பாரம்பரியமிக்க பவானி ஜமக்காளம் 

  டேவிட்   | Last Modified : 16 Nov, 2018 02:28 pm

bhavani-floor-mattress

ஈரோட்டுக்கு அருகிலுள்ள பவானி நகரம் நெசவுத்தொழிலுக்கு புகழ்பெற்றதாகும். ஈரோடு மாவட்டம் பவானி, ஜமக்காள நகரம் எனவும் பெயர்பெற்றுள்ளது. இங்கு பல ஆண்டுகளுக்கு மேல் ஜமக்காளம் தொழில் நடைபெற்று வருகின்றது. இயந்திரத்தின் உதவியின்றி, கைகளால் தயார் செய்யப்படுவதே இதன் சிறப்பு. 1947ஆம் ஆண்டே ஜமக்காளத்திற்கான காப்புரிமையை பவானி பெற்று விட்டது. ஜமக்காளத்தை தமிழில் தரை விரிப்பு என அழைக்கப்படுகிறது. 

பவானி நகரைச் சுற்றி உள்ள குருப்பநாயக்கன் பாளையம் மற்றும் ஜம்பை போன்ற கிராமங்களில் தரை விரிப்பு நெசவு நடைபெறுகிறது. பவானி கைத்தறி தரை விரிப்பு என்பவை பவானி கைத்தறி ஜமக்காளம், பவானி கைத்தறி ஜமுக்காளம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. படுக்கை விரிப்புகள் மிகவும் தடிமனானவை. சாயம், நெசவு, வடிவமைப்பு எல்லாம் ஒரு கைவினை மரபைப் பின்பற்றி தயாரிக்கப்படுகின்றன. இவை நூல் மற்றும் கம்பளி நூல்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் பவானி தரை விரிப்பு என்பது பார்த்தவுடன் பவானி கைத்தறி ஜமுக்காளம் (ஜமக்காளம்) என்று கண்டுபிடித்துவிடலாம்.

பவானி நகரம் சுற்றிலும் உள்ள கிராமத்தில் தரை விரிப்பு நெய்யும் பல கைதறிகள் இயங்குகின்றன.  தரை விரிப்பு நெசவு பணிகளில் பல குடும்பங்கள் ஈடுபடுகின்றன. இவற்றில்  குறிப்பாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் ஈருபட்டு வருகின்றனர். இந்த நெசவு பணிக்கு பல ரகங்கள் உடைய நூல்களை பயன்படுத்துகின்றனர். பருத்தி, அக்ரலின், ஆட்ஸ் சில்க் ஆகிய மூன்று ரகங்களில் தரை விரிப்பு தயாரிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 20க்கு 20 அங்குலம் முதல் 16க்கு 30 அடி வரை தயாரிக்கப்படுகிறது. இதில் தனி நபர், இருவர், மூவர், நால்வர் என நாம் கேட்கும் அளவிற்கு தயாரித்து கொடுக்கின்றனர். இங்கு  தரை விரிப்பு தினமும் ஆயிரம் கணக்கில் தயாரிக்கபடுகிறது.

பவானி ஜமக்காளம் தமிழ் நாட்டில் மட்டுமில்லாது ஆந்திரா, கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராட்டிரம் மற்றும் பிறநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நூல் நெசவு, சாயம் மற்றும் வடிவமைப்புகள் தொடர்ந்து நவீனப்படுத்தப்பட்டு வந்தாலும் இவ்விரிப்புகளின் அடிப்படை மரபுகள் இது வரை மீறப்படவில்லை. இன்றும் கிராமத்தில் நடக்கும் திருமணம், வளைக்காப்பு, காதுகுத்து போன்ற சடங்குகள் நடைபெறுமிடங்களில் பவானி ஜமாக்காளம் இடம் பெற்றிருக்கும். அவை மரபின் சின்னங்களாகக் மக்களால் கருதப்படுகின்றன.

பட்டு ஜமக்காளங்கள் இயற்கை காட்சிகள் மற்றும் சிறந்த கலைநயத்துடன் தயாரிக்கப்பட்டு, தனி சிறப்புடன் விற்பனைக்கு வரத்தொடங்கியதால்,  தமிழகம் மற்றும் வெளிமாநிலத்தில்  உள்ள மக்களிடம் இடம் பிடித்த கைத்தறி ஜமக்காளம், காலப்போக்கில் மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து குறைவான விலையில் கார்பெட் ஜமக்காளங்கள் தமிழகத்தில் நுழைந்தாலும், ஆட்கள் பற்றாகுறையினாலும்  பவானி ஜமக்காள விற்பனை படிப்படியாக குறைய துவங்கியது என்றும், புதிய தலைமுறையை சேர்ந்த தொழிலாளர்கள் ஜமக்காளம் நெய்வதற்கு ஆர்வம் காட்டாத போக்கு காணப்படுகிறது என சொல்லப்படுகிறது. இன்றும் நாம் பார்த்தால்  பழைய தலைமுறையை சேர்ந்தவர்கள் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களால்தான் பாரம்பரிய ஜமக்காளங்களை இன்னும் நாம் பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது

இந்த தொழில் இனி அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் கைத்தறி நெசவாளர்கள் வைக்கும் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி நாள் மட்டுமே  ஜமக்காளம் நெய்தல் தொழில் உயிர்ப்புடன் நீடித்திருக்கும் என்ற நெசவாளர்களின் கருத்து நியாயமானதே.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.