'இந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை' ஹோமி பாபாவின் நினைவு தின பகிர்வு!

  முத்துமாரி   | Last Modified : 24 Jan, 2018 01:04 pm

இந்தியாவின் அணுசக்தி துறைக்கு வித்திட்ட ஹோமி ஜஹாங்கிர் பாபாவின் நினைவு தினம் இன்று! அவர் இந்திய அணு சக்தி துறையில் செய்த சாதனைகளை சுருக்கமாக காணலாம்.

'இந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை' என்றழைக்கப்படும் ஹோமி பாபா 1909ம் ஆண்டு அக்டோபர் 30ம் நாள் மும்பையில் ஒரு வசதியான வீட்டில் பிறந்தார். அவரை ஒரு பொறியிலாளராக ஆக்குவதே அவரின் தந்தை ஜஹாங்கிர் பாபாவின் கனவாக இருந்தது. தாயார் மெஹ்ரானும் அவருக்கு உறுதுணையாக இருந்தார்.

மும்பையில் பள்ளி படிப்பை முடித்த அவருக்கு கணிதம் மற்றும் இயற்பியல் துறையில் அதிக நாட்டம் இருந்தது. எனவே ராயல் அறிவியல் நிறுவனத்தில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றார். பின்னர் தந்தையின் விருப்பத்திற்கேற்ப இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்று 1930ல் பொறியியல் பட்டம் பெற்றார்.

பாபா எப்போதும் எதையாவது சிந்தித்துக்கொண்டே இருப்பவர். அவரின் அடுத்த நோக்கம் ஜாம்ஜெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் நிறுவனத்தில் சேர வேண்டும் என்பது. பட்டம் பெற்றதையடுத்து இயற்பியல் துறையில் காமா கதிர்களை குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு அதற்கான அறிக்கையை சமர்ப்பித்தார். அவரின் ஆராய்ச்சி சாதனைக்காக ஐசக் நியூட்டன் படிப்புதவி கிடைத்தது. இதனால் 1934ல் அவர் இயற்பியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார். அப்போது உலகப் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர்களான நீல்ஸ் போர், ஃபெர்மி, பாலி ஆகியோரின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. அவர்களுடைய ஆராய்ச்சியிலும் முக்கிய பங்காற்றினார்.

இயற்பியல் என்றாலே 'கோட்பாடு அறிவியல்' என்று கூறிய அந்த காலத்தில் 'அணு இயற்பியல்' என்ற அதிநவீன துறையை அறிமுகப்படுத்தியவர் பாபா. தன்னிகரற்ற அணு விஞ்ஞானியாக செயல்பட்டு வந்தார். பின்னர் எலக்ட்ரான், பாசிட்ரான் துகள்கள் குறித்து ஆராய்ச்சி செய்தார். சர்.சி.வி.ராமன் தலைமையில் இருந்த இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்தில் 1940களில் பணியாற்றினார்.

பாபாவின் முயற்சியால் இந்தியாவின் முதல் அணுசக்தி மையமான டாடா அணு ஆராய்ச்சி கழகம் 1945ல் அமைக்கப்பட்டது. தொடர்ந்து இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, அணு ஆற்றலின் முக்கியத்துவத்தை இந்திய அரசுக்கு எடுத்துரைத்தார். அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவும் அவருடைய திறமையை புரிந்துகொண்டு அவருக்கு ஆராய்ச்சி செய்ய அனுமதி அளித்தார்.

தொடர்ந்து பாபாவுக்கும், நேருவுக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இந்திய அரசின் உதவியினால் பாபா, அணுசக்தி துறையை மேம்படுத்தினார். 1948ல் இந்திய அணு ஆற்றல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டு அதன் முதல் தலைவராக பாபா பொறுப்பேற்றார். அவரது திறமையான வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவிப்பினால் ஆசியாவின் முதல் அணு உலை மும்பையில் உள்ள டிராம்பேயில் 1956ல் இயக்கப்பெற்றது.

ஆக்கப்பூர்வமாகவும், அமைதியாகவும் அணு ஆயுத தயாரிப்பு குறித்து முதல் முறையாக ஜெனிவாவில் நடந்த ஐ.நா மாநாட்டில் விளக்கினார். அணு ஆயுதத்தை அமைதிப்பணிக்காக பயன்படுத்தலாம் என எடுத்துரைத்தார். தொடர்ந்து அணுகுண்டு வெடிப்பு சோதனைக்கான ஆரம்பகட்ட முயற்சிகளை இந்தியாவில் விஞ்ஞானிகளின் துணையுடன் மேற்கொண்டார்.

விக்ரம் சாராபாய்-உடன் இணைந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்திலும் தன் திறமையை காட்டினார். 1966ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று ஒரு சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்று கொண்டிருந்தபோது அவர் பயணித்த விமானம் சுவிட்சர்லாந்து பகுதியில் விழுந்து நொறுங்கியதில் பாபா அகால மரணமடைந்தார்.

இன்று இந்தியாவில் இருக்கும் பல அணு உலைகள், அணு ஆற்றல் நிலையங்கள் ஆகியன அவர் முயற்சியால் தோன்றியவையே. இந்தியா அணு ஆற்றலிலும், அணு ஆயுத சோதனையிலும் சிறந்து விளங்க வித்திட்டவர் பாபா. அவரின் ஈடு இணையற்ற திறமையை பாராட்டி இந்திய அரசு 1954ல் பத்ம பூஷண் விருது அளித்து சிறப்பித்தது. இதுதவிர அவருக்கு மேலும் பல சர்வதேச விருதுகளும் வழங்கப்ட்டது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close