புத்தகப் புழுவான பகத் சிங்!

  திஷா   | Last Modified : 27 Sep, 2018 05:16 pm
bhagat-singh-birthday

புத்தகப்பிரியர் 

புத்தகப்பிரியரியரான பகத்சிங், தன்னுடைய பள்ளித்தோழர் ஜெய்தேவ் கபூருக்கு எழுதிய கடிதத்தில், கார்ல் லிப்னேக்கின் "மிலிட்ரியிஸம்", லெனினின் "இடதுசாரி கம்யூனிசம்", அப்டன் சின்க்லேயரின் "தி ஸ்பை" (உளவாளி) ஆகிய புத்தகங்களை குல்வீரிடம் கொடுத்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பகத்சிங்கின் சிறை தண்டனை பாதி முடிந்துவிட்டது. அவருடைய அறை எண் 14 - ன் தரை, புல் முளைத்த கட்டாந்தரை. ஐந்து அடி, பத்து அங்குல உயரம் கொண்ட பகத்சிங், படுக்கும் அளவிலான அறை அது.

பகத்சிங்கை தூக்கில் இடுவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு, அவருடைய வழக்கறிஞர் பிராண்நாத் மெஹ்தா சிறைக்கு வந்தார். அப்போது, கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கம் போன்று பகத்சிங் காணப்பட்டதாக பின்னர் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

பகத்சிங் புன்னகையுடன் மெஹ்தாவை வரவேற்று, "ரெவல்யூஷனரி லெனின்" புத்தகத்தை கொண்டு வரவில்லையா?" என்று கேட்டாராம்! அந்த புத்தகத்தை மெஹ்தா பகத்சிங்கிடம் கொடுத்ததும் அதை உடனே ஆர்வமாக படிக்கத் தொடங்கிவிட்டாராம் பகத்சிங்! இரண்டு மணி நேரத்தில் உயிர் போய் விடுமே என்ற கலக்கம் கடுகளவு கூட இல்லாமல் அந்த நிலையிலும் புத்தகப் புழுவாகவே இருந்திருக்கிறார் பகத்சிங். 

தொடர்ந்து பேசிய மெஹ்தா, நாட்டிற்காக எதாவது செய்தி சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, புத்தகத்தில் இருந்து கண்ணை விலக்காமல் பகத்சிங் சொன்ன இரண்டு விஷயம், "ஏகாதிபத்தியம் ஒழிக.... இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக)".

தூக்குமேடை 

தூக்கிலிடுவதற்கு முன்பு வரை பகத்சிங் படித்துக் கொண்டிருந்த புத்தகம் லெனின் எழுதிய 'அரசும் புரட்சியும்'. லெனினை பகத்சிங் உயிரினும் மேலாக நேசித்தார்.  

நாத்திகனாக இருந்த பகத்சிங், "என் வாழ்க்கை முழுவதும் நான் கடவுளை நினைக்கவில்லை. உண்மையில், ஏழைகளின் துயரங்களை பார்த்து, கடவுளை நான் திட்டியிருக்கிறேன். அவர்களிடம் இப்போது நான் மன்னிப்பு கேட்க நினைத்தால், என்னை விட பெரிய கோழை வேறு யாரும் இருக்கமுடியாது. இவனுடைய இறுதி காலம் வந்துவிட்டதால், மன்னிப்பு கேட்கிறான் என்று நினைப்பார்கள்" என்றார். 

சிறைச்சாலையின் கடிகாரம் ஆறு மணியை காட்டியதும், கைதிகளின் ஓலக்குரல் தொலைவில் இருந்து கேட்டது. அன்றைக்கு பகத் சிங் கொஞ்சம் தாமதாக தான் தூக்கு மேடைக்கு வந்தார். 

"இன்குலாப் ஜிந்தாபாத்" என்றும், "இந்துஸ்தான் ஆஜாத் ஹோ" ("புரட்சி ஓங்குக, இந்தியா விடுதலை வேண்டும்") என்ற முழக்கங்கள் எழுந்தன. 

நாட்டிற்காகப் போராடியவர் தனது 24 வது வயதில் 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.

ஒரு போராளியின் வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல, அது மற்றவர்களுக்கான பாடமும் கூட. இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக பகத்சிங் வாழ்க்கை விளங்குகிறது. விடுதலைப் போராட்ட உணர்வுகளை இளைஞர்கள் மனதில் விதைத்திட, தன் உயிரையே தியாகம் செய்த மிகப் பெரிய போராளி அவர். அவர் வாழ்ந்த காலம் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம், ஆனால் அத்தனை குறுகிய காலத்திற்குள் மிகப் பெரிய வரலாறை உருவாக்கி விட்டுத்தான் அவர் சென்றிருக்கிறார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close