மூழ்கவே மூழ்காது... என்று சொல்லப்பட்ட டைட்டானிக் மூழ்கிய நாள் இன்று!

  Padmapriya   | Last Modified : 15 Apr, 2018 07:46 am

நாள்: ஏப்ரல் 15, 1912
இடம்: வட அட்லாண்டிக் பெருங்கடல் வழியே சவுத்தாம்ப்டனிலிருந்து நியூ யார்க் நகரம் நோக்கி சென்றபோது.


வரலாற்றில் இடம்பெற்ற கருப்பு தினங்களில் ஒன்றாக டைட்டானிக் கப்பல் மூழ்கிய சம்பவம் பதிவாகிவிட்டது. டைட்டானிக் கப்பல் மூழ்கி நூறாண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டாலும், அதை பற்றிய செய்திகள் இன்னமும் முக்கியத்துவம் பெறுவதாக அமைகின்றது. அனைத்துக்கும் காரணம் அதன் பிரம்மாண்டம், அதற்கு இணையான மிகப் பெரிய விபத்தும், உயிர் பலியும் தான்.

உலக வரலாற்றில் மிக மோசமான கடல் விபத்து...டைட்டானிக் மூழ்கி 1,517 பேர் பலியாகினர். இன்றளவிலும் இந்த விபத்து தான் கடலில் ஏற்பட்ட மிக மோசமான விபத்து. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 15 நாளை டைட்டானிக் நினைவு தினமாக உலகம் முழுவதும் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மூ‌ழ்கவே ‌மூ‌ழ்காது எ‌ன்ற முழ‌க்க‌த்துட‌ன், இங்கிலாந்து நாட்டில் உள்ள லிவர்பூலிலிருந்து புறப்பட்ட டைட்டானிக் சொகுசு சுற்றுலா கப்பலின் முதல் பயணமே முடியவில்லை.

ஏன் மூழ்கியது?
கப்பல் சரியான காலநிலையில் தன் பயணத்தைத் தொடங்கவில்லை என்றும், கேப்டனின் அவசரத்தினால் தான் கப்பல் பனிப்பாறையில் மோதியது என காரணம் சொல்லப்படுகிறது. படத்திலும் இப்படி தான் பார்த்திருக்கிறோம். ஆனால், உண்மையில் விபத்துக்கான காரணம் என்னவென்று இன்றுவரை ஆராய்ச்சிகள் நடந்துகொண்டே வருகின்றன.

செனான் மொலாணி, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக டைட்டானிக் கப்பலைப் பற்றி, ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தார். ஆராய்ச்சியின் முடிவில், 'கப்பல் தனது பயணத்தைத் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு... கப்பலில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்துதான் இந்தப் பேரழிவுக்குக் காரணம்' என்று குறிப்பிட்டு இருந்தார். டைட்டானிக் கப்பல் குறித்த அறிக்கையில், கப்பல் தனது முதல் பயணத்தைத் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பே கப்பலின் மத்தியப் பகுதியில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்தப் பகுதியானது அதிக வெப்பத்தினால் 75 சதவிகிதத்துக்கும் மேல் பலவீனமாக இருந்துள்ளது.

அந்தக் கப்பலின் உரிமையாளர் பயணிகளிடத்தில் மறைத்துள்ளார். இதுபற்றி தெரியவந்தால், இவ்வளவு பெரிய பொருட்செலவில் உருவான அந்தக் கப்பலில் யாரும் பயணிக்க மாட்டார்கள் என்பதாலும், அதனால் நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்பதாலுமே அவர், இந்த தீ விபத்தைப் பயணிகளிடமிருந்து மறைத்திருக்க வேண்டும் என்று அவரது அறிக்கையில் கூறப்பட்டது.

இந்தக் கோர விபத்துக்கு ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும், வரலாற்றின் எந்த வருடம் சென்று திரும்பி பார்த்தாலும் டைட்டானிக் விபத்து என்றுமே அழியாத வடுதான்!

டைட்டானிக்கின் கடைசி புகைப்படம். பயணம் ஆரம்பித்தபோது எடுக்கப்பட்டதாம்.

நிஜத்தில் டைட்டானிக்கின் பிரம்மாண்டம்..

கடல் ராணி என்று தான் டைட்டானிக் கப்பல் அழைக்கப்பட்டது. 3,547 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டது. முதல் பயணத்திலேயே விபத்தை சந்தித்த அந்த கப்பலில் பணியாளர்கள், பயணிகள் உள்பட மொத்தம் 2,223 பேர் பயணித்தனர். உயிர்காக்கும் படகுகள் மூலம் 706 பேர் வரை மட்டுமே உயிர் தப்பினர். மீதமுள்ள 1,517 பேர் கடல் மூழ்கி பலியாகினர். கடல் நீரின் வெப்பநிலை மைனஸ் 2 டிகிரிக்கும் குறைவாக இருந்ததே பலர் உயிரிழக்க காரணம்.
டைட்டானிக் கப்பலில்தான் முதன்முறையாக தொலைபேசி வசதியுடன், மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.
டைட்டானிக் கப்பலின் நீராவி எஞ்சின்களை இயக்குவதற்கு ஒரு நாளைக்கு 800 டன் நிலக்கரி தேவைப்பட்டது. இதற்காக ஒரு மலையே அழித்து நிலக்கரி சுரண்டி சேமிக்கப்பட்டது.
புகைப்போக்கி குழாயின் உயரத்தை சேர்த்து அளவிடும்போது டைட்டானிக் கப்பல் 17 அடுக்குகள் கொண்ட கட்டிடத்திற்கு இணையாக நின்றது.

இதன் நீளமோ, மூன்று கால்பந்து மைதானத்திற்கு இணையானது. மணிக்கு 23 நாட்டிக்கல் மைல் வேகம், அதாவது மணிக்கு 43 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. விபத்துக்குள்ளானபோதும், அதிகபட்ச வேகத்தில் சென்றதாலேயே பனிப்பாறைகள் இருப்பது தெரிந்தும் கப்பலை நிறுத்த இயலாமல் போனதாக கூறுவர்.
டைட்டானிக் கப்பலில் 4 லிஃப்ட்டுகள், தண்ணீரை வெப்ப மூட்டும் வசதி கொண்ட நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம், 2 நூலகங்கள் மற்றும் 2 முடிதிருத்தும் நிலையங்கள் இருந்தன.

விருந்தும் டிக்கெட்டும்

நாள் ஒன்றுக்கு பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு 53,000 லிட்டர் குடிநீர் தேவைப்பட்டது. டைட்டானிக் கப்பல் மூன்று வகுப்புகள் கொண்டது. அதில், முதல் வகுப்பில் பயணம் செய்வதற்கான டிக்கெட் கட்டணத்தை இப்போதைய மதிப்புக்கு ஒப்பிட்டால் 99,000 டாலர் ஆகும். இந்திய மதிப்பில் 50 லட்சத்துக்கும் அதிகம்.
நாள் ஒன்றுக்கு 86,000 பவுண்ட் இறைச்சி, 40,000 முட்டைகள், 40 டன் உருளைக் கிழங்கு, 7,000 முட்டைகோஸ்கள், 3,500 பவுண்ட் வெங்காயம், 36,000 ஆப்பிள்கள் மற்றும் 1,000 பிரெட் பாக்கெட்டுகள் ஆகியவை பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு உணவுப் பொருட்களாக தேவைப்பட்டது.

கடைசி டைட்டானிக் பயணி

டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவர்களில் உயிருடன் இருந்த கடைசி பயணி தான் மில்லிவினா டீன். படகு மூலம் தப்பிப்பிழைத்த அவர் இங்கிலாந்து நாட்டுக்கு வந்து சேர்ந்தார். மில்லிவினா டீன் இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகரில் தான் கடைசி வரை வாழ்ந்து வந்தார். அவர் தான் இந்த கப்பலில் பயணம் செய்தவர்களில் கடைசியாக உயிர் வாழ்ந்தவர். இவர் மரணம் அடையும்போது அவருக்கு வயது 97.
அதாவது டைட்டானிக் கப்பல் கடலில் பயணத்தை தொடங்கிய 98-வது ஆண்டு தினத்தன்று இவரும் மரணித்தார். பயணத்தின் போது கை‌க்குழ‌ந்தையாக இரு‌ந்த காரண‌த்தா‌ல், டை‌ட்டா‌னி‌க் க‌‌ப்ப‌லி‌ல் பயண‌ம் செ‌ய்தது ப‌ற்‌றி எந்த ஞாபகமும் அவருக்கு இல்லை.

டைட்டானிக் 'வியாபாரம்'
கப்பலின் பாகங்கள் 12000 அடி ஆழத்தில் மண்ணில் புதைந்தன. முதலில், 1985-ல் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பாலர்டு, பிரான்ஸை சேர்ந்த ஜீன் லூயிஸ் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வால் கப்பலின் உதிரிபாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த பாகங்களை எடுத்த போட்டோ ஒன்று மட்டுமே பல கோடிக்கு விற்பனையானது.

சுவாரசியமான இதன் கதையை வைத்து பல ஆவணப்படங்களும், கதைகளும், சினிமாக்களும் வெளிவந்தன. 1997ம் ஆண்டு இச்சம்பவத்தை அடிப்படையாகவும் காதலை மையமாகவும் கொண்டு, ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் காமரூன், டைட்டானிக் என்ற படத்தை தயாரித்தார். கப்பலையும், விபத்தையும் நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வை இந்த படம் ஏற்படுத்தியது.
இப்படம் வசூலை வாரிக் குவித்தது மட்டுமல்லாமல் 11 ஆஸ்கர் விருதுகளையும் வென்றது. அதோடு இல்லாமல், கப்பலின் நூறாவது ஆண்டை கொண்டாடும் வகையில், இந்த படம் மீண்டும் 3டி தொழில்நுட்பத்தில் மாற்றி அமைக்கப்பட்டு, மீண்டும் வசூல் கட்டியது. இன்றளவும் டைட்டானிக்கின் எச்சங்கள் பல கோடி டாலர்களுக்கு ஏலம் போவது குறிப்பிடத்தக்கது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.