தான் நிம்மதி என ஏன் எதையாவது செய்கிறோம்? 
 
'லஸ்ட் ஸ்டோரிஸி'ல் வரும் ராதிகா ஆப்தே தான் நாம் எல்லாம். என்ன... என்னை விட்டு, என் நினைவுகளை எல்லாம் விட்டுவிட்டு உன்னால் நகர்ந்துவிட முடியுமா எனும் ஆதங்கமும், வலியும்தான் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் காதலித்த நபர்களுக்கு எல்லாம் 'ஐ மிஸ் யூ' அனுப்பச் செய்கிறது. 

கொஞ்சமாவது 'மூவ் ஆன்' ஆகி ஒரு சமநிலையை அடைந்திருக்கும் குழந்தைகளை எல்லாம் இந்த 'ஐ மிஸ் யூ' தடுமாறச் செய்யும். பெரும்பாலான இந்தியர்கள் போல நீங்களும் மென்டலாக இருக்கும் பட்சத்தில், 'ஐ மிஸ் யூ'வை பார்த்ததும், காரணமே இல்லாமல் கண்ணீர் துளிர்க்கும். என்ன காரணத்தினால் அந்த உறவு முறிந்தது என்பதை எல்லாம் யோசிக்காமல் மறுபடியும் ஒரு ரீ-யூனியன்.

'ப்ளூ இஸ் தி வார்மஸ்ட் கலர்' (Blue is the warmest colour) படத்தில் அடெலும், லியாவும் ஒரு ரெஸ்டாரண்டில் சந்தித்துக் கொள்ளும் காட்சி வரும். பயங்கரமாய் எமோஷனல் ஆகி இரண்டு பேரும் கதறி அழுதுக் கொண்டிருக்கும் போது ' நீ என்னை காதலிக்கவில்லையா?' என்று அடெல் கேட்க ' நான் உன்னை காதலிக்கவில்லை' என பதில் வரும். 'நீ என்னைக் காதலித்தே ஆக வேண்டும்' என அடெல் அங்கு வற்புறுத்த மாட்டாள்.

அதாகப்பட்டது, 'ஏண்டி இப்போ உனக்கு என் மேல லவ் வரல?' என வன்முறையாய் எதையாவது செய்வது மட்டுமே தார்மிக ரீதியில் தவறு கிடையாது. காதல் தீர்ந்து, நீர்த்து போய்விட்டது என்பதை அறிந்த பிறகு அங்கே மீண்டும் 'ஐ மிஸ் யூ' என்று தூண்டில் போடுவது, மெலிதான வன்மம்தான். முன்னாள் காதலனுக்கு அல்லது காதலிக்கு போதுமான 'ஸ்பேஸ்' கூட கொடுக்க முடியாது என்றால், நாமெல்லாம் என்ன காதலிக்கிறோம்? நம்மோடு காதலில் இருப்பது எத்தனை நச்சு பிடித்த காரியமாக இருக்கும்?

ஆக, பாலிகாமியை (polygamy) மனமார ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதில்லை வாதம். நிச்சயமாய் காதல் மாறும், ஒரு காலத்தில் குழந்தை போல கொஞ்சிக் கொண்டது எல்லாம் அபத்தமாக தோன்றும், எல்லாமே கசப்பானவையாக நினைவிருக்கும் என்பதையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும். 

காதல் மாறுவதையும், மறக்கப்படுவதையும் ஏற்றுக் கொண்டு அமைதியாக வலியை அனுபவிப்போம். வலியின் சிறப்பம்சத்தை, அதை அமைதியாக அனுபவிக்கும்போது தான் உணர முடியும். இல்லை, புலம்ப ஆள் தேடினாலும் சரி. மனிதர்கள் பெரும்பாலும் முட்டாள்களாகத் தான் இருக்கின்றார்கள் என்றாலும், நம்முடைய இண்டலிஜன்ஸ் அளவிற்கேற்ப நம் புலம்பலை கேட்க யாராவது கிடைப்பார்கள். 

(ஒரு ஸ்லோ) ச்சியர்ஸ்!

- கார்தும்பி, பத்தியாளர் - தொடர்புக்கு snehabelcin@gmail.com

| ஓவியம்: சௌந்தர்யா ரவி | 

முந்தைய அத்தியாயம் > கடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close