ட்ரெண்டாகும் 3டி மினியேச்சர் சிலை!

  Shalini Chandra Sekar   | Last Modified : 27 Jul, 2018 03:49 am

article-on-3d-miniature

சில இடங்கள், பொருட்கள், பரிசுகள், தருணங்கள் ஸ்வாரஸ்யமானவை. எல்லா இடங்களும் எல்லா பொருட்களும் நமக்கு ஸ்பெஷல் என்று சொல்ல முடியாது. எது ஒன்று அளவுக் கடந்த நினைவுகளை நமக்கு பரிசாகத் தருகிறதோ, அதை மட்டும் தான் ஸ்பெஷலாக உணர முடியும். 

திருமணம், பிறந்தநாள், காதலை வெளிப்படுத்த என வாழ்வின் முக்கியத் தருணங்கள் பரிசுகள் இல்லாமல் இருக்காது. ஆனால் இந்த சமயத்தில் என்ன பரிசுக் கொடுப்பது என்பது தான் பெரும்பாலானோரின் கேள்வியாக இருக்கும். வழக்கமான, டிரெஸ், வாட்ச், பர்ஸ், ஃபோட்டோ ஃப்ரேமை தவிர்த்து, புதிதாக ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என மண்டையைப் பிய்த்துக் கொள்பவர்களுக்கு அட்டகாசமான ஒரு ஐடியாவை வைத்திருக்கிறார் ஜெகதீஷ் கோட்டீஸ்வரன். யாரிவர்? '3டி செல்ஃபி' என்ற நிறுவனத்தின் உரிமையாளர். 

நா பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை தான். படிச்சது இன்ஜினியரிங், காலேஜ் படிக்கும் போதே, பிஸினஸ் பண்ணனுன்ங்கறது தான் எண்ணமா இருந்துச்சி. அப்போவே பார்ட் டைமா சின்ன சின்ன பிஸினஸ் பண்ணிட்டு இருந்தேன். படிச்சு முடிச்சிட்டு, விப்ரோல வேலை செஞ்சேன். நல்ல வேலை, நல்ல சம்பளம்ன்னு என் பிஸினஸ் தாகத்தை நீர்த்துப் போகச் செய்ய எனக்கு மனசு வரல. ஒரு கட்டத்துக்கு அப்புறம், எனக்குப் பிடிச்ச வழில பயணிக்க ஆரம்பிச்சேன். அப்படி உருவாகுனது தான் 3டி செல்ஃபி மினியேச்சர் நிறுவனம். 

மற்ற கிஃப்ட் ஷாப்புகளுக்கும் உங்க ஷாப்புக்கும் என்ன வித்தியாசம்? 
பெரும்பாலான மத்த கடைகள்ல யாரோ எங்கேயோ செஞ்ச பரிசுப் பொருட்களை வாங்கி வாடிக்கையாளர்களுக்கு விப்பாங்க. ஆனா நாங்க, உங்களுக்குப் பிடிச்ச பரிசை, கிரியேட்டிவ்வா செஞ்சு தர்றோம். இன்னும் சொல்லணும்ன்னா, உங்களுக்குப் பிடிச்சவங்களுக்கு உங்களையே நீங்க பரிசா குடுக்கலாம்.

அதெப்படி? 
எங்க 3டி செல்ஃபி மினியேச்சர்ல மனித உருவங்களை சின்ன மினியேச்சர் சிலையா செஞ்சு தருவோம். முக்கியமா சர்ப்ரைஸ் கிஃப்ட்டுக்கு இது டக்கரா இருக்கும். 

எந்தெந்த நிகழ்வுகளில் இது பயன்படும்? 
பிறந்த நாள், திருமண நாள் ரெண்டுக்கும் யார் இந்த விழாவைக் கொண்டாடுறாங்களோ அவங்க உருவத்தை சிலையா செஞ்சு நீங்க அவங்களுக்கு பரிசளிக்கலாம். அதே மாதிரி விழாவைக் கொண்டாடுறவங்க, அவங்களோட நினைவுப் பரிசா இந்த சிலைகளை ரிட்டர்ன் கிஃப்ட் குடுக்கவும் ஆர்டர் பண்ணுவாங்க. வழக்கம் போல தட்டு, டிஃபன் பாக்ஸ்லாம் ரிட்டர்ன் கிஃப்டா குடுத்து போரடிச்சுப் போனவங்களுக்கு இந்த மினியேச்சர் சிலை புது அனுபவமா இருக்கும். அதாவது உங்க விழாவுக்கு வந்துட்டு போனவங்க எல்லார் வீட்லயும் நீங்க இருப்பீங்க. எல்லாத்துலயும் புதுமையை விரும்புறவங்க நிச்சயம் இதை முயற்சி செய்யலாம். 

மறக்க முடியாத அனுபவம்? 
வழக்கமா சாக்லெட், ரோஸ், கிரீட்டிங் கார்ட், டெட்டி பியர், வாட்ச், ஷர்ட் இதுல எதாச்சும் குடுத்து தான் ப்ரபோஸ் பண்ணுவாங்க. ஆனா மினியேச்சார் மூலமா உங்க காதலன்/காதலியை இன்னும் அழகா சர்ப்ரைஸ் பண்ணலாம். 

எங்களுக்கு ஒரு பொண்ணுகிட்ட இருந்து ஆர்டர் வந்தது. அவங்களோட ஆண் நண்பர் ஒரு பைக் பிரியர். அவருக்குப் புடிச்ச 8 பைக்கை மினியேச்சரா பண்ணி தர சொன்னாங்க. எங்களுக்கு ஒரே ஆச்சர்யமா இருந்தது. பரிசுக்காக 10, 20 ஆயிரம் செலவு பண்ணலாம். ஆனா அந்த பொண்ணு இதுக்காக 1 லட்சத்துக்கும் மேல செலவு பண்ணுனாங்க. இனி எவ்ளோ ஆர்டர் வந்தாலும் இது என்னால மறக்கவே முடியாது. 

அப்புறம் செக்கரெட்ரியேட்ல இருக்குற ஒரு வி.ஐ.பி ஜெயலலிதாவை மினியேச்சரா பண்ணி தர சொன்னாரு. பண்ணிக் குடுத்ததும் ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிட்டாரு. 

இதோட ப்ராசஸ் என்னென்ன? 
முதல்ல ஹை ரெசல்யூஷன்ல உங்கள ஃபோட்டோ எடுத்துக்குவோம். அப்புறம் அதை 3டி-யா மாத்துவோம். இதுக்கு நிறைய டைம் எடுக்கும். எனக்குக் கீழ 6 பேர் வேலை செய்யறாங்க. ஃபோட்டோவுல நீங்க எப்படி இருக்கீங்களோ அதே மாதிரி கொஞ்சம் கூட மிஸ்ஸாகாம மினியேச்சர்லயும் கொண்டு வர்றது பெரிய சவால். உங்களுடைய ஃபீச்சர்ஸும் அதே மாதிரி இருக்கணும். சில பேருக்கு கண் அழகா இருக்கும், சில பேருக்கு மூக்கு கூர்மையா இருக்கும், ஸோ சிலையும் அதே மாதிரி வரணும்ன்னு நாங்க முனைப்போட வேலை செய்வோம். அதிக காசு செலவு பண்ணி, இந்த மினியேச்சர் பண்ணும் போது, அது உங்கள மாதிரியே இருக்குன்னு நீங்க ஃபீல் பண்றது தான் எங்களோட வெற்றி. 7 இஞ்ச் கொண்ட இந்த சிலைய செஞ்சு முடிக்க 20 நாளாகும். 

சராசரியா எவ்வளவு செலவாகும்?  
சாதாரணமா ஒரு மினியேச்சருக்கு 4500 ரூபாய் செலவாகும். சிலைல இன்னும் எதாச்சும் எக்ஸ்ட்ரா சேர்க்கனும்ன்னா அதுக்கேத்த மாதிரி ரேட் மாறும். 20 நாளுக்கு முன்னாடி அவசரமா டெலிவரியாகனணும்ன்னா இன்னும் கொஞ்சம் விலை அதிகமாகும். ஏன்னா இதுல அவ்ளோ வேலை இருக்கு. இதோட கட்டிங் மிஷினோட விலை 70 லட்சம். பொதுவா இன்னும் இந்தியாவுல அந்தளவு புழக்கத்துக்கு இந்த 3டி மினியேச்சர்ஸ் வரல. சென்னைல நான் மட்டும் தான் இதப் பண்றேன். வெளிநாட்டு கிளைண்ட்ஸும் இருக்காங்க. அதிகமா எல்லாரும் பயன்படுத்துனா, மிஷினோட விலை குறையும், அப்போ மினியேச்சரும் குறைஞ்ச விலைக்கு செய்ய முடியும். 
 
எதிர்காலத் திட்டம்? 
குடும்பமா படம் எடுத்து வீட்ல ஃப்ரேம் போட்டு வச்சிக்கிறது ஓல்டு ஸ்டைல். குடும்பமா மினியேச்சர் செஞ்சு வீட்ல வைக்கிறது தான் டிரெண்ட். ஸோ, இந்த அனுபவத்தை எல்லாருக்கும் கொண்டு சேர்க்கணும். ஃப்ரான்சைஸ் குடுத்து, இந்த 3டி மினியேச்சர இன்னும் விரிவு படுத்தனும். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.