கடைசி பெஞ்சுக்காரி - 18 | காதலைக் 'கடந்த' வெறுமையே போதைதான்!

  கார்தும்பி   | Last Modified : 25 Jul, 2018 06:12 pm
how-to-feel-better-after-a-breakup

கட்டுப்படுத்தவே முடியாத எண்ண ஓட்டங்கள், கண்களில் எரிச்சல், தலைவலி, பச்சாதாபம் என கலவையான உணர்வுகளோடு ஒரு நண்பருடன் அவள் பேசிக் கொண்டிருந்தாள். ராத்திரி பனிரெண்டு மணிக்கு மேல் தான் பேசத் தொடங்கினாள். பிரச்னையை பற்றி பேசவில்லை என்றாலும், எது பிரச்னையாக இருக்கலாம் என்பதை ஒட்டி பேச்சு மாறியது. மீண்டும் மீண்டும் ஒட்டி உறவாடி, வேதனையில் முடியும் ஓர் உறவுச் சூழலை பற்றி பேசினார். 

"இந்த ரிலேஷன்சிப்னால ஒரு போதை வரும். கூடவே, வலியும் வரும். இது உனக்கு மொத தடவ புரியலேன்னாலும், திரும்ப திரும்ப அதுவே நடக்குறப்போ புரிஞ்சிரும். இது புரிஞ்ச பிறகு, அந்த போதைக்காக வலிய அனுபவிச்சுக்கலாம்னு நெனப்ப. எல்லாரும் நெனைப்போம். ஆனா, உண்மையில, அந்த போதைக்காக அவ்ளோ வலிய அனுபவிக்கணும்னு அவசியமே இல்லை. அதை விட அதிக போதையை தர்ற ஒரு ரிலேஷன்சிப் இனி உனக்கு கிடைக்கும். அப்படி ஒண்ணு கிடைக்காதுன்னு நீ நினைக்குறதால தான் திரும்ப திரும்ப இதுலயே இருக்கணும்னு நினைக்குற - ஹர்ட் ஆகுற" என்று அவளிடம் அந்த நண்பர் நிதானமாகக் கூறினார்.

இதை இவ்வளவு நுணுக்கங்களோடு யாருமே நமக்கு சொல்வது இல்லை. 'வேணாம்டா.. விட்டுடு த்ரிஷா இல்லேனா திவ்யா' என்பது போல மேம்போக்காக, 'உங்க மனசுக்கு பிடிச்ச மாதிரி, உங்க அம்மா, அப்பாவ சந்தோஷப்படுத்துற மாதிரி, நல்லா படிச்ச, நல்ல குடும்ப பாங்கான கணவர் உங்களுக்கு அமைவார்' என்பது போல அபத்தமாகத் தான் யாராவது சொல்லிக் கொண்டு திரிவார்கள். 

நாமும் கூட இப்படியாகத் தான் ஆறுதல் சொல்வோம். 'ஃப்ரீயா வுடு' என்பதை தாண்டி வேறு எதாவது சொல்லிவிட முடியுமா? அடிபட்டு அடிபட்டு இலகுவாய் இருக்கும் ஒரு 'டேமேஜ்டு' நபரால் மட்டும்தான் இந்த விஷயத்தை ஒரு வடிவத்திற்கு கொண்டு வந்து, வார்த்தைகளாக சொல்லிவிட முடியும். மற்றபடி, வேறு யாராலும் சொல்லவும் முடியாது - நம்மால் அதை கேட்டுக் கொள்ளவும் முடியாது. 

பல மணி நேரங்கள் ஃபோனில் பேசிக் கொண்டே இருக்க முடியும், கூச்சமே இல்லாமல் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசிக் கொண்டே இருக்க முடியும், வேறு யாரோடும் இல்லாத அளவு பிரமாதமாக வேவ்லெங்க்த் மேட்ச் ஆகும், பெரும்பாலான ரசனைகள் ஒத்துப் போகும், ரசனைகளில் இருக்கும் வேற்றுமையை கொண்டாடவும் முடியும், இருவரின் பைத்தியத்தையும், பலவீனங்களையும், அவமானங்களையும் விரிவாக பேச முடியும் - இப்படியாக ஓர் உறவு தொடங்கும். பெரிய காரணங்கள் எதுவும் இல்லாமல், அது முறியவும் செய்யும்.

காதல் முறிந்துவிட்டது. இனி, என்ன மாதிரியான முயற்சிகள் செய்தாலும் முன்பிருந்ததை போல மேஜிக் உண்டாகாது என்பது இரண்டு பேருக்குமே தெரிந்திருக்கும். ஆனாலும், பெரும்பாலான திருமணங்களை போலவே, அந்த முறிவை சரி செய்ய முயற்சி செய்வோம். 'உங்க ரெண்டு பேரை பார்க்கும் போதே தெரிஞ்சுது, சீக்கிரம் பிரேக் - அப் ஆகும்னு' என்று சொல்பவர்களை எல்லாம் அவமானப்படுத்தும் நோக்கில், உலகிற்கே உப்பாக ஒளியாக காதல் செய்ய வேண்டும் என சபதம் எடுப்போம். புண்ணாய் இருக்கும் இடத்தை நோண்டி நோண்டி ரத்தம் வர வைக்கும் வேலை இது. 

காலத்தை மட்டுமே அளவுகோலாக வைத்து எது நல்ல உறவு என்பதை நிர்ணயித்துவிட முடியுமா? விடுதலையும் காதலும் நிறைந்து சில நாட்களுக்கு மட்டுமே நீளும் ஓர் உறவு - ஒரு கூந்தல் புரிதலும் இல்லாமல் 30 வருடங்களுக்கு நீளும் ஓர் உறவு; இப்படி பார்க்கும் போது எளிதாக புரிகிறது இல்லையா? கூடவே, இரண்டு பேருக்கு இடையில் இருக்கும் ஓர் உறவை வெளியாள் யாராலுமே கணித்து சொல்லிவிட முடியாது. இதை எதுவும் ஏற்காத மனம் தான் திரும்பத் திரும்ப வலியை நோக்கியே செல்கிறது. 

'let it go' என்பதற்கும் 'let it be' என்பதற்குமான வித்தியாசம் புரிகிறதா? குதூகலம், உற்சாகம், காமம், புத்துணர்வு என உடலையும் மனதையும் நிரப்பிய ஓர் உறவு இல்லாத நிலையில் வரும் வெறுமையை கடந்து வருவதுதான் நோக்கம். ஆனால், வெறுமையை விரட்டியடிக்க முயற்சி செய்யாமல், வெறுமையோடே இருக்கப் பழக வேண்டும் என நினைக்கிறேன். கிம்-கி-டுக் படங்களில் வருவது போல.

'த்ரீ அயர்ன்' படத்தில் வீடு வீடாக சென்று திருடி, அங்கேயே சமைத்து சாப்பிட்டு, துணி துவைத்து, அந்த வீட்டின் உரிமையாளர்களின் புகைப்படங்களோடு செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு ரகளையான ஆள், ஒருகட்டத்தில் ஜெயிலுக்கு அனுப்பப்படுவான். ஜெயிலில் இருக்கும்போது, யாராலுமே எட்டிப் பிடிக்க முடியாதபடி, மனிதர்களின் நிழல் போல மாற வேண்டும் எனத் தோன்றும். தொடக்கத்தில் சில முயற்சிகளின் போது, வார்டன் பின்னால் சென்று மறைவது போன்ற பாவனை செய்ய, அவர் அடி பின்னிவிடுவார். என்னடா இது? இவனுக்கு என்ன கிறுக்கா? யாராவது இப்படி நிழலாகவே மாறிவிட முடியுமா என நினைக்கும் போது அவன் மாய நிழலாக மாறியிருப்பான். 

'தி போ' படத்தில் வரும் கிழவனின் முகமும், இளம்பெண்ணின் முகமும் அமைதியாகவே இருந்ததாக தோன்றுகிறது. கிம்-கி-டுக் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் வந்த பிறகு அவர் மீதிருந்த மரியாதை அப்படியே சரிந்தது என்பது உண்மை. ஆனாலும், அவருடைய படங்களில் பெரும்பாலானவற்றில் மிதந்து கொண்டே இருக்கும் அமைதிக்கு வேண்டி மட்டும் இன்னும் ஒரு முறை அவர் படைப்புகளை பார்க்க வேண்டும் எனத் தோன்றுவதும் உண்மை. 

'சம்மர், ஸ்ப்ரிங், விண்டர், ஃபால் ...அண்ட் ஸ்ப்ரிங்' படத்தில் நதிக்கு நடுவே வாழும் ஒரு துறவியை போல - வெறுமையை அப்படியே மன-அமைதியாக கடத்திவிட முடிந்தால் போதும் இல்லையா?

ஹாலிவுட் திரைப்படங்களில் எல்லாம் வருவது போல ஒரு பிரேக்-அப்பிற்கு பிறகு நிறைய குடித்து, பார்ட்டி செய்வது எல்லாம் வொர்க்-அவுட் ஆகாத காரியங்கள். அந்த போதை தற்காலிகமானது; வெறுமையை கொஞ்ச நேரத்திற்கு தள்ளிப் போடுவது. ஆனால், ஆசிய சினிமாக்கள் வெறுமையை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பிரச்சாரம் செய்பவை. அதுதான் ஏற்றது என்று நான் நினைக்கிறேன்.

எதுவுமே போரடிக்காத அளவு தனிமையை ரசிக்கக் கூடிய பக்குவம் வந்த பிறகு மட்டுமே மீண்டும் காதலில் விழ முடியும் என நினைக்கிறேன். உறவு முறிவு என்றில்லை, உறவில் ஒரு பிரேக் எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்களும் கூட புதிதாக காதலிக்கத் தொடங்கலாம்.

- கார்தும்பி, பத்தியாளர் - தொடர்புக்கு snehabelcin@gmail.com

| ஓவியம்: சௌந்தர்யா ரவி | 

முந்தைய அத்தியாயம் > கடைசி பெஞ்சுக்காரி - 17 | காதல் மறத்தல் எனும் பெருங்குற்றம்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close