'டொனால்டு ட்ரம்ப்' பெயர் வைத்ததால் அல்லல்படும் தந்தை!

  PADMA PRIYA   | Last Modified : 21 Mar, 2018 07:04 pm

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தனது குழந்தைக்கு டொனால்டு ட்ரம்பின் பெயரை வைத்ததால் படாத பாடுபட்டு வருகிறார். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் சையத் அசாதுல்லா போயா. ஆசிரியராக பணியாற்றும் இவர் தன் மகனுக்கு அதிர்ஷ்டம் கொட்டும் என்ற நம்பிக்கையில் 'டொனால்ட் ட்ரம்ப்' என்று பெயர் வைத்தார். ஆனால் அவர் பெரும் சங்கடத்தை சந்தித்து வருகிறார்.

2016-ம் ஆண்டு சையதின் மனைவி ஜமிலாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. கோடீஸ்வரரான ட்ரம்ப் அப்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் பரபரப்பாக இருந்தார். 'ட்ரம்ப் எப்படிப் பணக்காரரானார்' என்ற மொழிபெயர்ப்பு நூலை படித்து முடித்தார் சையத். ட்ரம்பின் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்கை என எதுவும் தெரியாத சையத் ட்ரம்ப் பெயர் வைக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தார். குழந்தை பிறந்தவுடன் இன்ப அதிர்ச்சியடைந்தார். ட்ரம்ப்பை போலவே குழந்தையின் தலை முடி செம்பழுப்பு நிறத்தில் இருந்தது. உடனே தான் பெயர் வைக்க முடிவெடுத்தது மிகச் சரி என்ற முடிவுக்கு வந்தார்.

இதைச் சொன்னபோது மனைவிக்கு விருப்பமில்லை. சையதின் பெற்றோரும் இஸ்லாமியப் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று சொன்னார்கள். சையத் கேட்கவில்லை. அதனால் இஸ்லாமிய குருமாரிடம் அழைத்துச் சென்றனர். அவர் வேறு மதப் பெயரை வைப்பது இஸ்லாமை அவமதிப்பது என்றார். ஆனாலும் தன் கொள்கையில் உறுதியாக இருந்தார் இவர். நாட்கள் செல்லச் செல்ல ஓர் அமெரிக்கரின் பெயர் மகனுக்கு வைத்துவிட்டதால், வாழும் சூழலே மோசமாக்கிக்கொண்டே சென்றது. உடனே வேலையை உதறிவிட்டு, காபூலில் குடியேறினார் சையத்.

இது குறித்து அவர் அந்நாட்டு செய்தி தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், "நான் நிறைய ஆராய்ச்சிகள் செய்து, உத்வேகம் பெற்றுதான் என் மகனுக்குப் பெயரைச் சூட்டினேன். ட்ரம்ப்பை மிகவும் நேசிக்கிறேன். பொருளாதாரத்தில் அவர் மிகச் சிறந்தவர். உலகைக் கலக்கி வருகிறார். அதனால் நான் அவரை மிகச் சிறந்த மனிதராகக் கருதுகிறேன். நான் ஒவ்வொரு தடவை ட்ரம்ப் என்று கூப்பிடும்போதும் என் அப்பா மிகவும் கோபமடைகிறார். அவரால் இந்தப் பெயரைச் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. சென்ற வாரம் ஒரு கூட்டம் வந்து இந்தப் பெயருக்காகவே எங்களை மிரட்டிச் சென்றது.

என் மனைவி ஃபேஸ்புக்கில் குழந்தையின் பெயரைப் பயன்படுத்தும்போது மிக மோசமான பின்னூட்டங்கள் இடப்படுகின்றன. சிலர் மிரட்டவும் செய்கிறார்கள். மிக மோசமான ஒரு மனிதரின் பெயரை எப்படிக் குழந்தைக்கு வைத்தீர்கள் என்று கேட்காதவர்களே கிடையாது. குடும்பத்தினர் எப்போதும் அச்சத்தில் இருக்கிறார்கள். என்ன ஆனாலும் சரி, குழந்தையின் பெயரை மாற்றுவதாக இல்லை. நான் பெற்ற குழந்தைக்கு எனக்குப் பிடித்த பெயரைக் கூட வைக்க முடியவில்லை என்றால் அநியாயம் இல்லையா? என் குழந்தை வளர்ந்து, தன் பெயரை மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளட்டும். அதுவரை டொனால்ட் ட்ரம்ப் என்ற பெயரே இருக்கட்டும்" என்கிறார் சையத்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.